வடக்கு, கிழக்கு தமிழ் பாரம்பரிய பிரதேசங்களில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரான இன்றைய காலகட்டத்தில் பௌத்த அடிப்படை வாதிகள் விகாரைகளை அமைத்து ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை வேகமாக ஈடுபட்டுவருகின்றனர்.

பௌத்த துறவிகளுக்கு ஒத்தாசையாக இராணுவமும், பாதுகாப்பு தரப்பினரும் செயற்படுவதாக வடக்கு, கிழக்கு பிரதேச மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கட்டிக்காட்டுகின்றனர்.

இந்நிலையில், தையிட்டியில் புதிதாக கட்டப்படும் பௌத்த விகாரை காரணமாக மக்கள் கொதிதெழுந்துள்ளனர். ஆர்பாட்டங்களும் தொடர்கின்றன.

மக்களின் உணர்வுகளை மலினப்படுத்தும் வகையிலும் மதரீதியான கலவரங்களைத் தூண்டும் வகையிலும் புதிதாக விகாரைகள் முளைப்பதாக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

தமிழர் பகுதியில் விகாரைகள் எதற்கு? என மக்கள் கேட்கிறார்கள். மறுபுறம் அமைதியாக இருக்கும் வடக்கு, கிழக்கை சீர் குலைக்க சில மத வாதிகளும், இரைாணுவமும் முயல்கின்றனரா? என்ற கேள்வியும் மக்களால் எழுப்பப்படுகிறது.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இவ்விடயம் தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், இலங்கையிலுள்ள இந்தியா மற்றும் அமெரிக்க தூதரகங்களுக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடைபெறும் “தொல்லியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு ” குறித்து பட்டியல் ஒன்றை தயாரித்து அனுப்பிவைத்துள்ளதுடன், பாராளுமன்றத்திலும் அது தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன் விபரங்களைத் தருகிறோம்.

பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம்

தமிழர் தாயகத்தின் இதயபூமியான முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு ஆரம்பிக்கும் பிரதேசமான பழைய செம்மலைப் பகுதியில், காலாகாலமாக இருந்துவரும் இந்துக்களின் ஆலயமான பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை அபகரித்து அங்கு பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேதானந்த தேரர்

மேதானந்த தேரர் என்ற பௌத்த துறவியின் நெறிப்படுத்தலில், இலங்கைத் தொல்பொருளியல் திணைக்களத்தின் ஆதரவுடனேயே நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் இப் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

2009 இல் இறுதி யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் குறித்த ஆலயப்பகுதி இராணுவத்தினரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருந்த போது அங்கிருந்த புராதன அடையாளங்கள் முழுமையாக சிதைக்கப்பட்டிருந்தன.

அதன்பின் அப்பகுதியில் பௌத்தமயமாக்கல் துரிதப்படுத்தப்பட்டு இராணுவத்தினரின் உதவியுடன் பௌத்த மதகுரு ஒருவர் குடியேறியதைத் தொடர்ந்து இரவோடு இரவாக பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் புத்தர் சிலையொன்றும் வைக்கப்பட்டது.

2019 தைப்பொங்கல் தினத்தன்று நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து வழிபடச் சென்ற மக்கள், பௌத்த மதகுருவாலும், அவரது குழுவினராலும் தடுக்கப்பட்டனர்.

அதன்பின்னர் இவ் ஆலயத்தின் பெயர் கணதேவி ஆலயம் என்று மாற்றம் செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகள், மக்கள் எதிர்ப்பு போராட்டங்கள் என்பவற்றின் மூலம் மீளவும் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் எனும் புராதன பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இவ் விகாரையின் விகாராதிபதியாக இருந்த மேதாலங்கார கீர்த்தி தேரர், புற்றுநோய்த் தாக்கத்தால் 2019.09.21 ஆம் திகதி அமரத்துவம் அடைந்தபோது, ஆலய நிருவாகத்தினர் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பை மீறியும், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் தடையுத்தரவை மீறியும் குறித்த தேரரின் உடல், நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் தகனம் செய்யப்பட்டது. இது சைவ மக்களின் மத அனுட்டானங்களை மிகமோசமாக மலினப்படுத்தும் செயலாகவே அமைந்திருந்தது.

