இலங்கையில் பல பெரும்பான்மையினத் தேசியவாத மற்றும் இனவாத அமைப்புக்கள் அரச சார்பற்ற அமைப்புக்களைக் கடுமையாக வெறுக்கின்றன. அதேவேளை, அவை தமிழ் பிரிவினைவாதத்துக்கும் மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகளுக்கும் ஆதரவாகச் செயற்படுவதாகவே அவர்கள் கருதுகின்றனர்.
அரச சார்பற்ற அமைப்புக்கள், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கோ அல்லது அவர்களது குறிக்கோள்களுக்கோ அல்லது பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கோ ஆதரவாக செயற்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை.
அதேபோல், அவை பெரும்பான்மையினரின் நலன்களுக்கு எதிராகச் செயற்பட்டதற்கான ஆதாரங்களும் இல்லை.
எனினும், 1980களில் இருந்தே அவ்வமைப்புக்கள் விடயத்தில் பெரும்பான்மையின மக்கள் மத்தியில் இவ்வாறானதோர் அபிப்பிராயம் இருந்து வருகிறது.
எனவே, தமது தேசியவாத அல்லது இனவாத நடவடிக்கைகளுக்கு எதிரானவர்களை அவர்கள் சிலவேளை எவ்வித ஆதாரமுமின்றி என்ஜிஓ (NGO) காரன் என்று பரிகாசமாக பட்டஞ்சூட்ட முற்படுகின்றனர். வெளிநாட்டுப் பணத்துக்காகவே இந்நபர்கள் தமது தேசியவாத அல்லது இனவாத கொள்கைகளை எதிர்க்கின்றனர் என்பதே அவர்களது நிலைப்பாடாகும்.
அரச சார்பற்ற அமைப்புக்கள் பிரிவினைக்கு ஆதரவாகவோ பெரும்பான்மையின மக்களுக்கு எதிராகவோ செயற்படாவிட்டாலும் அவை தமக்கு எதிரானவை என்று அவர்கள் கருதுவதற்குக் காரணங்கள் முற்றிலும் இல்லாமல் இல்லை.
அவற்றில் முக்கிய காரணம் பல பிரதான அரச சார்பற்ற அமைப்புக்கள் சமாதான விரும்பிகளாகச் செயற்படுவதேயாகும்.
அத்துடன், அவ்வமைப்புக்கள் நீண்ட காலமாக நாட்டில் சமாதானத்தை வலியுறுத்தி வந்துள்ளன. இன வாதத்தை எதிர்த்து வந்துள்ளன.
நல்லிணக்கம் என்பது சிங்களவர்களுக்கு எதிரானது என்றதோர் அபிப்பிராயம் 1990களில் இருந்தே சிங்கள மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வந்துள்ளது. எனவே, அரச சார்பற்ற அமைப்புக்கள் என்றால் தமது நலன்களுக்கு எதிரானவை என்றதோர் கருத்து அம்மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.
அரச படைகளுக்கும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் நடைபெற்று வந்த காலத்தில் அப்போர் நடைபெற்று வந்த பிரதேசங்களில் உணவு விநியோகம் மருத்துவ வசதி போன்றவை வெகுவாக பாதிக்கப்பட்டு இருந்தது. அதேவேளை, அரச வாகனங்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குச் செல்ல தயங்கின.
எனவே, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) அகதிகள் தொடர்பான ஐ.நா. உயர்ஸ்தானிகர் அலுவலகம் (UNCR) போன்ற சர்வதேச நிறுவனங்களும் அவற்றின் துணையுடன் இயங்கிய தேசிய மற்றும் சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்களுமே போர் நடைபெற்ற பிரதேசங்களில் வாழ்ந்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்வந்தன.
இவ்வமைப்புக்கள் அக்காலத்தில் சந்தேகக் கண்கொண்டே பார்க்கப்பட்டன. அதுவும் பெரும்பான்மை மக்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள் தமக்கு எதிரானவை என்று கருதக் காரணமாகியது.
2004ஆம் ஆண்டு சுனாமி இலங்கையைத் தாக்கிய போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் பதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப் புலிகளால் மட்டும் முடியாது போய்விட்டது.
