யுக்ரேனுக்கு வழங்கும் ராணுவ உதவிகளை நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ ஒரு அறிக்கையின் மூலம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமையன்று ஓவல் அலுவலகத்தில் நடந்த காரசார விவாதம் நடந்த நிலையில், டிரம்ப் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ்-க்கு வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் அளித்த தகவலின் படி,” அமைதியில் கவனம் செலுத்துவது என்பதில் அதிபர் (டொனால்ட் டிரம்ப்)தெளிவாக உள்ளார்.

எங்களின் கூட்டாளிகளும் அந்த நோக்கத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். யுக்ரேனுக்கு எங்களின் உதவியை நிறுத்தி வைத்து, அது தீர்வு தருகிறதா என்பதை மறுஆய்வு செய்து வருகிறோம்” என கூறினார்.

புளூம்பெர்க் செய்தியின் படி, “யுக்ரேன் தலைவர்கள் அமைதிக்கு உறுதி பூணும் வரை அனைத்து ராணுவ உதவிகளையும் நிறுத்தி வைக்க டிரம்ப் முடிவெடுத்துள்ளார்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிறுவனத்தின் செய்திகளின்படி, யுக்ரேனுக்கு சென்றடையாத அனைத்து ராணுவ தளவாடங்களும் நிறுத்தப்படும். யுக்ரேனுக்கு சென்று கொண்டிருக்கும் ஆயுதங்களை அப்படியே நிறுத்தி வைப்பதுடன், போலந்தில் உள்ள ஆயுதக்கிடங்கில் இருந்து யுக்ரேனுக்கு சப்ளை செய்வதும் நிறுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், யுக்ரேனுக்கான ராணுவ உதவி நிறுத்தம் குறித்து உறுதியாக எதையும் தெரிவிக்கவில்லை. இது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர் “என்ன நடக்கிறது என பார்க்கலாம்” என்று மட்டுமே பதிலளித்திருந்தார்.

யுக்ரேன் ராணுவ உதவி எப்படி வேலை செய்கிறது?

யுக்ரேன் போரில் அமெரிக்காவின் ராணுவ உதவியின் நடைமுறை சிக்கலானது. ஆனால் இது மூன்று படிநிலைகளில் வேலை செய்கிறது.

அதிபர் நிதியளிப்பு ஆணையம் (The presidential drawdown authority)

வெளியுறவு அமைச்சகத்தின் அந்நிய ராணுவ நிதியளிப்பு (State Department Foreign Military Financing (FMF))

யுக்ரேன் பாதுகாப்பு உதவி முன்னெடுப்பு ( Ukraine Security Assistance Initiative (USAI))

“அதிபரின் நிதியளிப்பு ஆணையமானது அமெரிக்க ராணுவத்தின் சொந்த கையிருப்பில் இருந்து யுக்ரேனுக்கு ஆயுத உதவிகளை வழங்குவதை முடிவு செய்கிறது.

இதில் தோராயமாக 3.85 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை வழங்க முடியும்” என பிபிசியிடம் பேசிய அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த உதவியை வெள்ளை மாளிகையே நேரடியாகத் தீர்மானிக்கும்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் அந்நிய ராணுவ நிதியளிப்பு திட்டத்தின் கீழ் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் பணம் யுக்ரேனுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இது மானியமாகவோ, கடனாகவோ வழங்கப்படும். இந்த துறையானது வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவின் கட்டுப்பாட்டில் வரும்.

அமெரிக்க அரசின் “யுக்ரேன் பாதுகாப்பு உதவி முன்னெடுப்பு” (USAI) திட்டமானது அமெரிக்க உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக யுக்ரேனுக்கான ராணுவ தளவாடங்களை வாங்கும் திட்டத்திற்கு நிதியளிக்கிறது.

இவ்வாறு மூன்று கட்டங்களாக நிதி வழங்கப்படும் நிலையில், அமெரிக்காவின் அறிவிப்பு எந்த அளவுக்கு இந்த உதவித் திட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என தற்போது தெரியவில்லை.
யுக்ரேன், அமெரிக்க ராணுவ உதவி நிறுத்தம், டிரம்ப் – ஸெலன்ஸ்கி


படக்குறிப்பு, டிரம்பின் நம்பிக்கையை யுக்ரேன் பெறும் வரை உதவி நிறுத்தம் தொடரும் என கூறப்படுகிறது.

“போரை நிறுத்த டிரம்பால் மட்டுமே முடியும்”

யுக்ரேனுக்கான அமெரிக்க ராணுவ உதவி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை அறிக்கை மூலம் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ உறுதி செய்துள்ளார்.

