-இரண்டாம் கட்ட பேச்சுக்கு ஹமாஸ் தயார்

இஸ்ரேலிய பணயக்கைதிகள் நால்வரின் உடல்களை ஹமாஸ் அமைப்பு ஒப்படைத்ததை அடுத்து இஸ்ரேலிய சிறைகளில் இருந்து நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் காசாவின் முதல் கட்ட போர் நிறுத்தத்தில் கைதிகள் பரிமாற்றங்கள் பூர்த்தியடைந்துள்ளன.

இதனையடுத்து இரண்டாம் கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க தயார் என ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. எனினும் தற்போதைய முதல் கட்ட போர் நிறுத்தத்தையே நீடிப்பதற்கு இஸ்ரேல் தரப்பு முயன்று வருகிறது.

ஹமாஸ் அமைப்பு கடந்த புதன்கிழமை இரவு எந்த விசேட நிகழ்ச்சியையும் நடத்தாது நான்கு பணயக்கைதிகளின் உடல்கள் அடங்கிய சவப்பெட்டிகளை செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்தது. இதனையடுத்து ஏற்கனவே விடுதலையை ஒத்திவைத்திருந்த 600க்கும் அதிகமான பலஸ்தீன கைதிகள் உட்பட நூற்றுக்கணக்காக பலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவித்தது.

பணயக்கைதிகள் விடுக்கப்படும் போது ஹமாஸ் போராளிகள் நடத்தும் விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இஸ்ரேல் பலஸ்தீன கைதிகளை விடுவிப்பதை ஒத்திவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆறு வாரங்கள் கொண்ட காசா முதல் கட்ட போர் நிறுத்தத்தின் ஏழாவது மற்றும் கடைசி கைதிகள் பரிமாற்றம் இதுவாக இருந்தது.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட பலஸ்தீனர்களில் 459 பேர் வரை நேற்று காசா பகுதியை அடைந்துள்ளனர். 97 பேர் எகிப்துக்கு நாடு கடத்தப்பட்டதோடு 37 பேர் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையையும் ஐவர் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூசலத்தையும் அடைந்துள்ளனர்.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட பல பலஸ்தீனர்களின் உடல்களில் சித்திரவதை, தாக்குதலுக்கு உள்ளனதற்கான அடையாளங்கள் இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. தாம் சித்திரவதைகளுக்கு முகம்கொடுத்ததாக இவ்வாறு விடுதலை பெற்ற அலா அல் பயாரி, காசா நகரில் இருந்து அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

‘நாம் நிர்வாணமாக வைக்கப்பட்டு தண்ணீரால் பீச்சியடிக்கப்பட்டோம். தொடர்ந்து எம் மீது மின்சாரம் செலுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டோம்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை பெற்று ரமல்லா நகரை வந்தடைந்த யஹ்யா ஷ்ரிதா, இஸ்ரேல் சிறைச்சாலை ஒரு மயானம் என்று வர்ணித்துள்ளார். ‘நாம் துன்பங்களில் இருந்து மீட்கப்பட்டிருக்கிறோம்.

இது எமது கல்லறைகளில் இருந்து எம்மை தோண்டி எடுத்தது போன்று இருக்கிறது. நாம் கடந்து வந்ததை கூறுவது மிகக் கடினமாக உள்ளது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றை எட்டும் முயற்சியாகவே இரண்டாம் கட்ட போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டி உள்ளது. முதல் கட்டம் விரைவில் முடிவுக்கு வரவுள்ள நிலையில் இன்னும் இரண்டாம் கட்டத்திற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவில்லை.

காசாவில் தொடர்ந்து சுமார் 59 பணயக்கைதிகள் வரை இருப்பதோடு அவர்களில் பாதி அளவானவர்கள் உயிரிழந்திருப்பதாக நம்பப்படுகிறது. எனினும் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றின் மூலம் மாத்திரமே எஞ்சிய பணயக்கைதிகளை விடுவிக்க முடியும் என்று ஹமாஸ் அமைப்பு நேற்று கூறியது.

‘போர் நிறுத்த உடன்படிக்கையின் பொறுப்புகளை நாம் முழுமையாக உறுதி செய்வதோடு இரண்டாம் கட்ட உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைக்கு செல்வதற்கு நாம் தயாராக உள்ளோம்’ என்று அந்த அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள 59 பணயக்கைதிகளின் விடுதலைக்கு முன்னுரிமை அளிப்பதாக இஸ்ரேல் வலுசக்தி அமைச்சர் எலி கொஹேன் கூறியபோதும், காசாவை ஹமாஸிடம் விட்டுவிட்டால் இரண்டாம் கட்ட போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்று எட்டப்படாது என்றார்.

‘எமது கோரிக்கை தெளிவானது’ என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை உறுப்பினர் ஒருவரான கொஹேன் அரச வானொலியான கேனுக்கு குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் ஆதரவை பெற்றிருப்பதால் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் வலுவான நிலையில் இருப்பதாக கொஹேன் கூறியுள்ளார்.

குறிப்பாக காசாவில் மீண்டும் போரை ஆரம்பிப்பதற்கு தனது கூட்டணி அரசில் அழுத்தத்தை எதிர்கொண்டிருக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தற்போதைய முதல் கட்ட போர் நிறுத்தத்தையே தொடர்ந்து நீடிக்க விருப்பத்தை வெளியிட்டு வருகிறார்.

எட்டப்பட்டிருக்கும் காசா உடன்படிக்கையின்படி போர் நிறுத்தம் மூன்று கட்டங்களாக இடம்பெறவுள்ளதோடு இதன் இரண்டாவது கட்டம் காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதையும் மூன்றாவது கட்டம் அந்தப் பகுதியை மீளக் கட்டியெழுப்புவதையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.

காசாவில் 15 மாதங்களுக்கு மேல் நீடித்த போரில் இஸ்ரேல் இடைவிடாது நடத்திய தாக்குதல்களில் 48,300க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டு காசா பகுதி முற்றாக இடிபாடுகளாக மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply