புத்தளம், வைரங்கட்டுவ பகுதியில் உள்ள வீட்டொன்றில் பாதுகாப்பற்ற முறையில் கட்டப்பட்ட கழிவறைக் குழியில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒரு வயது மற்றும் இரண்டு மாதங்கள் வயதுடைய தினுகி ஹன்சிமா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று (06) மாலை இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

இந்தச் சிறுமி தனது மூத்த சகோதரி மற்றும் சகோதரனுடன் வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்தபோது, தாய் வீட்டுக்கு அருகில் உள்ள கழிவறைக்குச் சென்றுள்ளார்.

அதைக் கண்ட சிறுமி தாயைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

அப்போது, பாதுகாப்பற்ற முறையில் கட்டப்பட்ட கழிவறைக் குழியில் அவர் விழுந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, சிறுமி வீட்டில் இல்லை என்பதை அறிந்த தாய், அயலவர்களின் உதவியுடன் தனது சிறு மகளைத் தேடியுள்ளார். அப்போது, சிறுமி கழிவறைக் குழியில் விழுந்திருப்பதை அவர் கண்டுள்ளார்.

அவர்கள் வசிக்கும் வீட்டிலிருந்து சுமார் 3 அடி தொலைவில் இந்த பாதுகாப்பற்ற கழிவறைக் குழி அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக அந்தக் குழி நீரால் நிரம்பியிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் ஆரச்சிக்கட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, இந்தக் குடும்பத்தினால் வீடு மற்றும் கழிவறையை சரியாக அமைக்க முடியவில்லை என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

Share.
Leave A Reply