இலங்கையில் அண்மைக்காலமாக பாதாள உலக குழுக்கள் பெரும் பிஸியாக இருப்பதை காணமுடிகின்றது. சட்டத்துக்கு புறம்பாக செயற்பட்ட பல பாதாளஉலக குழுக்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூட்டு நடத்தப்பட்டுள்ளது.

ஆயுத வியாபாரம், போதைப்பொருள் வர்த்தகம், ஒப்பந்த கொலை, கடத்தல், கப்பம் வாங்குதல் போன்ற படுபாதக செயல்களில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளில் பலர் கடந்த வாரங்களில் கொல்லப்பட்டுள்ளனர். இவற்றில் அநேகமானவை பாதாள உலகக்குழுக்களிடையேயான மோதல்களினால் ஏற்பட்டவை என கூறப்பட்ட போதிலும் நாட்டு மக்களை இச்சம்பவங்கள் பெரும் பீதியடையச் செய்துள்ளது.

கடந்த ஓரிரு நாட்களில் மாத்திரம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஐந்துக்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கப்பம் கோருதல் மற்றும் ஏனைய குற்றங்களுடன் தொடர்புடைய ‘கஜ்ஜா’ என அழைக்கப்பட்ட 39 வயதுடைய அருண விதானகமகே மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் மித்தெனிய பகுதியில் வைத்து கடந்த 18ஆம் திகதி இரவு கொல்லப்பட்டனர்.

தனது இரண்டு குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, அடையாளம் தெரியாத நபர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், விதானகமகே சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் அவரது 9 வயது மகனும் 6 வயது மகளும் படுகாயமடைந்த நிலையில் எம்பிலிப்பிட்டிய மற்றும் தங்காலை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் துரதிர்ஷ்டவசமாக தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்திலேயே மகள் உயிரிழந்தார். அதேபோல் காலி தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்த மகனு வந்த மகனும் திங்கட்கிழமை உயிரிழந்தார்.

அதேபோல் கொட்டாஞ்சேனை, பெனடிக்ட் மாவத்தையில் கடந்த 10ஆம் திகதி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றது.

இதில் ஒருவர் உயிரிழந்தார். அதனைதொடர்ந்து கொட்டாஞ்சேனை கல்பொத்த சந்தியில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தலவாக்கலையை சேர்ந்த சசிகுமார் எனும் நபர் உயிரிழந்தார்.

இதனையடுத்து, துப்பாக்கி சூட்டு சம்பவத்தை நிகழ்த்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற துப்பாக்கிதாரிகளை கொழும்பு ஒருகொடவத்த பகுதியில் வைத்து கிரான்பாஸ் பொலிஸார் கைது செய்தனர்.

எனினும் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களைக் காட்ட பொலிஸார் அவர்களை அழைத்துச் சென்றபோது, பொலிஸாரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்து அவர்களைச் சுட முயற்சித்துள்ளனர்.

இதன்போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுஇவ்வாறிருக்க சட்டத்தரணியைப் போல வேடமிட்டு நீதிமன்றத்துக்குள் நுழைந்து பாதாள உலக தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலைச் செய்யப்பட்டமை நாட்டில் பேசுப்பொருளாக மாறியது.

அது கடந்த 19ஆம் திகதி புதன்கிழமை. வழமைபோல் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றக்கட்டத்தொகுதி பரப்பரப்பாக காணப்பட்டது. ஏராளமானோர் வழக்கு விசாரணைக்காக வந்திருந்தனர்.

அன்றையதினம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கணேமுல்ல சஞ்சீவவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட விசேட வழக்கு புதுக்கடை இல.9 மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவிருந்தது.

அதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகுவதற்கு புஸ்ஸ அதி பாதுகாப்பு சிறைச்சாலையிலிருந்து பிரபல பாதாள உலக தலைவர் கணேமுல்ல சஞ்சீவ அழைத்துவரப்படுகின்றார். இவர் 19 கொலைச்சம்பவங்களுடன் தொடர்புடையவர் என குற்றம் சாட்டப்பட்ட பாதாள உலகக் கோஷ்டியின் மிக முக்கிய நபர் என அடையாளம் காணப்பட்டவர்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கணேமுல்ல சஞ்சீவவின் 20 வழக்கு விசாரணைகள் ‘ஸ்கைப்’ தொழில்நுட்பத்தின் ஊடாகவே நடைபெற்றன. எனினும் கடந்த 19ஆம் திகதி காலை இல.9 மாஜிரேட் நீதிமன்றத்தில் நடைபெறவிருந்த வழக்கில் நேரில் ஆஜராகுவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கணேமுல்ல சஞ்சீவ காலை 9 மணியளவில் சிறைச்சாலை பஸ்ஸில் அழைத்து வரப்பட்டார்.

