அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்கா விரும்பும் எந்தவொரு போரிலும் சீனா தயாராக இருப்பதாக அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி யேற்றபின் முதல் முறையாக பாராளுமன்ற கூட்டு அமர்வில் உரையாற்றினார். அப்போது அவர், அமெரிக்காவின் பொற் காலம் தொடங்கிவிட்டது. அமெரிக்கர்களின் கனவை நனவாக்க உழைத்து வருகிறோம். 6 வாரங்களில் 100 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டேன். 400-க்கும் மேற்பட்ட நிர்வாக நடவடிக்கைகளை எடுத்து உள்ளேன்.
அமெரிக்கா மீது நியாயமற்ற வரிகள் விதிக்கப்படுகிறது. அமெரிக்காவுக்கு மற்ற நாடுகள் பல தசாப்தங்களாக அதிக வரிகளைப் விதித்து வருகின்றன. தற்போது அந்த நாடுகளுக்கு எதிராக கூடுதல் வரி விதிக்கும் நேரம் இது.
ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, சீனா, பிரேசில் மற்றும் பிற நாடுகள் நாம் வசூலிப்பதை விட மிக அதிக கட்டணங்களை நம்மி டம் வசூலிக்கின்றன. இது மிகவும் நியாயமற்றது.அமெரிக்காவிடம் இந்தியா வாகன வரி 100 சதவீதம் வசூலிக்கிறது. இது அமெரிக்காவிற்கு நியாயமில்லை.
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக ஏப்ரல் 2-ந்தேதி முதல் பரஸ்பர வரி விதிப்பு தொடங்குகிறது. மற்ற நாடுகள் நமக்கு என்ன வரி விதித்தாலும், அதே வரியை அவர்களுக்கு விதிப்போம் ” என்றார்.
டிரம்பின் வரி விதிப்பு கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சீனத் தூதரகம் அதிகாரப்பூர்வ பதிவை வெளியிட்டுள்ளது.
அந்த பதிவில், “ஃபெண்டானில் விவகாரத்தில் அமெரிக்கா உண்மையிலேயே தீர்வு காண விரும்பினால், அதற்கு சரியான வழி, மற்றவரை சமமாக நடத்துவதன் மூலம் சீனாவுடன் ஆலோசனை நடத்துவதே.
ஒருவேளை அமெரிக்கா போரை விரும்பினால், அது வரி விதிப்பு போர், வர்த்தகப் போர் அல்லது வேறு எந்த வகையான போராக இருந்தாலும் சரி இறுதி வரை போராட நாங்கள் தயார்” என்று அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
நாட்டின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்க சீனா எடுத்துள்ள நடவடிக்கைகள் சட்டப்பூர்வமானவை, அவசியமானவை. பெண்டானில் விவகாரத்தைப் பொறுத்தவரை அமெரிக்காவைத் தவிர வேறு யாரும் அதற்கு பொறுப்பு இல்லை.
அமெரிக்க மக்கள் மீதான மனிதாபிமானம் மற்றும் நல்லெண்ண உணர்வின் அடிப்படையில், அமெரிக்காவுடன் இணைந்து நாங்கள் வலுவான நடவடிக்கை எடுத்துள்ளோம்.எங்களின் முயற்சிகளை அங்கீகரிப்பதற்கு பதிலாக, அமெரிக்கா எங்கள் மீது பழி போட்டும், வரிகளை விதித்தும் சீனாவை அழுத்த முயற்சி செய்கிறது.
அவர்களுக்கு உதவியதற்காக அவர்கள் எங்களைத் தண்டிக்கிறார்கள். இது ஒரு போதும் அமெரிக்காவின் பிரச்சினையைத் தீர்க்கப் போவது இல்லை. மேலும் போதை பொருள் ஒழிப்புத் தொடர்பான நமது பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒத்துழைப்பை குறைத்தும் மதிப்பிடுகிறது.” என குறிப்பிடப்பட்டுள்ளது