நிவாரண பொருட்களுடன் அரச அதிகாரிகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் நுழைவதில் பல நடைமுறை பிரச்சினைகளை இருந்தன. அப்போதும் பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் தொண்டர் நிறுவனங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் பெரும் பங்காற்றின.
உண்மையிலேயே சாதாரண பெரும்பான்மையின் மக்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள் தமக்கு எதிரானவை என்று சிந்திக்க வில்லை. அரசியல்வாதிகளும் ஊடகங்களுமே இந்தக் கருத்துக்களைச் சாதாரண மக்கள் மனதில் பதிய வைத்துள்ளனர்.
இந்தப் பின்னணியிலேயே இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கு வழங்கும் அமெரிக்க நிதி உதவிகளை இடைநிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் கடந்த ஜனவரி 20ஆம் திகதி முடிவு செய்துள்ளார்.
இது ட்ரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற முதல் நாளே பிறப்பித்த கட்டளைகளில் ஒன்றாகும்.
அமெரிக்க ஜனாதிபதியின் இந்த உத்தரவின் பிரகாரம் அமெரிக்காவின் பிரதான வெளிநாட்டு நிதி உதவி நிறுவனமான யூஎஸ்ஏய்ட் என்றழைக்கப்படும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவி நிறுவனத்தின் பணிகளும் இடைநிறுத்தப்பட்டு வெளிநாடுகளில் கடமையாற்றும் அதன் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குமாறு ட்ரம்ப் பணித்திருந்தார்.
யூ.எஸ்.எய்ட நிறுவனத்தின் பணிகளை இடை நிறுத்தும் முடிவானது இலங்கையிலும் பல அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
ஆரம்ப கட்டமாக 90 நாட்களுக்கே இந்த நிதி உதவிகள் இடைநிறுத்தப்பட்டன. அந்த காலகட்டத்தில் இந்த உதவிகளின் தேவை மீளாய்வு செய்யப்பட்டு அவை தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது. எவ்வாறாயினும் அமெரிக்க சமஷ்டி நீதிமன்றம் ஒன்று கடந்த 14ஆம் திகதி ஜனாதிபதியின் உத்தரவைத் தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளது.
இந்த விவகாரம் இலங்கையில் முக்கியத்துவம் பெறுவதற்கு மற்றுமொரு காரணமும் இருக்கிறது. தமது உத்தரவை நியாயப்படுத்தும் வகையில் ட்ரம்ப் தமது டுவிட்டர் தளத்தில் தெரிவித்திருந்த கருத்தொன்றே அதுவாகும்.
இலங்கை, வங்காளதேசம், யுக்ரேன், சிரியா, ஈரான், பாகிஸ்தான், இந்தியா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் குழப்பங்கள், ஆட்சி மாற்றங்கள் மற்றும் தனி நபர்களின் நலன்கள் ஆகியவற்றுக்காக யூஎஸ்எய்ட் நிறுவனத்தின் 26 கோடி டொலர் பணம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ட்ரம்ப் அந்த டுவிட்டர் குறிப்பில் குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால், அவர் அதற்கு அதரங்கள் எதனையும் வெளியிடவில்லை. என்னும் 2022இல் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட போது, அது வெளிநாட்டு சதியொன்றின் காரணமாகவே இடம்பெற்றதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் கூறினர்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் கோட்டாவின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தவருமான விமல் வீரவன்ச மேலும் ஒரு படி முன் சென்று அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் கோட்டாவின் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதில் முக்கிய பங்காற்றியதாகக் குற்றஞ்சாட்டினார்.
அந்த ஆட்சி மாற்றத்தின்த்தின் போது கோட்டாவைப் படுகொலை செய்யத் திட்டமிடப்பட்டு இருந்ததாகவும் விமல் கூறியிருந்தார். ஆயினும், அவரது கருத்துக்களை எவரும் பெரிதுபடுத்தவில்லை. பொருட்படுத்தவுமில்லை.
ட்ரம்ப்பின் டுவிட்டர் குறிப்பு வெளியான உடன் விமல் அவசரமாக ஊடகங்களை அழைத்து இலங்கையில் யூ.எஸ்.எய்ட் நிறுவனத்தின் நடவடிக்கைகளைப் பற்றி உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்.
ஆண்-பெண் என்ற இரு பாலினங்களைக் குறிக்கும் மொழிப் பாவனையைப் தவிர்ப்பதைப் பற்றி இலங்கையில் ஊடகவியலாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக (அதாவது ஓரினச் சேர்க்கை போன்றவற்றை ஊக்குவிப்பதற்காக) யூ.எஸ்.எய்ட் நிறுவனம் 79 இலட்சம் டொலர் செலவழித்துள்ளதாகவும் அவர் கூறினார். ஆயினும், அதற்கும் அவர் ஆதாரம் எதனையும் முன்வைக்கவில்லை.
யூ.எஸ்.எய்ட் நிறுவனத்தின் இலங்கை அலுவலகத்தின் இணையத்தளத்தில் அதன் சகல நடவடிக்கைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும் அரச எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு உதவி வழங்குவது தொடர்பாகவோ அல்லது இரு பாலி மொழிப் பாவனையைத் தவிர்ப்பது தொடர்பாகவோ அறிகுறிகளாவது அவ்விணையத்தளத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.
கோட்டாவின் ஆட்சி கவிழ்ப்பின் பின்னால் வெளிநாட்டுச் சதி இருந்ததாக மஹிந்த, கோட்டாபயவின் மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் கூறியிருந்தார். ட்ரம்ப்பின் டுவிட்டர் குறிப்பின் பின், அவரும் இலங்கையில் யூ.எஸ்.எய்ட் நிறுவனத்தின் நடவடிக்கைகளைப் பற்றி விசாரிக்க பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்று கோரி சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் கடந்த 14ஆம் திகதி பத்தரமுல்லையிலுள்ள பொதுஜன முன்னணியின் தலைமை காரியாலயத்துக்குச் சென்று அக்கட்சியின் தலைவர்களைச் சந்தித்து உரையாடினார். யூ.எஸ்.எய்ட் நிறுவனத்தின் நடவடிக்கைகளைப் பற்றி கணக்காய்வொன்றை நடத்துவதாக அவர் கூறியதாகப் பின்னர் பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கூறினார்.
இதேவேளை இலங்கையில் யூ.எஸ்.எய்ட் நிறுவனத்தின் நடவடிக்கைகளைப் பற்றி அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகத்துக்குப் பணிப்புரை வழங்கியுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருந்தார்.
அமெரிக்கா வெளிநாடுகளில் ஆட்சிக் கவிழ்ப்புக்காகச் சதி செய்யாத நாடல்ல. அமெரிக்க உளவு நிறுவனமான மத்திய உளவு ஸ்தாபனம் (CIA) தலையிட்டு ஆசியா, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க ஆகிய பிராந்தியங்களில் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட பல அரசாங்கங்கள் கவிழ்க்கப்பட்டுள்ளன. சில நாடுகளில் அமெரிக்க உதவியில் கிளர்ச்சிகள் மற்றும் சதிகள் இடம்பெற்று இரத்த ஆறுகள் ஓடியிருக்கின்றன.
அமெரிக்க உதவி இல்லாதிருந்தால் தொலைக்காட்சியில் முழு உலகமே பார்த்திருக்கையில் காசா என்ற சன நெரிசல் மிக்க சிறு பிரதேசத்தைத் தரைமட்டமாக்கி பல்லாயிரக்கணக்கான மக்களைப் படுகொலை செய்து கொடூரமான இனச் சங்காரத்தில் ஈடுபட இஸ்ரேலால் ஒருபோதும் முடியாது.
ஆயினும், சகல அமெரிக்க அபிவிருத்தி உதவித் திட்டங்களும் உள்நோக்கம் கொண்டவையல்ல. இறுதியில் அமெரிக்க நலன்களே குறிக்கோள்களாக இருந்தாலும், பல உதவித் திட்டங்கள் தீயவையல்ல. இலங்கையில் கோட்டாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதற்கும் அமெரிக்க உதவித் திட்டங்களுக்கும் இடையே தொடர்புகள் இருந்ததாகத் தெரியவில்லை.
அது பொருளாதார நெருக்கடியைத் தாங்கிக்கொள்ள முடியாத மக்களின் எதிர்வினையாகும். எனவே, யூ.எஸ்.எய்ட் விவகாரத்தை அரசாங்கமும் மக்களும் திறந்த மனத்துடன் அணுக வேண்டும்.
You May Also Like