“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டு பௌர்ணமி தினங்களுக்குள் பாதாள உலகக்குழுக்கள் உட்பட போதைப்பொருள் வலையமைப்புக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” என்று தேர்தல் மேடைகளில் காட்டமாகக் கூறிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்றது.
ஆளும் தரப்பாக வினைத்திறனுடன் செயற்படுவதற்கான அனுபவம் அவர்களுக்கு குறைவாக இருந்தாலும், உள்நாட்டு நிலைவரங்கள் தொடர்பில் ஆழமான தரவுகளுடனான தகவல்களும், அறிவும் அவர்களுக்கு நிறையவே காணப்படுகின்றன.
அப்படியிருக்கையில் தான் கடந்த 19ஆம் திகதி புதன்கிழமை புதுக்கடை நீதிவான் நீதிமன்ற ஐந்தாம் இலக்க நீதிமன்ற அறையின் சாட்சிக் கூண்டில் வைத்து, ஒழுங்கமைக்கப்பட்ட பலகுற்றங்களுடன் தொடர்புடைய ‘சஞ்சீவ குமார சமரரத்ன’ என்ற இயற்பெயரைக் கொண்ட ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கணேமுல்ல சஞ்சீவவைச் சுட்டுக்கொன்றவர் சட்டத்தரணி வேடமணிந்து வந்த மஹரகமவைச் சேர்ந்த 27 வயதான ‘சமிந்து தில்ஷான் பியுமங்க கந்தனாராச்சி’ என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதோடு நீர்கொழும்பு கட்டுவெல்லேகம வீதியைச் சேர்ந்த ‘பின்புர தேவகே இஷாரா செவ்வந்தி’ என்ற பெண் அவருக்கு உதவியவராக காணப்படுகின்றார்.
பிரதான சந்தேகநபரான சமிந்து தில்ஷான் பியுமங்க கந்தனாராச்சி, இராணுவப்பயிற்சி பெற்றவர் என்பதும், அவர் போதைப்பொருள் பழக்கமுள்ளவர் என்பதும் 15 மில்லியன் ரூபா ஒப்பந்த அடைப்படையில் இந்தக் கொலையைச் செய்ததாகவும் தனது வாக்குமூலத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், நாட்டுக்கு வெளியில் இருக்கும் கெஹல்பத்தர பத்மே, கொமாண்டோ சலிந்த மற்றும் அவிஷ்க உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடையவர்களின் வழிகாட்டலில் இக்கொலை செய்யப்பட்டுள்ளதோடு பாதாளக்குழுக்களுக்களின் தலைவர்கள் இடையே காணப்படுகின்ற முன்விரோதத்தின் பழிவாங்கும் படலமாகவே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது என்பதும் அவரது வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
கொழும்பு குற்றப்பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக லொக்குஹெட்டியின் வழிகாட்டுதலின் கீழ் பிரதான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் ஐந்து பொலிஸ் விசாரணைகள் குழுக்கள் வெவ்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்டவர் கணேமுல்ல சஞ்சீவ ஒன்றும் புனிதர் அல்லர். அவர் கப்பம் பெறல், உயிர் அச்சுறுத்தல் செய்தல், கொலைகள் கொள்ளைகள் என்று பலவற்றுடன் தொடர்புபட்டவர் என்றும், கொலை செய்த சமிந்து தில்ஷான் ஏலவே 6 கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவராக இருப்பதால் அவரும் கொல்லப்பட வேண்டியவர் தான் என்றும் தீவிரமான சமூக மட்டக்கருத்துக்கள் மேலெழுந்துள்ளன.
கணேமுல்ல சஞ்சீவ என்ற நபர் புனிதரா, இல்லையா என்பதல்ல இங்குள்ள பிரச்சினை. துப்பாக்கி தாங்கிய 12 விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பில் நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்ட சந்தேக நபர் ஒருவர் பட்டப்பகலில் பிரதிவாதிக் கூட்டில் நிற்கையில் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றார்.
