அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கியை “சர்வாதிகாரி” என்று அழைத்துள்ளது, இருநாட்டு தலைவர்களுக்கும் இடையே உள்ள பிரச்னையை ஆழப்படுத்தியுள்ளது.
ரஷ்யா-யுக்ரேன் போர் தொடர்பாக சௌதி அரேபியாவில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கடந்த வாரம் டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்த பேச்சுவார்த்தையில் யுக்ரேன் தவிர்க்கப்பட்டுள்ளது என்ற விமர்சனத்தை ஸெலன்ஸ்கி முன்வைத்திருந்தார்.
மேலும் டிரம்ப், ‘ரஷ்யாவால் நிர்வகிக்கப்படும் தவறான தகவல்களின் மத்தியில்’ வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று ஸெலன்ஸ்கி விமர்சித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, டிரம்ப் ஸெலன்ஸ்கியை “சர்வாதிகாரி” என்று அழைத்துள்ளார்.
அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் சௌதி அரேபியா நடத்திய முதலீட்டு மாநாட்டில் பேசிய டிரம்ப், “ஜோ பைடனை ஒரு ஃபிடிலை (இசைக்கருவி) இசைப்பது போன்று இசைக்கவே ஸெலன்ஸ்கிக்கு திறமையிருக்கிறது,” என்று கூறினார்.
டிரம்ப், ஸெலன்ஸ்கியை “சர்வாதிகாரி” என்று அழைத்தது ஐரோப்பிய தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் ஆட்சித் துறைத் தலைவர் ஓலாஃப் ஷோல்ட்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய தலைவர்கள் தங்களின் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
“அதிபர் ஸெலன்ஸ்கியின் ஜனநாயக மாண்பை புறக்கணித்து கருத்து தெரிவிப்பது மிகவும் தவறானது, அபாயகரமானதும் கூட,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கியை "சர்வாதிகாரி" என்று அழைத்துள்ளார்
ஐரோப்பிய நாட்டுத் தலைவர்கள் கண்டனம்
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் தன்னுடைய ஆதரவை ஸெலன்ஸ்கிக்கு தெரிவிப்பதை உறுதி செய்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஸெலன்ஸ்கியை அலைபேசியில் அழைத்து பேசியுள்ளார் ஸ்டார்மெர்.
“ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட யுக்ரேன் தலைவரான ஸெலன்ஸ்கிக்கு ஆதரவு அளிப்பதாக பிரதமர் பேசியுள்ளார்,” என்று பிரிட்டன் அரசாங்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
“போர் காலங்களில் தேர்தல்களை ஒத்திவைப்பது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணமாக உள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டனும் தேர்தலை நடத்தவில்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.
ஸெலன்ஸ்கியின் ஐந்து ஆண்டுகால ஆட்சியானது கடந்த ஆண்டு மே மாதத்தோடு முடிவுக்கு வந்தது. ஆனால், 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா, யுக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பில் ஈடுபட்டது. அதனைத் தொடர்ந்து, யுக்ரேனில் ராணுவச் சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே தேர்தல்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் க்றிஸ்டெர்சன் டிரம்பின், ‘சர்வாதிகாரி’ எனும் வார்த்தை பிரயோகத்தை கடுமையாக சாடினார். ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னலேனா பேர்போக் டிரம்பின் விமர்சனத்தை ‘அபத்தம்’ என்று கூறினார்.
“உண்மையில் ஒரு ட்வீட் பதிவிடுவதற்கு பதிலாக உலக எதார்த்தத்தை கொஞ்சம் நீங்கள் பார்த்தால் ஐரோப்பாவில், சர்வாதிகாரத்தின் கீழ் வசிக்கும் ஐரோப்பிய மக்கள் யார் என்று உங்களுக்கு தெரிந்துவிடும். ரஷ்ய மக்களும் பெலாரூஸ் மக்களும் தான் அவர்கள்,” என்று ஜெட்.டி.எஃப் செய்தி நிறுவனத்திடம் கூறினார் அன்னலேனா.
