குருந்தூர் மலை
முல்லைத்தீவு மாவட்டம், நெடுங்கேணி பிரதேசத்திலிருந்து வடகிழக்குத் திசையில் சுமார் 14 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள தண்ணிமுறிப்புக் குளத்தின் வடக்குப் பக்கத்தில் குருந்தூர் மலை உள்ளது.
இந்த மலை குருந்தனூர் மலை எனவும் அழைக்கப்படுகிறது. இம்மலையில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் காணப்பட்ட பழங்கால கட்டட இடிபாடுகளுக்கு மத்தியில் அங்கே ஆதி ஐயனார் எனும் சிவனை தெய்வமாக கருதி, அவ் ஆதி ஐயனாருக்கு பூசைகள் செய்து, படையல் வைத்து வழிபடும் முறையும் இந்து மக்களால் வழக்கமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இத்தகைய சூழ்நிலையில் அந்த இடத்துக்கு வந்த பௌத்த பிக்குகள் சிலர் மலையில் காணப்பட்ட இடிபாடுகளை பார்த்து, “இது எமது பௌத்த வழிபாட்டுக்குரிய இடம்” என கூறியதை தொடர்ந்தே, குருந்தூர் மலை தொடர்பான பிரச்சினைகள் ஆரம்பமாயின.
அதனையடுத்து அங்கு இராணுவத்தோடு இணைந்து தொல்பொருள் திணைக்களம் அகழ்வாராய்ச்சிப் பணி என்ற போர்வையில் அவ்விடத்தை பௌத்த மத அடையாளமாக மாற்றம் செய்வதற்காக முனைப்புக்களை மேற்கொள்வதை அறிந்து பல்வேறு மக்களால் எதிர்ப்பு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதுதொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் ‘குருந்தூர் மலையில் புதிய நிர்மாணப் பணிகள் எவையும் மேற்கொள்ளப் படக் கூடாது’ என 2022.07.19 மற்றும் 2022.11.24 ஆம் திகதிகளில் பிறப்பிக்கப்பட்ட நீதிமன்றக் கட்டளைகளை மீறி, புராதான சமயப் பண்பாடுகள் நிறைந்த தமிழர்களின் வரலாற்றுத்தலமான குருந்தூர் மலையின் ஆதி ஐயனார் ஆலய விக்கிரகங்கள் முழுமையாக அகற்றப்பட்டு, அவ்விடத்தில் மிகப்பெரிய அளவிலான பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது.
உருத்திரபுரம் சிவன் கோவில்
கிளிநொச்சி மாவட்டம், கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவின் ஆளுகைக்குட்பட்ட உருத்திரபுரம் கிராமத்தில், இந்துக்களின் பொற்காலமாகக் கருதப்படும் சோழர்காலத்தில் முற்றுமுழுதாக திராவிடக் கட்டடக் கலைமரபைப் பின்பற்றி கட்டப்பட்டு, மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன இயல்பாய் அமையப்பெற்ற உருத்திரபுர நாயகி உடனுறை உருத்திரபுரீஸ்வரர் சிவாலயம் என்னும் வரலாற்றுத் தொன்மையும், பழமையும் வாய்ந்த சிவாலயத்தை அபகரிப்பதற்கான முயற்சிகள் தொல்பொருளியல் திணைக்களத்தினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் தஞ்சைப் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள சதுரை ஆவுடையுடைய சிவலிங்கம் இலங்கையில் உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் மட்டுமே காணப்படுகின்றது. இந்து மத வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் வட்ட ஆவுடையுடைய சிவலிங்க வழிபாடு கி.பி.12ஆம் நூற்றாண்டு, பாண்டியர் ஆட்சிக்காலத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட்டதாகவும், அதற்கு காலத்தால் முற்பட்டதே சதுர ஆவுடையுடைய சிவலிங்க வழிபாட்டு மரபு என்பதும் பேராசிரியர் சி.வி.நவரட்ணம் அவர்களால் எண்பிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் உருத்திரபுரீஸ்வரர் ஆலயமும், அதன் சிவலிங்கமும் மிகத் தொன்மையானது என்பது தெளிவாகின்றது.
கடந்த 2021.01.30, 2021.01.31, ஆம் திகதிகளில் அவ் ஆலயத்திற்கு தொல்பொருள் திணைக்களத்தினர் வருகை தந்ததோடு 2021.03.16 ஆம் திகதி அவ் ஆலய வளாகத்தினை அகழ்வுக்கு உட்படுத்தப்போவதாகக் கூறி, ஆலயத்தின் நுழைவாயிலை அண்மித்த பகுதியிலுள்ள மண்மேட்டை அடையாளப்படுத்தியிருந்தனர்.
இதனடிப்படையில் 2021.03.23 ஆம் திகதி அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்கப்போவதாக தொல்பொருள் திணைக்களத்தினர் அறிவித்திருந்தததைத் தொடர்ந்து ஆலய அறங்காவலர் சபையினரோடு அப்பகுதி மக்களும் இணைந்து அகழ்வாய்வு என்ற போர்வையிலான இவ் ஆக்கிரமிப்புப் பணிகளை நிறுத்தக் கோரி 2021.03.22 ஆம் திகதி முதல் தொடர்ச்சியான எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் இவ் அகழ்வுப் பணி தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
எனினும், இதுகுறித்து தொல்பொருள் திணைக்களத்தால் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நிலுவையிலுள்ள நிலையில், இவ் ஆலயம் எப்போது வேண்டுமானாலும் ஆக்கிரமிக்கப்படலாம் என்ற நிலையே காணப்படுகிறது.
தொடரும்…
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்