• கிரிப்டோ கரன்சியில் பல மடங்கு லாபம் கொடுக்கிறோம் என்று கூறி, இந்தியா முழுவதும் சுமார் 50 கோடி வரை கொள்ளையடித்த கும்பலை கைது செய்திருக்கும் புதுச்சேரி சைபர் க்ரைம் போலீஸார், இந்த வழக்கு தொடர்பாக நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வாலுக்கு சம்மன் அனுப்பி இருக்கின்றனர்.
கிரிப்டோ கரன்சி டிரேடிங்
புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த அசோகன், முன்னாள் அரசு ஊழியர். சில மாதங்களுக்கு முன்பு `கிரிப்டோ கரன்சியில் உங்கள் பணத்தை முதலீடு செய்யுங்கள்.
குறுகிய நாட்களிலேயே பல மடங்கு லாபத்தை தருகிறோம்’ என்று வாட்ஸ்-அப்பில் வந்த தகவலைப் பார்த்த இவர், அதில் பல்வேறு தவணைகளாக ரூ.98 லட்சத்தை முதலீடு செய்திருக்கிறார்.
கைது செய்யப்பட்டவர்களுடன் புதுச்சேரி சைபர் க்ரைம் போலீஸார்
அதையடுத்து அவருக்கென தொடங்கப்பட்ட கணக்கில் கிரிப்டோ கரன்சி மூலம் கிடைத்த லாபமாக ரூ.9 கோடி வரவு வைக்கப்பட்டிருந்தது. பணத்தை நல்ல முதலீட்டில் போட்டிருக்கிறோம் என்று சந்தோஷமான அசோகன், 9 கோடியை எடுப்பதற்கு முயற்சித்திருக்கிறார். அப்போதுதான் மோசடிக் கும்பலால் தான் ஏமாற்றப்பட்டதையும், அது போலி கணக்கு என்பதையும் உணர்ந்திருக்கிறார்.
அதையடுத்து சைபர் க்ரைம் போலீஸில் அதுகுறித்துப் புகாரளித்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீஸார் அசோகன் செய்த பணப்பரிமாற்றங்கள்,
அதன் வங்கிக் கணக்குகள் போன்றவற்றை ஆய்வு செய்தனர். அப்போது புதுச்சேரியில் மேலும் 9 பேரை இதேபோன்று ஏமாற்றி ரூ.3.4 கோடியை கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது.
மேலும் கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த இந்த மோசடிக் கும்பல் கொடுத்த கிரிப்டோ கரன்சி, எந்த விதமான கிரிப்டோ கரன்சி டிரேடிங் ஆப்களிலும் வரவில்லை என்பதும் தெரியவந்தது.
அதேபோல பணத்தை நேரடியாக இவர்கள் `ஹைபை சர்க்கிள்’ என்ற ஒரு வங்கிக் கணக்கில் வரவு வைத்திருக்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய குற்ற விசாரணைப் பிரிவின் சீனியர் எஸ்.பி நார சைதன்யா, “டி.சி.எக்ஸ் என்பது கிரிப்டோ காயின்களில் ஒன்று.
அந்த காயினை அனுப்புகிறோம் என்று புதுச்சேரி நபர்களிடம் சொன்ன மோசடிக் கும்பல், அதற்கு பதிலாக இவர்களாகவே உருவாக்கிய ஒரு கரன்சியை அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆனால் அது போலியாக உருவாக்கப்பட்ட காயின் என்பதால் இவர்களால் எங்கேயும் விற்க முடியவில்லை.
ஹாஷ்பே விழாவில் நடிகை காஜல் அகர்வால்
பணமாகவும் மாற்ற முடியவில்லை. என்ன செய்வதென்று குழம்பிய இவர்கள், அவர்களின் வெப்சைட் மூலம் தொடர்புகொள்ள முயற்சித்திருக்கிறார்கள்.
ஆனால் அதற்குள் அந்த வெப்சைட்டையே முடக்கிவிட்டு தலைமறைவாகிவிட்டது மோசடிக் கும்பல். கோயம்புத்தூரில் அலுவலகம் நடத்தி வந்த இந்தக் கும்பல் மீது, டெல்லி, ஒரிசா, மகாராஷ்டிரா, மும்பை, பெங்களூர், ஆந்திர பிரதேஷ், கேரளா, விழுப்புரம், திருப்பூர் என இந்தியா முழுவதும் சுமார் 60 கோடி வரை கொள்ளையடித்திருக்கிறார்கள்.
இப்படியான மோசடி வழக்கில் இந்தக் கும்பலைச் சேர்ந்த இம்ரான் பாஷா என்பவர் ராய்ப்பூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டிருப்பதும் தற்போது தெரிய வந்திருக்கிறது.
புதுச்சேரி சைபர் க்ரைம் பிரிவில் இருக்கும் நவீன சாஃப்ட்வேர்கள் மூலம், மோசடி நபர்களின் விபரங்களை சேகரித்தோம்.
அதனடிப்படையில் கோயமுத்தூருக்குச் சென்று நித்தீஷ் ஜெயின், அரவிந்த் என்ற இரண்டு நபர்களை கைது செய்திருக்கிறோம்.
பாபு (எ) சையது உஸ்மான், இம்ரான் பாஷா
மேலும் இந்த மோசடியில் தொடர்புடைய கோயம்புத்தூரைச் சேர்ந்த தாமோதரன், நூர்முகமது, சந்தானம், இம்ரான் பாஷா, நந்தியப்பன், கணேசன், ஆலியா ரேஷ்மாபர்வீன், அன்சார், லுக்மான் போன்றவர்களை தேடி வருகிறோம்.
சுமார் 50 கோடி வரை மோசடி செய்த இந்தக் கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட சையது உஸ்மான் என்ற பாபு மற்றும் இம்ரான் பாஷா இருவரையும் தேடி வருகிறோம்.
மேலும் இந்த மோசடிக் கும்பல் கடந்த 2022-ம் ஆண்டு சினிமா நடிகை தமன்னா உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களை வரவழைத்து கோயம்புத்தூரில் `ஹாஷ்பே’ (Hashpe – Tron Connect) என்ற நிறுவனத்தின் துவக்க விழாவைமிக பிரமாண்டமாக நடத்தியிருக்கிறது.
அதையடுத்து மகாபலிபுரத்தில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் நடிகை காஜல் அகர்வாலை அழைத்து, முதலீடு செய்த 100 பேருக்கு கார்களை பரிசளித்திருக்கிறது.
முதலீட்டுத் தொகைக்கு ஏற்றவாறு ரூ.1 கோடியில் இருந்து, ரூ.10 லட்சம் வரை மதிப்பிலான கார்களை பரிசாக வழங்கியிருக்கிறது.
அத்துடன் இல்லாமல் மும்பையில் ஒரு சொகுசு கப்பலில் மிகப்பெரிய விழாவை நடத்தி, அதன்மூலமும் ஆயிரக்கணக்கான மக்களிடம் நிதி என்ற பெயரில் கொள்ளையடித்திருக்கிறது இந்தக் கும்பல்.
நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வாலுக்கு எந்த வங்கிக் கணக்கில் இருந்து பணம் சென்றது, அவர்களை விழாவுக்கு அழைத்தது யார் என்பது குறித்து பாபு (எ) சையது உஸ்மான், இம்ரான் பாஷா இருவரிடமும் விசாரணை செய்ய இருக்கிறோம்.
அதேபோல நடிகை தமன்னா மற்றும் காஜல் அகர்வாலுக்கும் சம்மன் அனுப்ப இருக்கிறோம். கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கொடுக்கிறோம் என்று சமூக வலைத்தளங்களில் தற்போது நிறைய விளம்பரங்கள் தற்போது வருகின்றன.
அப்படியான விளம்பரங்களை நம்பி ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து, கடந்த ஆண்டு புதுச்சேரியில் ரூ.25 கோடியை மக்கள் இழந்திருக்கிறார்கள்.
உடனடி லோன், முதலீடு செய்தால் அதிகம் லாபம், கிரிப்டோ கரன்சியில் அதிக லாபம் என்று வருகின்ற அனைத்து விளம்பரங்களுமே,
இணைய வழி மோசடிக் கும்பலால் ஜோடிக்கப்பட்டது என்பதை பொதுமக்கள் உணர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை இப்படியான மோசடிக் கும்பலிடம் இழக்க வேண்டாம்” என்றார்.