– காதலை கைவிட நினைத்த காதலுனுக்கு டீயில் எலி மருந்து கலந்து கொடுத்த பெண்ணை விழுப்புரம் மாவட்ட போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், கிரிமேடு கிராமத்தை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் ஜெயசூர்யா. இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ரம்யாவும், இவரும் காதலித்து வந்திருக்கின்றனர்.

இவர்கள் காதல் விவகாரம் ஜெயசூர்யாவின் பெற்றோருக்கு தெரிய வந்திருக்கிறது. அதையடுத்து, `ரம்யா உனக்கு தங்கச்சி முறை. அதனால் இந்த காதல் விவகாரம் சரி வராது’ என்று அவர்கள் கண்டித்திருக்கின்றனர்.

அதை ரம்யாவிடம் கூறிய ஜெயசூர்யா, அவரிடம் பேசுவதையும் நிறுத்தியிருக்கிறார். அதை ஏற்றுக் கொள்ளாத ரம்யா, “நான் உன் தங்கச்சி கிடையாது. எப்போதும் உனக்கு லவ்வர்தான்” என்று கூறி வந்திருக்கிறார்.

அப்படியும் அவர் பேசாததால், தன் கையை பிளேடால் கிழித்துக் கொண்ட ரம்யா அதை போட்டோ எடுத்து ஜெயசூர்யாவின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பியிருக்கிறார்.

அத்துடன், “நீ என்னுடன் பழைய மாதிரி பேசவில்லை என்றால், நான் இப்படியே செத்துவிடுவேன்” என்று கூறியிருக்கிறார்.

அதில் பயந்து போன ஜெயசூர்யா, ரம்யாவிடம் மீண்டும் பேச ஆரம்பித்தார். அதேசமயம் காதலியிடம் பேசுவதைப் போல இல்லாமல், சகோதரியுடன் பேசுவதைப் போல பேசி வந்திருக்கிறார். அதனால் ஜெயசூர்யா எப்படி இருந்தாலும் தன்னை விட்டுப் போய்விடுவார் என்று நினைத்திருக்கிறார் ரம்யா.

இந்த நிலையில்தான் பிப்ரவரி 2-ம் தேதி ஜெயசூர்யாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

அப்போது அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர், மருத்துவர்களின் ஆலோசனைப்படி அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டாலின் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

அப்போது குடும்பப் பிரச்னை காரணமாக தான் எலி பேஸ்ட் சாப்பிட்டுவிட்டதாக மருத்துவர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து ஜெயசூர்யாவிடம் விசாரணை செய்ய வந்த போலீஸாரிடமும் அதையே தெரிவித்திருக்கிறார். ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் ஜெயசூர்யாவுக்கு, ஒரு கிட்னி செயலிழந்திருக்கிறது.

அதனால் அவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டிருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக  ஜெயசூர்யா நிதானத்தை இழந்து வந்ததால், அவரால் செல்போனைக் கூட பார்க்க முடியவில்லை.

கைது செய்யப்பட்ட ரம்யா

இந்த நிலையில்தான் சில தினங்களுக்கு முன்பு அவரது செல்போனைப் பார்த்த பெற்றோர், அதில் ரம்யாவுடன் இருந்த வாட்ஸ்-அப் உரையாடலைப் பார்த்து அதிர்ந்திருக்கின்றனர். அந்த வாட்ஸ்-அப் உரையாடலில் ஜெயசூர்யாவுக்கு டீயில் விஷம் கலந்து கொடுத்ததாக ரம்யாவே தெரிவித்திருக்கிறார்.

அதையடுத்து தன் மகனுக்கு எலி மருந்து கலந்து கொடுத்த ரம்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் சரவணனிடம் புகாரளித்தார் ஜெயசூர்யாவின் தந்தை ஏழுமலை.

அதனடிப்படையில் ரம்யாவை கைதுசெய்த போலீஸார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்துப் பேசிய ஜெயசூர்யாவின் உறவினர்கள், “தங்கச்சி என்று தெரிய வந்ததால் ரம்யாவுடன் பேசுவதை ஜெயசூர்யா நிறுத்திவிட்டான்.

அதன்பிறகு அந்தப் பெண் செத்துவிடுவேன் என்று சொன்னதால் மறுபடியும் பேசினாலும், தங்கச்சி என்றே கூறியிருக்கிறான்.

இந்த நிலையில்தான் சம்பவத்தன்று, `உனக்கு டீ போட்டு தர்றேன். மொட்டை மாடிக்கு வா’ என்று ரம்யா கூப்பிட்டதால் ஜெயசூர்யாவும் சென்றிருக்கிறான். அங்கு அவனுக்கு டீ கொடுத்த ரம்யாவிடம் சிறிது நேரம் பேசியிருக்கிறான்.

அப்போது கூட, `நான் உன் தங்கச்சி இல்லை காதலிதான். நாம கல்யாணம் பண்ணிக்கலாம் என்று கூறியிருகிறார் ரம்யா. ஆனால் அதற்கு முடியாது என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டான் ஜெயசூர்யா.

அன்று இரவு அவனுக்குப் போன் செய்த ரம்யா, `உடம்பு எதாவது பண்ணுதா?’ என்று வாட்ஸ்-அப்பில் கேட்டிருக்கிறார். அதற்கு ஆமாம் என்று ஜெயசூர்யா கூற, `நீ என்னை வேணாம்னு சொன்னதால டீயில் எலி பேஸ்ட் கலந்துட்டேன்’ என்று பதில் அனுப்பியிருக்கிறார் ரம்யா. அதைக் கேட்டு அதிர்ந்து போன ஜெயசூர்யா, தன்னுடைய நண்பர்களிடம் கூறி மருத்துவமனைக்குச் சென்றான்.

அதன்பிறகுதான் எங்களுக்கும் தெரியும். அப்போது கூட ரம்யாவை காட்டிக் கொடுக்காமல், தானே எலிமருந்து சாப்பிட்டதாகக் கூறினான்.

இப்போது எங்கள் பிள்ளை ரொம்ப ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்” என்கிறார்கள் வேதனையுடன்.

 

Share.
Leave A Reply