ஏற்கெனவே ட்ரூத் சோசியல் எனும் தன்னுடைய சமூக வலைதளத்தில் ‘சர்வாதிகாரி’ என்று ஸெலன்ஸ்கியை விமர்சனம் செய்த டிரம்ப் மீண்டும் ஃப்ளோரிடாவில் பேசும்போது அதே வார்த்தையை பிரயோகித்தார்.
“அவர் தேர்தலை நடத்த மறுத்துவிட்டார். யுக்ரேனில் தேர்தல் கருத்துக்கணிப்பில் அவர் மிகவும் பின்தங்கியுள்ளார். ஒவ்வொரு நகரமும் அழிக்கப்பட்டு வருகின்ற நிலையில் நீங்கள் எப்படி அதில் முன்னணியில் செயல்படக் கூடும்,” என்று ட்ரம்ப் கேள்வி எழுப்பினார்.
யுக்ரேனில் இருக்கும் அரிய தாதுவளத்தை பெறுவதற்கான அவருடைய முயற்சி குறித்து மேற்கொண்டு பேசிய அவர், ஸெலன்ஸ்கியின் அரசு அந்த ஒப்பந்தத்தை உடைத்தது என்று கூறினார்.
ஏற்கெனவே தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், “ஸெலன்ஸ்கி மோசமான பணியை செய்துள்ளார். அவருடைய நாடு தகர்க்கப்பட்டுள்ளது. ‘பல லட்சக்கணக்கானவர்கள்’ தேவையின்றி இறந்துள்ளனர்” என்று குறிப்பிட்டதையே அவரின் இந்த பேச்சு பிரதிபலித்தது.
அதே நேரத்தில் அவர், “அமெரிக்கா போரை நிறுத்துவது தொடர்பாக ரஷ்யாவுடன் வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது,” என்றும் கூறினார்.
ஸெலன்ஸ்கியின் ‘தவறான தகவல்கள்’ என்ற விமர்சனத்துக்கே டிரம்ப் இவ்வாறு பதில் அளித்துள்ளார் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா போர் தொடங்கிய பின், முதல்முறையாக செவ்வாய்க்கிழமை அன்று (பிப்ரவரி 18) ரஷ்யா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் உயர்மட்ட ஆலோசனையை நடத்தினார்கள்.
யுக்ரேன் அதிபர் டிரம்பை விமர்சித்ததை தொடர்ந்து டிரம்ப் ஸெலன்ஸ்கியை சர்வாதிகாரி என்று அழைத்துள்ளார்
போரை ஆரம்பித்தது யுக்ரேன் தான் என பேசிய டிரம்ப்
பிபிசியிடம் பேசிய யுக்ரேனின் முன்னாள் பிரதமர் அர்சென்யி யட்சென்யூக், “ஸெலன்ஸ்கி முழுமையாக சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அதிபர் தான்,” என்று கூறினார். மேலும், “ராணுவச்சட்டம் அமலில் இருக்கும்போது தேர்தல்களை எங்களால் நடத்த இயலாது,” என்று கூறினார்.
தற்போது யுக்ரேனில் நடைபெற்று வரும் போருக்கு அந்த நாடு தான் காரணம் என்று ஃப்ளோரிடாவில் செவ்வாய்க்கிழமை அன்று டிரம்ப் பேசியது தான் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே வார்த்தைப் போர் ஏற்படக் காரணமாக அமைந்தது.
ஏமாற்றப்பட்டதாக உணரும் யுக்ரேனியர்களுக்கு நீங்கள் கூற விரும்பும் செய்தி என்ன என்ற கேள்வியை பிபிசி டிரம்பிடம் கேட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “அவர்கள் வருத்தம் அடைந்துள்ளனர் என்று நான் கேள்விப்பட்டேன். அவர்களுக்கு தலைமை இல்லை என்று அவர்கள் வருத்தத்தில் உள்ளனர். ஆனால் மூன்று ஆண்டுகள் அவர்களுக்கு தலைமை இருந்தது. அதற்கு முன்பும் அவர்களிடம் தலைமை இருந்தது. இந்த பிரச்னைக்கு மிக எளிதில் தீர்வு கண்டிருக்கலாம்,”என தெரிவித்தார்.
“இதனை (போரை) நீங்கள் ஆரம்பித்திருக்கக் கூடாது. நீங்கள் ஏதாவது ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டிருக்க வேண்டும்,” என்றும் டிரம்ப் கூறினார்.