அன்றையதினம் இல.9 மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் நீதவான் மற்ற வழக்குகளிலிருந்து விலகி இருந்தார். அதுமட்டுமின்றி அன்றைய தினம் நீதிமன்ற வளாகத்திலும் சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இல.9 நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடைபெற தாமதமானதால் பேலியகொட பொலிஸாரால் சஞ்சீவ மீது தொடுக்கப்பட்டிருந்த திட்டமிடப்பட்ட மூன்று மனித படுகொலை வழக்குகளுக்காக சிறைச்சாலை அதிகாரிகளால் காலை 9.30 மணியளவில் இலக்கம் 5 நீதவான் நீதிமன்றத்திற்கு சஞ்சீவ அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு ஒரேயொரு வழக்கு மட்டும் விசாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டது. இதனிடையே நீதிமன்ற அறையில் சட்டத்தரணிகள் மேசையில் மூத்த சட்டத்தரணி ஒருவரின் நாற்காலிக்கு அருகில் அமர்ந்திருந்த ஒருவர் திடீரென எழுந்து, குற்றவாளி கூண்டிலிருந்த சஞ்சீவ அருகில் சென்றார்.

சுமார் ஒரு மீற்றர் தூரத்தில் சஞ்சீவவை நெருங்கியவுடன் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து அவரின் மார்பின் இடதுபுறத்தில் ஆறு முறை சுட்டார். அங்கிருந்த யாராலும் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதை கூட யோசிக்கக்கூட விடாமல் துப்பாக்கியை அதே இடத்தில் வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதனையடுத்தே கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் வைத்து கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்டமை நாட்டில் பெரும்பேசு பொருளாக மாறியது.

நீதிமன்ற வளாகத்தில் மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள சி.சி.டிவி கேமராக்கள், தொலைபேசி அறிக்கைகள் என்பன துரிதமாக கண்காணிக்கப்பட்டன.

நீதிமன்ற வளாகம் முழுவதும் பொலிஸ் மோப்ப நாய்கள் கொண்டுவரப்பட்டு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போதே சட்டத்தரணியை போல் மாறுவேடமிட்டு கையில் கோப்பொன்றுடன் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையும் சி.சி.டிவி காட்சிகளை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அதுமட்டுமின்றி குற்றவியல் நடைமுறைச் சட்டங்கள் அடங்கிய புத்தகமொன்றையும் கண்டுபிடித்தனர். அதன் உள்ளே பக்கங்கள் மிக நுணுக்கமாக வெட்டப்பட்டு அதில் மிகவும் சூட்சுமமான முறையில் கைத்துப்பாக்கி எடுத்துவரப்பட்டுள்ளமை தெரியவந்தது.

இதுதவிர சட்டத்தரணியை போல் வேடமிட்ட பெண்ணொருவரும் அந்த புத்தகத்தை நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டு வரும் சி.சி.டி.வி காட்சிகளும் கிடைத்தன.

இதேவேளை கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டு நான்கு மணித்தியாலங்கள் கடந்த நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர், . கற்பிட்டி பகுதியிலிருந்து இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தளபதி பிரதி பொலிஸ் மா அதிபர் சமந்த டி சில்வாவுக்கு புத்தளம் பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமிலிருந்து இரகசிய தகவலொன்று கிடைத்தது.

அதனால் முடிந்தவரை வீதி சோதனை சாவடிகளை போட்டு வாகனங்களை சோதனை செய்ய வேண்டுமென பிரதிப் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல் விடுத்திருந்தார். அதற்மைய சிரேஷ்ட அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் உடனடியாக வீதித்தடைகளை ஏற்படுத்தி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

மாலை 4.25 மணியளவில், சாம்பல் நிற KDH ரக NW PE 5293 ரக வான் ஒன்று பாலாவி ஊடாக புத்தளம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. உடனே சந்தேகத்திற்கிடமான அந்த வாகனத்தை STF அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அதைச் சரிபார்த்தபோது, சாரதியை தவிர, பின் இருக்கையில் வெள்ளை நிற உடையணிந்த ஒருவர் இருந்தார்.

“எங்கே போகிறாய்…” என்றார் அதிகாரி

‘சேர் கற்பிட்டிக்கு போறேன்…’என்று கூறிவிட்டு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வழங்கிய அடையாள அட்டையைக் காட்டினார்.

கணேமுல்ல சஞ்சீவவை நீதிமன்றத்தில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சட்டத்தரணி போல் வேடமணிந்திருந்த நபருக்கும் அடையாள அட்டையிலுள்ள நபரின் புகைப்படத்துக்கும் ஒற்றுமை இருப்பதை விசேட அதிரடிப் படைஅதிகாரிகள் அடையாளம் கண்டனர்.