ஏற்கனவே இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பின் மூலமும் தமிழ் இனவழிப்பின் மூலமும், மகாவலி அபிவிருத்தி எனும் போர்வையில் தமிழர்களின் பூர்வீக பூமியான மணலாறு பிரதேசம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு, அப்பகுதியில் வலிந்து சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டு அதை இன்று ஓர் தனிச் சிங்கள பிரதேச அலகாக மாற்றிவரும் சிங்கள அரச இயந்திரம், இவ் ஆலயப் பகுதியை ஆக்கிரமித்துள்ளதன் மூலம் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பொன்றை துல்லியமாக அரங்கேற்றுவது மிகத்தெளிவாகத் தெரிகிறது.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம்

வவுனியா மாவட்டம், நெடுங்கேணி (வவுனியா வடக்கு) பிரதேச செயலாளர் பிரிவின், ஒலுமடு பாலமோட்டை கிராமத்தில் இருந்து கிட்டத்தட்ட 3Km தொலைவில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை, சுமார் 3000 ஆண்டுகால பழமையையும், வரலாற்றுச் சிறப்புக்களையும் கொண்டமைந்துள்ளது.

300 மீற்றர் உயரமான வெடுக்குநாறி மலை அடிவாரத்தின் கீழ் தமிழ் பிராமிய கல்வெட்டுக்கள் மற்றும் வட்டெழுத்துக்கள் போன்றவற்றைக் காணமுடியும். இம்மலையின் உச்சியில் ஆதி லிங்கேஸ்வரர் எனும் சிவனுடைய புராதன ஆலயம் அமைந்துள்ளது.

கிட்டத்தட்ட ஐந்து தலைமுறைகளைக் கடந்தும் இப்பிரதேச மக்கள் இந்த ஆலயத்தை வழிபட்டு வரும் நிலையில், அதனைக் கையகப்படுத்தும் கைங்கரியத்தை மேற்கொண்டுள்ள இலங்கைத் தொல்லியல் திணைக்களம், இவ்வாலயத்தில் பூஜை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தடை விதிக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்த போதும், அவ் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு 2020.09.17ஆம் திகதி ஆலய உற்சவத்தை வழமை போன்று நடாத்துவதற்கான நீதிமன்ற அனுமதி வழங்கப்பட்டதற்கமைய வருடாந்த ஆலய உற்சவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இதன்பின்னர் தொல்பொருளியல் திணைக்களத்தினரால், தொல்பொருட் சட்டத்தின் கீழ் வவுனியா நீதிமன்றில் மீளவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, அவ்வழக்கு நிலுவையிலுள்ள நிலையில், வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் மூலப் பரம்பொருளான சிவலிங்கம் உள்ளிட்ட அத்தனை விக்கிரகங்களும் அடியோடு பெயர்த்தெறியப்பட்டுள்ளமை கடந்த 2023.03.26 ஆம் திகதி கண்டறியப்பட்டது.

குறிப்பாக ஆலயத்தின் பிரதான விக்கிரகமான ஆதிலிங்கம் அடியோடு பெயர்த்தெடுக்கப்பட்டு அருகிலிருந்த புதருக்குள் வீசப்பட்டு ள்ளதோடு, பிள்ளையார், அம்மன், வைரவர் உள்ளிட்ட தெய்வ விக்கிரகங்களும் பெயர்த்தெடுக்கப்பட்டு காணாமலாக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சைவ அமைப்புக்கள், மதக் கட்டமைப்புக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் தனித்தனியாகவும், கூட்டாகவும் பல்வேறு எதிர்ப்புப் போராட்டங்களை மேற்கொண்டும், உடைக்கப்பட்ட விக்கிரகங்களை பிரதிட்டை செய்யவோ, மிகமோசமான மத வன்முறையை அரங்கேற்றிய மதவெறிக் கூட்டத்திற்கெதிராக நடவடிக்கை எடுக்கவோ இதுவரை அரசாங்கம் எந்தவொரு செயற்பாடுகளையும் கைக்கொள்ளவில்லை.

தொடரும்…

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

Share.
Leave A Reply