யாழ்ப்பாணத்தில், மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்த வயோதிப பெண் தவறி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதித்த வேளை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் தெற்கை சேர்ந்த 79 வயதுடைய வயோதிப பெண்ணே உயிரிழந்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த வயோதிப பெண், கோப்பாய் அஞ்சல் அலுவலகத்தில் உதவி தொகை பெறுவதற்காக கடந்த மாதம் 17ம் திகதி சென்றுள்ளார்.
உதவி தொகை பெற்ற பின் நடந்து வீடு திரும்பி கொண்டிருந்த வேளை பெண்ணொருவர், வயோதிப பெண்ணுக்கு உதவும் முகமாக அவரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றியுள்ளார்.
இதன்போது, பின் இருக்கையில் இருந்த வயோதிப பெண் தவறி வீதியில் விழுந்துள்ளார்.
காயமடைந்த பெண்ணை உடனடியாக கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
வைத்தியசாலையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த வயோதிப பெண் நேற்று செவ்வாய்க்கிழமை (04) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.