2 ஆண்டுகளை கடந்து நீடித்துக்கொண்டிருக்கும் உக்ரைன் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவேன் என அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கும் டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தொடர்ந்து பேசி வந்தார். இதை தொடர்ந்து டிரம்ப் பதவிக்கு வந்த பின்னர் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்பாக அமைதியை ஏற்படுத்த அமெரிக்காவும் ரஷ்யாவும் உயர்மட்ட மத்தியஸ்தக் குழுவை நியமித்தன.
அதன் ஒரு பகுதியாக கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி துபாயில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, அமெரிக்க மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்கோப், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ஸ், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ரஷ்ய அதிபர் புடினின் வெளியுறவு கொள்கை ஆலோசகர் யூரி உஷாகோவ் மற்றும் பிற உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மிக முக்கியமாக இந்த கூட்டத்தில் போரின் மற்றொரு தரப்பான உக்ரைன் சார்பாக யாரும் கலந்துகொள்ளவில்லை.
உக்ரைன் தரப்பு இல்லாமலேயே நடைபெற்ற இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நிராகரித்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும் அறிவித்தார். இந்த நிலையில்தான் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவது தொடர்பான கருத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை முகத்திற்கு நேராகவே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக சாடினார், மேலும் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெலன்ஸ்கியை டிரம்ப் வெறுக்க காரணம் என்ன?
ஜெலன்ஸ்கி மீது டிரம்ப் இவ்வளவு கோபத்தை வெளிப்படுத்த தற்போதைய சூழல் மட்டுமே காரணம் அல்ல. 5 ஆண்டுகளுக்கு முன்பு டிரம்பின் தனிப்பட்ட கோரிக்கைக்கு ஜெலன்ஸ்கி மறுப்பு தெரிவித்திருந்ததுதான் இப்போதைய நடவடிக்கைக்கு காரணம் என கூறுகிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.
2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக டிரம்ப் முதன்முதலில் பதவியேற்ற போது, அந்த தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இதற்கிடையே அமெரிக்க அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ரஷ்யாவை சேர்ந்த ஹேக்கர்கள் ஜனநாயக கட்சியின் மின்னஞ்சல்களை வெளியிட்டதாக கூறப்பட்டது.
வெளியே கசிந்த அந்த மின்னஞ்சலில் 2016 தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக பெர்னி சாண்டர்ஸ்க்கு பதில் ஹிலாரி கிளிண்டன் வர வேண்டும் என கட்சி தலைமை விரும்பியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது தேர்தலில் குடியரசு கட்சியினர் மத்தியிலேயே அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் அந்த தேர்தலில் டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் தோல்வியை சந்தித்தார்.
இருப்பினும் டிரம்ப் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தார். ரஷ்யா மீது அவதூறுகளை வீச உக்ரைன் ஹேக்கர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இதுதொடர்பாக ஜெலன்ஸ்கியிடம் தொலைபேசியில் பேசிய டிரம்ப் இந்த விவகாரம் தொடர்பாக உக்ரைனில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் சம்பந்தபட்ட ஆவணங்களை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இருப்பினும் இதற்கு மறுப்பு தெரிவித்த ஜெலன்ஸ்கி, இந்த விவகாரத்தில் விசாரணை நடத்துவது உக்ரைனின் தலையீடு தொடர்பான கருத்துருவாக்கத்திற்கு மேலும் வலுசேர்க்கும் எனக்கூறி இறுதி வரை விசாரணை நடத்த மறுப்பு தெரிவித்துவிட்டார்.
நீடிக்கும் பகை..
டிரம்ப் ஜெலன்ஸ்கியிடம் இந்த உதவி மட்டும் கேட்கவில்லை. 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனுக்கு எதிராக முக்கிய குற்றச்சாட்டை டிரம்ப் முன்வைத்தார். அதாவது ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் புரிஸ்மா என்ற உக்ரேனிய தனியார் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் இருந்தார்.
இந்த நிறுவனத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளை 2016 ஆம் ஆண்டு பைடன் துணை அதிபராக இருந்தபோது தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஹண்டர் பைடன் மீதான விசாரணையை உடனே நடத்தி 2020 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பே ஜோ பைடன் மீது புகார்களை முன்வைக்க உதவ வேண்டும் என்றும் டிரம்ப் ஜெலன்ஸ்கியிடம் கேட்டுள்ளார்.
இந்த உதவிகளுக்கு மாற்றாக ஜெலன்ஸ்கிக்கு வெள்ளை மாளிகைக்கு அழைப்பு மற்றும் உக்ரைனுக்கு கிட்டத்தட்ட 400 மில்லியன் டாலர் இராணுவ உதவியும் வழங்கப்பட்டது. இதற்கிடையே இந்த விவகாரம் வெளியே கசிந்து தனது அதிகாரத்தை சொந்த நலனுக்காக தவறாக பயன்படுத்தியதாக டிரம்ப் அதிபராக இருந்தபோதே அவர் மீது இம்பீச்மெண்ட் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இவ்வளவு நடந்த பின்னரும் கூட ஜெலன்ஸ்கி ஹண்டர் பைடன் மீதான விசாரணையையும் தொடங்கவில்லை டிரம்பும் அந்த தேர்தலில் தோல்வியை சந்தித்தார்.
இதனால் டிரம்ப் மட்டுமல்ல அவரது ஆதரவாளர்களுமே 2020 முதலே ஜெலன்ஸ்கி மீது கடும் கோபத்தில் உள்ளனர். டிரம்ப் மீதான இம்பீச்மெண்ட் நடவடிக்கை, 2020 தேர்தலில் டிரம்ப் தோல்வி போன்ற நிகழ்வுகளுக்கு அவர்கள் ஜெலன்ஸ்கியை அவர்கள் காரணமாக பார்த்தனர். அதன் தொடர்ச்சிதான் இப்போது டிரம்ப் மீண்டும் அதிபரானதில் இருந்து ஜெலன்ஸ்கி மீது அமெரிக்கா கடுமையாக நடந்துகொள்ள காரணம் என்றும் கூறப்படுகிறது.