“மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் குமார்துலி காட் அருகே இரண்டு பெண்கள் வெட்டப்பட்ட உடல் பாகங்களை டிராலி சூட்கேசில் வைத்துக் கொண்டுபோய் கங்கை நீரில் போட முயன்றுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடந்துள்ளது. பையுடன் சந்தேகத்துக்கிடமான முறையில் குமார்துலி காட் கங்கை கரையில் நீல நிற டிராலி சூட்கேஸுடன் நின்றிருந்த பெண்களை அப்பகுதி மக்கள் பிடித்து விசாரித்துள்ளனர்.
தங்கள் வீட்டு நாய் இறந்துவிட்டதாகவும் அதை அப்புறப்படுத்த இங்கு கொண்டுவந்ததாகவும் அப்பெண்கள் தெரிவித்தனர்.
ஆனால் அவர்களிடம் இருந்த டிராலி பையைத் திறந்து பார்த்த மக்கள், உள்ளே இருந்த தலை உள்ளிட்ட உடல் பாகங்கள் வெட்டப்ப்பட்ட பெண்ணின் சடலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து தகவலறிந்து அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு அப்பெண்களைக் கைது செய்தனர்.
அதன்பின் அவர்களிடம் நடந்த விசாரணையில் இரு பெண்கள், ஃபால்குனி கோஷ் மற்றும் அவரது தாயார் ஆர்த்தி கோஷ் என்று தெரியவந்தது.
சூட்கேசில் இருந்த பெண்ணின் உடல், ஃபால்குனி கோஷின் மாமனாரின் சகோதரி சுமிதா கோஷ் (55) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அசாமின் ஜோர்ஹாட்டைச் சேர்ந்த சுமிதா, தனது கணவரிடமிருந்து பிரிந்து, பிப்ரவரி 11 முதல் கொல்கத்தாவில் உள்ள ஃபால்குனி மற்றும் ஆர்த்தி கோஷ் இருவருடனும் வசித்து வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஃபால்குனி தனது கணவரைப் பிரிந்து தாயுடன் வாழ்கிறார்.நேற்று மாலை ஃபால்குனி, சுமிதா இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
ஃபால்குனி சுமிதாவை சுவரில் தள்ளியதில் மயக்கமடைந்தார். அவர் சுயநினைவு திரும்பியதும், மீண்டும் சண்டை ஏற்பட்டது.
இதன் போது, ஃபால்குனி சுமிதாவின் முகம் மற்றும் கழுத்தில் செங்கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் உடலை வெட்டி சூட்கேசில் வைத்து தாயும் மக்களும் பராசத் காஜிபாராவிலிருந்து சீல்டாவுக்கு சூட்கேஸுடன் ரெயிலில் பயணம் செய்து அங்கிருந்து ஒரு டாக்ஸி பிடித்து உடலை குமார்துலி காட் கங்கை நீரில் அப்புறப்படுத்த முயன்றுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.”,