ஆனால் 2022-ஆம் ஆண்டு புதின் தான் யுக்ரேன் மீது படையெடுக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தார் என்பதை டிரம்ப் தெரிவிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, புதன்கிழமை அன்று டிரம்பின் கருத்துகளுக்கு பதில் அளித்த ஸெலன்ஸ்கி “நாங்கள் திரிக்கப்பட்ட பல செய்திகளைக் கேட்டுக்கொண்டிருக்கின்றோம். அது ரஷ்யாவில் இருந்து வருகிறது. அனைத்து மரியாதைக்கும் உரிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு தலைவராக…. தவறான தகவல்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்,” என்று கூறினார்.
தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா புதினுக்கு உதவி செய்கிறது என்றும் தான் நம்புவதாக ஸெலன்ஸ்கி கூறுகிறார்.
புதின் பக்கமா அல்லது அமைதியின் பக்கமா என்ற இரண்டில் ஒன்றை தேர்வு செய்வதற்கான நிபந்தனையை உலக நாடுகள் சந்தித்தன என்றும் அதே நாளில் ஸெலன்ஸ்கி தெரிவித்தார். இன்று அவர் யுக்ரேனுக்கான அமெரிக்க தூதுவரான கெய்த் கெலோக்கை சந்திக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
2022-ஆம் ஆண்டு புதின் தான் யுக்ரேன் மீது படையெடுக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தார் என்பதை டிரம்ப் அந்த நிகழ்வில் தெரிவிக்கவில்லை
ரஷ்யா மீது பொருளாதாரத் தடையை தீவிரப்படுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்
யுக்ரேனின் அரிய தாதுவளங்களை அணுக மேற்கொண்ட டிரம்பின் முயற்சிகளையும் ஸெலன்ஸ்கி நிராகரித்தார். இதற்கு மாறாக எந்த விதமான பாதுகாப்பு உத்தரவாதங்களையும் அமெரிக்கா எங்களுக்கு வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.
யுக்ரேன் அதிபரை 4% மக்கள் மட்டுமே நம்புகின்றனர் என்று கூறி, ஸெலன்ஸ்கிக்கு இருக்கும் புகழை ஒரு பிரச்னையாக மாற்ற டிரம்ப் முயற்சி செய்துள்ளார். ஆனால் பிபிசி வெரிஃபை, சமீபத்தில் நடத்திய கருத்துக்கணிப்பில், யுக்ரேனில் உள்ள 57% மக்கள் ஸெலன்ஸ்கியை நம்புவதாக தெரிவித்தனர் என்ற அறிக்கையை வெளியிட்டது.
ட்ரூத் சோசியலில் டிரம்ப் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ஐரோப்பாவையும் தாக்கி பேசியுள்ளார். “யுக்ரேனில் நடைபெறும் போர் நம்மைக் காட்டிலும் ஐரோப்பாவுக்கு தான் முக்கியமானது. நம்மை அதில் இருந்து பிரிக்க ஒரு பெரிய கடலே நடுவில் உள்ளது” என்று கூறினார்.
மேலும், ஐரோப்பா அந்த பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட தவறிவிட்டது என்றும் கூறினார்.
இந்த வார்த்தைப் போருக்கு நடுவே, செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய புதின், டிரம்பை மகிழ்ச்சியுடன் சந்திக்க இருப்பதாக தெரிவித்தார்.
தொடர்ச்சியாக ரஷ்யா மீது பொருளாதார தடை தீவிரப்படுத்தப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய அலுமினியம் மற்றும் சட்டத்துக்கு புறம்பாக கச்சா எண்ணெயை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் கப்பல்களை குறிவைத்து இந்த பொருளாதார தடை செயல்பாட்டுக்கு வர உள்ளது. மேலும் ஸ்விஃப்ட் பணப்பரிமாற்ற முறையில் இடம்பெற்றுள்ள ரஷ்ய வங்கிகளுக்கும், ஐரோப்பாவில் ஒளிபரப்பாகும் ரஷ்ய ஊடகங்களின் செயல்பாடுகளுக்கும் தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு