கணவனைக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்து இரு சக்கர வாகனத்தில் எடுத்துச்சென்று தெருவில் வீசிய மும்பை பெண் கைது செய்யப்பட்டார்.

மும்பையில் தனக்குச் சாப்பாடும், தங்க இடமும் கொடுத்த நண்பருக்கு வாலிபர் ஒருவர் துரோகம் செய்துள்ளார்.

மும்பை மலாடு மால்வானி காவ்தேவி பகுதியில் வசித்து வந்தவர் ராஜேஷ் சவான். இவரது மனைவி பூஜா. இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.

இவர்களது வீட்டில் இம்ரான் மன்சூரி (26) என்பவர் தங்கி இருந்து கூலி வேலைக்குச் சென்று வந்தார்.

இம்ரானும், ராஜேஷும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இம்ரான் மும்பைக்கு வந்தபோது தங்க இடமில்லாமல் இருந்தார்.

இதையடுத்து அவருக்குத் தங்க இடம் கொடுத்து, சாப்பாடும் கொடுத்து வேலையும் வாங்கிக்கொடுத்தார். ராஜேஷ் வீட்டில் இம்ரான் தங்கி இருந்தபோது பூஜாவுடன் தொடர்பு ஏற்பட்டது.

இதையடுத்து ராஜேஷைக் கொலை செய்ய பூஜாவும் இம்ரானும் முடிவு செய்தனர். நேற்று முன் தினம் இரவில் ராஜேஷ் வீட்டிற்கு வந்ததும் அவரைப் பூஜாவும், இம்ரானும் சேர்ந்து அவருக்கு மது குடிக்கக் கொடுத்தனர்.

அளவுக்கு அதிகமாக ராஜேஷ் மது குடித்ததும் அவரைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்தனர். இரண்டு குழந்தைகள் கண் முன்பு இந்த சம்பவம் நடந்தது.

கொலைக்குப் பிறகு ரத்தத்தைக் கழுவிவிட்டு உடலை இரு சக்கர வாகனத்தில் உடலை ஏற்றிக்கொண்டு எடுத்துச் சென்றனர்.

அரை கிலோ மீட்டர் சென்றவுடன் பிடிபட்டுவிடுவோம் என்று பயத்தில் உடலை அப்படியே தெருவில் போட்டுவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டனர். வீட்டிற்கு வந்த பிறகு இருவரும் போலீஸ் நிலையத்திற்குச் சென்று ராஜேஷைக் காணவில்லை என்று கூறி புகார் செய்தனர்.

அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். போலீஸார் ராஜேஷ் வீட்டிற்கு அருகில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது ராஜேஷ் உடலை இரு சக்கர வாகனத்தில் ஏற்றி, பின்னால் பூஜா அமர்ந்து கொண்டு செல்வது பதிவாகி இருந்தது. போலீஸார் இது குறித்து விசாரித்தபோது இரண்டு பேரும் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்தனர்.

 

தீவிர விசாரணையில் ராஜேஷைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இரண்டு பேரையும் கைது செய்து போலீஸார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர். ராஜேஷ் வீட்டிற்கு ஆய்வாளர் சைலேந்திரா சென்றபோது கொலையை நேரில் பார்த்த இரண்டு மைனர் குழந்தைகளும் அதிர்ச்சியிலிருந்தனர்.

Share.
Leave A Reply