மேலும் வானை சோதனையிட்டபோது அதில் கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டது. அதன்படி, சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் அவர்தான் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அந்த நபர் ஒரு சட்டத்தரணியா என்பதை மேலும் உறுதிப்படுத்துவதற்காக சட்டகேள்விகள் சிலவற்றை அவரிடம் கேட்டனர்.

‘சேர் அதுபற்றி எனக்கு சரியாகத் தெரியாது… இந்த சட்டத்தரணிகள் சங்க அடையாள அட்டையை நான் காசுகொடுத்து தான் வாங்கினேன் என்று கூறி கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டார். சந்தேகநபரிடமிருந்த மூன்று அடையாள அட்டைகளிலும் வெவ்வேறு பெயர்கள் மற்றும் ஊர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அதன்படி அடையாள அட்டையொன்றில் முஸ்லிம் பெயர் இருந்தது.

சட்டத்தரணியின் அடையாள அட்டையில், கொடிகாரகே கசுன் பிரபாத் நிஸ்ஸங்க என குறிப்பிடப்பட்டிருந்ததுடன் பிறந்ததிகதி அதன் அங்கத்துவ இலக்கமாகவும், கணேமுல்ல சஞ்சீவவின் விளக்கமறியல் இலக்கம் சட்டத்தரணி இலக்கமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும், அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள QR குறியீடு கொவிட்-19 தடுப்பூசி தொடர்பான தரவுகளைக் கொண்ட QR குறியீடு என்பதும் தெரியவந்தது. சஞ்சீவ கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் சமிந்து தில்ஷான் பியுமங்க கந்தானராச்சி என அடையாளம் காணப்படுகின்றார். 28 வயதான இவர் இல. 22/1/A, தம்பஹேன வீதி, மஹரகம பிரதேசத்தைச்சேர்ந்தவர் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

2019 இல் இராணுவத்தில் இணைந்த இவர் மூன்றாவது கமாண்டோ படைப்பிரிவில் பயிற்சிக்காக இணைந்தார். எனினும் அங்கிருந்து தப்பிச் சென்ற அவர், பின்னர் 2023 ஆம் ஆண்டு பொது மன்னிப்புக் காலத்தின் கீழ் சட்டபூர்வமாக இராணுவத்திலிருந்து விலகியுள்ளதாக தெரியவருகின்றது.

ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான சமிந்து, அதன்மூலம் பாதாள குற்ற உலகில் நுழைந்துள்ளார். தற்போது டுபாய் உள்ளிட்ட வெளிநாடுகளிலுள்ள பாதாள உலகின் முக்கிய புள்ளிகளுடன் தொடர்புகளை பேணி வந்துள்ளார். அதன்படி கணேமுல்ல சஞ்சீவ கொலையும் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஒன்றரை கோடி ரூபா ஒப்பந்தத்துக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் ரூ. 2 இலட்சம் மட்டுமே முற்பணமாக சமிந்து பெற்றுள்ளார். மிகுதியை கொலையின் பின்னர் வழங்குவதாக தனக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்ததாகவும் சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

தெஹிவளையில் பாதாள கோஷ்டியை சேர்ந்த படோவிட்ட அசங்கவின் தரப்பைச்சேர்ந்த இருவரைக் கொலை செய்தமை, சீதுவையில் தந்தை, மகன் என மூவர் கொலைச்செய்யப்பட்டமை போன்ற சம்பவங்களையும் தானே நடத்தியதாகவும் சமிந்து வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதேவேளை சந்தேகநபருக்கு உதவியாக பெண்ணொருவரும் வந்துள்ளார். இருவரும் கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்வதற்காக இரண்டு நாட்களுக்கு முன்னர் சட்டத்தரணிகள் போல் உடையணிந்து நீதிமன்ற வளாகத்தில் சுற்றித்திரிந்துள்ளனர்.

சஞ்சீவ கொலை செய்யப்பட்ட தினம் இருவரும் மருதானையில் ஒரு இடத்தில் தங்கியிருந்து நீதிமன்ற வளாகத்திற்கு வந்துள்ளனர். அதன்பின்னர் திட்டமிட்டப்படி கொலையை கச்சிதமாக முடித்துவிட்டு சாமர்த்தியமாக அவ்விடத்திலிருந்து இருவரும் தப்பிச்சென்றனர். சமிந்து அணிந்திருந்த கோட்டினை கழற்றி விட்டு கைதுசெய்யப்படும் போது அணிந்திருந்த ஆடைகளை அணிந்துள்ளார்.

சமிந்துவுக்கு துணையாகவிருந்த இஷாரா செவ்வந்தி போதைப்பொருள் வியாபாரி. நீர்கொழும்பு பிரதேசத்தில் பிரபல போதைப்பொருள் வியாபாரிகளுடன் கடத்தலில் ஈடுபட்டு, சில மாதங்களுக்கு முன்னர் சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்டவர்.

பாதாள உலக கோஷ்டியை சேர்ந்த கெசல்பத்தர பத்மேயின் தந்தை 2022 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டமைக்கு பழிவாங்கும் முகமாகவே கணேமுல்ல சஞ்சீவ கொலைசெய்யப்பட்டதாகவும் சமிந்து வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

43 வயதான கணேமுல்ல சஞ்சீவ, கணேமுல்ல மகிழங்கமில் பிறந்தார். இவர் நன்கு கல்வி கற்றவர். எனினும் சேரக்கூடாத நண்பர்களின் சேர்க்கையால் சஞ்சீவவின் வாழ்க்கை திசை மாறியது. வெயங்கொடை பகுதியில் வசிப்பதற்காக சென்றவுடன் அப்பகுதி இளைஞர்களுடன் நட்பினை பேணினார். அதன் நட்பின் விளைவாக அவர்களுடன் இணைந்து கொள்ளையில் ஈடுபட ஆரம்பித்தார். அதுவே அவர் பாதாள உலகின் முக்கிய புள்ளியாக மாறுவதற்கு அடிப்படையாக அமைந்தது.

அதன்படி முதலில் பிஸ்கட் வான் ஒன்றை கொள்ளையடித்து எழுபதாயிரம் ரூபாவுடன் தப்பிச் சென்ற சஞ்சீவ மற்றும் அவரது குழுவினர், 2009ஆம் ஆண்டு கிட்டத்தட்ட ஏழு கோடி ரூபா வங்கிக் கொள்ளையை செய்து பாதாள குற்ற உலகில் ‘சண்டியன் ‘ என்று பெயர் எடுத்தார்.

அதன்பின்னர் பின்னர் கம்பஹா ‘பாஸ் பாதாள கோஷ்டியினர்’ பக்கம் சேர்ந்து இதயமற்றவனாய் பல மனித கொலைகளை செய்கிறார். அவர்களும் சஞ்சீவ மூலம் பலகொலைகளை செய்தனர்.

ஹினாடயான அசிதா என்பவரின் கொலையுடன் சஞ்சீவ பெரும் சண்டியனாக உருவெடுத்தார். இதற்கிடையில், கம்பஹாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒஸ்மானைக் கொலை செய்ய சஞ்சீவ பலமுறை முயன்றார். விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களுடன் தொடர்பிலிருந்த சஞ்சீவ அவர்கள் ஊடாக புலிகள் பயன்படுத்திய துப்பாக்கிகளை பெற்றார்.

பரத லக்ஷ்மன் கொலைவழக்கில் சிறையிலிருக்கும் தெமட்டகொட சமிந்தவை ஏற்றிச் சென்ற பஸ்ஸூக்கு தெமட்டகொட பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட சம்பவத்தில் சஞ்சீவ கைது செய்யப்பட்டார்.

2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சஞ்சீவவுக்கு 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கம்பஹா உயர்நீதிமன்றம் பிணை வழங்கியது.

அதன்பின்னர் படகில் மன்னார் வழியாக இந்தியாவுக்கு தப்பிச் சென்று சேனாதிரகே கருணாரத்ன என்ற பெயரில் போலி கடவுச்சீட்டை பெற்று இந்தியாவிலிருந்து நேபாளம் சென்றுள்ளார்.

அந்த கடவுச்சீட்டின் ஊடாக பல நாடுகளுக்குச் சென்று பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளை பேணி வந்ததுடன் போதைப்பொருள் கடத்தல் இந்நாட்டில் பரவுவதற்கு பங்களிப்புச் செய்துள்ளார்.

2023 செப்டெம்பர் 13 ஆம் திகதி, வெளிநாடுகளில் காலத்தைக் கழித்த சஞ்சீவ, போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நேபாளம் காத்மாண்டுவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த போதே விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு வடமேல் மாகாண குற்றப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் இலங்கைக்கு வருகின்றார் என்பதில் தொடர்பில் இரகசிய தகவல் உயர்அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

மூன்று மாதங்கள் வீரகுள பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சஞ்சீவ நீதிமன்ற உத்தரவின்பேரில் பூஸ்ஸ உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 19ஆம் திகதி பூஸ்ஸ சிறைச்சாலையில் இருந்து கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்கு வந்ததை தொடர்ந்து அவரது வாழ்க்கைப் பயணமும் முடிவுக்கு வந்தது.

பாதாள உலகில் ஒருவர் இறக்கும் போது மற்றொருவர் பாதாள உலகில் பிறக்கிறார். பாதாள உலக தலைவர்களை கொல்வதன் மூலம் இது முடிவடைவதில்லை. முற்றுமுழுதான சமுதாய விழிப்புணர்வே அவசியமானது.

-வசந்தா அருள்ரட்ணம்-

Share.
Leave A Reply