“தற்போதுள்ள சூழலில் யுக்ரேனில் போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வர வாய்ப்புள்ள ஒரே தலைவர் டொனால்ட் டிரம்ப் மட்டும் தான்” என அவர் கூறியுள்ளார்.

“நாங்கள் ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என விரும்புகிறோம். அமைதி சாத்தியமானதா என ஆராய விரும்புகிறோம்” எனவும் ரூபியோ கூறியுள்ளார்.

டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து யுக்ரேனுக்கான ராணுவ உதவி நிறுத்தம் தொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மார்கோ ரூபியோ மூலம் வெளியாகியுள்ளது.
மார்கோ ரூபியோ , யுக்ரேன், அமெரிக்க ராணுவ உதவி நிறுத்தம், டிரம்ப் – ஸெலன்ஸ்கி


, “போரை நிரந்தரமான முடிவுக்கு கொண்டு வர வாய்ப்புள்ள ஒரே தலைவர் டொனால்ட் டிரம்ப் மட்டுமே”

பிரச்னையைத் தீர்க்க ஸெலன்ஸ்கியால் முடியுமா?

யுக்ரேனுக்கான ராணுவ உதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ள நிலையில், இந்த சூழலை ஸெலன்ஸ்கியால் சரி செய்ய முடியுமா? என வட அமெரிக்க செய்தியாளர் நோமியா இக்பால் ஆராய்ந்துள்ளார்.

“அதிபரிடம் மன்னிப்பு கேட்கலாமா? நிபந்தனையின்றி கனிம ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளலாமா?” என்ற கேள்விகளை முன்வைக்கும் நோமியா, டிரம்ப் நிர்வாகம் விரும்புவதும் அதுவாகத்தான் இருக்கும் என கூறியுள்ளார்.

“இந்த பிரச்னைக்கு ஸெலன்ஸ்கி காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறார், போதுமான அளவு நன்றி சொல்லவில்லை என பொய்யாகக் குற்றம் சாட்டுகின்றனர்.” என கூறும் நோமியா,

உதவியை நிறுத்தும் இந்த அசாதாரண நடவடிக்கை போரை எதிர்கொண்டுள்ள நாட்டின் தலைவருக்கு அழுத்தம் கொடுத்து வழிக்கு கொண்டு வருவதற்காகவே தெளிவாக வடிவமைக்கப்பட்டுள்ளது என கூறுகிறார்.

ஆனால் அத்தனைக்கும் ஸெலன்ஸ்கி ஏற்கெனவே ஒப்புக் கொண்டுள்ளதையும் நோமியா சுட்டிக்காட்டுகிறார்.

“கடந்த ஆண்டு பேட்டி அளித்த ஸெலன்ஸ்கி, ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் அப்படியே இருக்கட்டும் என ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் இதற்கு ஈடாக நேட்டோவில் உறுப்பினராக யுக்ரேன் சேர்க்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

நேட்டோவில் யுக்ரேனை சேர்த்துக் கொள்ள தயார் என்றால் பதவி விலகவும் தயாராக இருப்பதாக ஸெலன்ஸ்கி கூறினார்” எனவும் நோமியா கூறுகிறார்.

“ஆனால், நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் யுக்ரேனை சேர்க்க டிரம்ப் மறுத்தார். அதேநேரத்தில் ரஷ்யா என்னென்ன விஷயங்களில் விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது பற்றி டிரம்ப் ஒரு போதும் பேசவில்லை” எனவும் நோமியா கூறியுள்ளார்.

நிபந்தனையின்றி கனிம ஒப்பந்தத்தை யுக்ரேன் ஏற்க வேண்டும் என டிரம்ப் நிர்வாகம் விரும்புகிறது

ஸெலன்ஸ்கி மீது வான்ஸ் விமர்சனம்

யுக்ரேனுக்கான ராணுவ உதவி நிறுத்த அறிவிப்பு வெளியாகும் முன்பாக, ஃபாக்ஸ் நியூஸ்-க்கு பேட்டி அளித்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஓவல் அலுவலக சந்திப்பில் நடந்தது என்பது குறித்து விவரித்துள்ளார்.

இந்த பேட்டியின் போது நெறியாளர் சீன் ஹானிட்டியின் கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த சந்திப்பின் தொடக்கத்தில் அதிபர் டிரம்ப் முடிந்த வரையிலும் “ராஜதந்திர ரீதியாக” இருக்க முயற்சித்ததாக வான்ஸ் கூறியுள்ளார்.

“நான் நிலைமையை கொஞ்சம் தணிக்க முயற்சித்தேன்” எனக் கூறிய வான்ஸ், ஆனால் “ஸெலன்ஸ்கி, மரியாதை இன்றியும் உரிமை கொண்டவர் போலவும் இருந்தார்” என தெரிவித்தார்.

“அமைதிக்கான செயல்பாட்டில் தமது விருப்பமின்மையை ஸெலன்ஸ்கி தெளிவாகக் காட்டினார்” என கூறிய வான்ஸ் ஆனால் இறுதியில் “அவர் இறுதியில் அங்கு(அமைதிப் பேச்சுவார்த்தை) தான் வரவேண்டும்” எனவும் கூறினார்.

அமைதி பேச்சுவார்த்தைக்கு ஸெலன்ஸ்கி தயாராக இருந்தால், ஓவல் அலுவலகத்திலோ, வேறு எங்கேயோ பேச்சுவார்த்தை நடத்தலாம் என கூறியுள்ள வான்ஸ், அமைதி ஒப்பந்தத்தின் விவரங்களை விவாதித்து மறுக்கவும் செய்யலாம் என கூறினார்.

ஆனால் ஸெலன்ஸ்கியிடம் இருக்கும் பிரச்னை, பாதுகாப்பு உத்தரவாதங்களின்றி பேச்சுவார்த்தைக்கு வர அவர் மறுப்பது தான் எனக் கூறும் வான்ஸ், சமாதானத்திற்குப் பின்னர் பாதுகாப்புக்கான உத்தரவாதம் குறித்து பேசலாம் என்பது தான் வெள்ளை மாளிகையின் நிலைப்பாடு என தெரிவித்தார்.

முடிந்த வரையிலும் ராஜதந்திர ரீதியாக இருக்க டிரம்ப் முயற்சித்தார் – வான்ஸ்

“இந்த உதவி நிறுத்தமானது தற்காலிக ஏற்பாடு. ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு யுக்ரேன் முன்வரும் என்று டிரம்ப் நம்பும் வரை இந்த தடை தொடரும்” என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்ததாக வட அமெரிக்க செய்தியாளர் நோமியா இக்பால் கூறுகிறார்.

ஸெலன்ஸ்கி கோரும் பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்காமல், கனிம ஒப்பந்தத்தை உறுதி செய்வதுடன், ரஷ்யாவுடன் சமாதானத்தையும் ஏற்படுத்த வேண்டும் என டிரம்ப் நிர்வாகம் விரும்புகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதே நேரத்தில் அமெரிக்காவில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி, டிரம்பின் முடிவை விமர்சித்துள்ளது.

யுக்ரேனை கைவிட்டது வெட்கி தலைகுனிய வேண்டிய செயல் என்று ஜனநாயகக் கட்சி டிரம்ப் மீது குற்றம் சாட்டியுள்ளது.

அக்கட்சியைச் சேர்ந்த டக்வொர்த், டிரம்பின் இந்த முடிவு அமெரிக்காவின் பாதுகாப்பை வலுப்படுத்தாது என்று தமது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“இந்த நடவடிக்கை புதினையும், அமெரிக்காவின் எதிரிகளையும் துணிவடையச் செய்யும் அதே நேரத்தில் நமது ஜனநாயக கூட்டாளிகளுடனான உறவை பலவீனப்படுத்தும் ” என அவர் கூறியுள்ளார்.

இதேபோன்று ஜனநாயக கட்சியின் செனட் உறுப்பினரான பீட்டர் வெல்ச், ” புதின் ஒரு போர்க் குற்றவாளி, ஸெலன்ஸ்கி ஒரு கதாநாயகன். டிரம்ப் பலவீனமானவர் ” என தமது எக்ஸ் பக்கத்தில் எழுதியுள்ளார்.
யுக்ரேன், அமெரிக்க ராணுவ உதவி நிறுத்தம், டிரம்ப் – ஸெலன்ஸ்கி

டிரம்ப் நடவடிக்கையை ஜனநாயகக் கட்சி விமர்சித்துள்ளது.

அண்மையில், ஸெலன்ஸ்கியின் வாஷிங்டன் பயணம் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி.வான்ஸுடன் ஒரு சூடான கருத்து பரிமாற்றத்தில் உச்சக்கட்டத்தை அடைந்தது. டிரம்ப் ஸெலன்ஸ்கியை மூன்றாம் உலகப் போர் என்ற பேராபத்துடன் விளையாடுவதாக குற்றம் சாட்டினார்.

யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாகவும், ரஷ்ய அதிபர் புதின் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

யுக்ரேனை தவிர்த்து விட்டு ரஷ்யாவுடன் அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

அண்டை நாடான யுக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பை 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி தொடங்கியவர் புதின் என்றாலும், யுக்ரேன் போரைத் தொடங்கியதாக ஒரு கட்டத்தில் ஸெலன்ஸ்கியை டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Share.
Leave A Reply