‘இலங்கையில்’ நீதிமன்றத்தின் ‘சாட்சிக்கூண்டு’ கூட சந்தேக நபருக்கோ, அல்லது குற்றவாளிக்கோ உயிர்பாதுகாப்பற்றதாக மாறியிருக்கின்றது. நீதிமன்றின் நீதிபதி, அங்கு பணியாற்றும் ஏனைய அதிகாரிகள், ஊழியர்கள், சட்டத்தரணிகள், உட்பட பலரின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் புலனாய்வுத் துறையின் திறன் மற்றும், நீதிமன்ற வளாகத்தில் ஆயுதம் தாங்கிய தரப்பினரின் பாதுகாப்பு அளிக்கும் இயலுமை ஆகியவையும் கேள்விக்குள்ளாகின்றது. நீதிமன்ற வளாகங்களிற்கு வெவ்வேறு காரணங்களுக்காக வருகை தரும் சாதாரண பொதுமக்களின் பாதுகாப்புக் குறித்த தீவிரமான கரிசனைகளும் ஏற்படுகின்றன.
“பாதாளக்குழுக்களை ஒழிப்போம்” என்று ஜனாதிபதி அநுரகுமார அறைகூவல் விடுப்பதும், “பாதாளக்குழுக்கள் தலைவிரித்தாடுவதற்கு முன்னைய ஆட்சியாளர்களே காரணம்” என்றும், “தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படவில்லை” என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால உத்தரவாதமளிப்பதும், “நீதிமன்றப்பாதுகாப்பை தீவிரப்படுத்துவோம்” என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சபதமெடுப்பதும் அரசியல் அரங்கில் பொதுப்படையான விடயம்.
ஒட்டுமொத்த அரசாங்கமும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நிகழ்ந்து சில மணிநேரங்களில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்ட விடயத்தை முன்னிலைப்படுத்தி தமது ‘வீரச் செயலாக’ அடையாளப்படுத்த முனைகின்றமையும் ‘அரசியல் சாயம்’ நிறைந்தது தான்.
ஆனால், அரசாங்கம் யதார்த்த நிலைமைகளை புரிந்துகொள்ள வேண்டியது அவசியமானது. அதற்கமைவாக மிகத்தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதும் தவிர்க்க முடியாதவொரு விடயமாகின்றது.
தற்போதைய சூழலில் போதைப்பொருள் பயன்பாடும், விநியோகமும் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் வியாபித்துவிட்டன. போதைப்பொருளை விற்பனை செய்பவர்களின் வலையமைப்பு நாட்டின் பாதுகாப்புக் கட்டமைப்புக்களை விடவும் ஒருபடி மேலேயே தான் உள்ளது.
போதைப்பொருள் வலையமைப்புக்களின் பிரதானிகள் டுபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் கட்டளைகளைப் பிறப்பித்து செயற்படுத்துமளவிற்கு ஆழமாக வேரூன்றி விட்டன.
இலங்கையில் பாதாளக்குழுக்களின் முக்கிஸ்தர்களின் மரணங்கள் 1990 கோணாவல சுனிலின் மீது இனந்தெரியாவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தினால் ஏற்பட்ட மரணத்திலிருந்து ஆரம்பமாகின்றது. இருப்பினும் நீதிமன்றத்தில் வைத்து மேற்கொள்ளப்படும் ‘துணிகர கொலைகள் அல்லது கொலை முயற்சிகள்’ அச்சம்பவம் நிகழ்ந்து அதேயாண்டு தொடங்கியது.
1990ஆம் ஆண்டு அத்தனகல்ல நீதிமன்றத்தில் பொலிஸ்பரிசோதகர் மற்றும் அவரது மாமனார் ஆகியோர் மீது பிரதிவாதிக் கூண்டில் வைத்து மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகமே நீதிமன்றத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட முதலாவது துப்பாக்கிப்பிரயோகமாகும். இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட நீதிமன்றத்துக்குள் வைத்து கொலை செய்யும் கலாசாரம் தற்போது வரையில் நீடிகின்றது.
1996இல் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து பாதாளக்குழுவின் முக்கியஸ்தரான சிந்தக்க அமரசிங்க மீது அவரது போட்டியாளர்களால் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்ட சம்பவமே நீதிமன்ற வளாகத்துக்குள் நிகழ்த்தப்பட்ட முதல் துப்பாக்கிப் பிரயோகமாகும்.
குறித்த சம்பவத்தில் சிந்தக்க அமரசிங்க உயிர்பிழைத்த நிலையில் அவரை கொலை செய்வதற்கு முயற்சித்த துப்பாக்கிதாரி பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். எனினும் சிந்தக்க அதேயாண்டு களு அஜித்தின் அணியிரால் தொட்டலங்கவில் வைத்து சுட்டிக்கொல்லப்பட்டார். இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட நீதிமன்றத்துக்குள் வைத்து கொலை செய்யும் கலாசாரம் தற்போது வரையில் நீடிகின்றது.
2004 ஜனவரி 9ஆம் திகதி புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தின் ஆறாம் அறையில் வைத்து பாதாளக்குழுவின் மற்றொரு முக்கியஸ்தரான தம்மிக்க அமரசிங்க சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.
2022 ஆகஸ்ட் 4ஆம் திகதி கல்கிஸை நீதிவான் நீதிமன்றத்தின் சாட்சிக் கூண்டில் வைத்து இரத்மலானை ரொஷான் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
2015 செப்டெம்பர் 23ஆம் திகதி கடுவல நீதிவான் நீதிமன்றத்தின் குற்றவாளிக்கூண்டில் ஏறுவதற்கு முனைந்த பாதாளக்குழுவின் முக்கியஸ்தரான சமயங் என்பவரை இலக்குவைத்து துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டபோதும் அதில் அவர் தப்பித்துக்கொள்கின்றார். பின்னர் 2016இல் களுத்துறையில் சிறைச்சாலை வாகனத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
இறுதியாக கடந்த ஜனவரி 16ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தின் வளாகத்தில் வைத்து சாட்சி வழங்குவதற்காகச் சென்ற இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இராணுவ அதிகாரி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனைவிடவும், பொலிஸார் அல்லது சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட சட்டத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை மேற்கொண்டவர்கள் கைதிகளாக இருந்த வேளையில், துப்பாக்கிதாரிகள் குழுவாகவோ அல்லது தனியாகவோ மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகங்களில் உயிரிழந்த பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இவ்வாறிருக்கையில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.புத்திக மனதுங்கவின் தகவல்களின் பிரகாரம், இந்த ஆண்டின் நேற்று வெள்ளிக்கிழமை வரையிலான காலப்பகுதியில் 17 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
“பாதாளக்குழுக்களின் தலைமையில் 10 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதோடு ஏனைய ஏழு சம்பவங்களும் தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளன” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதாளக்குழுக்கனின் தலைமையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் 09பேர் உயிரிழந்துள்ளதோடு 30பேர் விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனைவிடவும், 2024ஆம் ஆண்டில் 103 துப்பாக்கிப் பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதோடு ஒழுங்கமைக்கப் பட்ட 56 குற்றச்சம்பவங்களின் காரணமாக 45 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த எண்ணிக்கையானது, 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகின்றபோது சிறிய அளவில் குறைந்திருந்தாலும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சம்பவங்களும், மரணங்களும் தொடர்கதையாகவே இருக்கின்றன.
ஒவ்வொரு சம்பவங்களுக்குப் பின்னாலும், போதைப் பொருள் வலையமைப்புக்கள், பாதாளக்குழுக்கள் ஆகியவற்றின் நேரடியான தொடர்புகளும், பழிவாங்கும் நோக்கங்களும் இருப்பது வெளிப்படையானது.
அந்த வகையில், கணேமுல்ல சஞ்சீவவின் மரணத்துடன் அனைத்தும் முடிவுக்கு வரப்போவதில்லை. அவரது அணியினரின் பழிவாங்கும், அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கம் தொடரத்தான் போகின்றது.
நாட்டுக்குள்ளும், வெளியிலும் இருக்கும் ஏனைய தரப்புக்கள் அதற்குப் பதிலடிய வழங்கத்தான் போகின்றன. ஆகவே, சஞ்சீவவின் விடயத்தில் சில மணிநேரத்திற்குள் துப்பாக்கிதாரியைப் கைது செய்தது போன்று, போதைப்பொருள் வலையமைப்புக்களையும், பாதாளக்குழுக்களையும் முதுகெலும்புடன் தீர்மானமெடுத்து முழுமையாக களைந்தெடுக்கும் வரையில் அரசாங்கத்துக்கான சவால் நீண்டுகொண்டே இருக்கும்.
ஆர்.ராம் Virakwsari