‘எந்திரன்’ திரைப்படம் கதை திருட்டு புகார் விவகாரத்தில் பிரபல இயக்குனர் ஷங்கரின் ரூ.10.11 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது என்று செய்தி வெளியிட்டுள்ளது.

2010-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் – ஐஸ்வர்யா ராய் நடித்த எந்திரன் திரைப்படம் உலகளவில் திரையிடப்பட்டு ரூ. 290 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து சாதனை படைத்தது.

எந்திரன் திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று கூறி எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார்.

“இந்த நாவல் கதையை திருடித்தான் ஷங்கர் ‘எந்திரன்’ படத்தை இயக்கி உள்ளார். எனவே காப்புரிமை சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்ததாக அச்செய்தி கூறுகிறது.

இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டது அமலாக்கத்துறை. “விசாரணையில் ‘எந்திரன்’ திரைப்படத்தின் பணிகளுக்காக ஷங்கர் ரூ. 11.50 கோடி சம்பளம் பெற்றிருப்பது தெரிய வந்தது. எந்திரன் மற்றும் ஆரூர் தமிழ்நாடன் புத்தகமான ஜூகிபாவை ஒப்பிட்டு ஆய்வு செய்து இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் எந்திரன் திரைப்படம் ஜூகிபா நாவலை தழுவி எடுக்கப்பட்டிருப்பது உறுதியானது.

இதனைத் தொடர்ந்து, ஷங்கர் காப்புரிமை சட்டத்தை மீறி இருப்பதால் அவருக்கு சொந்தமான ரூ. 10.11 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை நேற்று அமலாக்கத்துறை முடக்கியது” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply