வெடுக்குநாறி மலையில் 5 மணியுடன் மட்டுப்படுத்தப்பட்ட சிவராத்திரி. இதனை சிவன்பகல் என்றே கூற வேண்டும். இங்கே அடக்கு முறைகள் பிரயோகிக்கப்படுகின்றது என சமூக செயற்பாட்டாளர் எஸ்.தவபாலன் தெரிவித்தார்.

தமிழர்களுடைய வரலாற்று இடமாகவும், வழிபாட்டு இடமாகவும் இருக்கின்ற வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாடுகள் இடம்பெற்றிருந்தது. வழிபாட்டின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

இந்துக்களுடைய முக்கிய விரதமாக திகழ்வது சிவராத்திரி சிவனுக்கு இரவு பொழுதிலே சிவனை நினைத்து விரதம் இருப்பது வழமை. ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் வரலாற்று தொன்மைமிகு ஆலயம். இந்த ஆலயத்தின் வழிபாட்டு உரிமைக்காக போராடிவரும் இந்நிலையில் தொடர்ச்சியாக நெருக்கடிகளுக்கு அப்பால் போராடி வருகின்றோம்.

கடந்த வருடம் இவ்விடத்தில் சிவராத்திரி வழிபாடு இடம்பெறும் போது பொலிஸார் மிகவும் மோசமான முறையில் வழிபாடுகளை நடாத்த விடாமல், திட்டமிட்டு பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி 13 நாட்கள் 8 நபர்களை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள்.

இம்முறை துரதிர்ஷ்டவசமாக 5 மணியுடன் மட்டுப்படுத்தப்பட்ட சிவராத்திரியாக இதனை ஒரு சிவன்பகல் என்றே கூற வேண்டும். இவ்விடத்தில் அடக்கு முறைகள் பிரயோகிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.

என்ன தான் நெருக்கடிகள் இருந்தாலும் எங்களுடைய தொன்மைகளையும், வழிபாட்டு உரிமைகளையும் யாரும் தீர்மானிக்க முடியாது. அது பொலிஸாராக இருக்கலாம், வேறு திணைக்களங்களாக இருக்கலாம் வழிபாட்டு உரிமைகளை தீர்மானிக்கின்ற உரிமை மக்களிடமே இருக்கின்றது.

அந்தவகையில் எம்மவர்களே வழிபாட்டு உரிமைகளை மட்டுப்படுத்துகின்ற செயற்பாடுகளில் இறங்கியுள்ளமை வேதனையை தருகின்றது. 5 மணியுடன் பூஜை வழிபாடுகளை நிறுத்தியமை கவலை தருகின்றது.

நாங்கள் போராடுவது வெறுமனே பொலிஸ், அரச திணைக்களங்களுக்கு எதிராக மட்டுமல்ல, இந்த மலையை மீட்பதற்காக மலையை நயவஞ்சகமாக தாரை வார்க்கின்ற செயற்பாடுகளை செய்பவர்களுக்கு எதிராகவும் போராட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது.

வெறுமனே சிவராத்திரி என்பதனையும் தாண்டி இவ் ஆலயத்திற்கு மக்கள் வரவேண்டும். இவ் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும், பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும், அவ்வாறு செய்வதனால் தான் இவ் ஆலயத்தை நாங்கள் பாதுகாக்க முடியும் என மேலும் தெரிவித்தார்.

Share.
Leave A Reply