106 கிலோ மெத்தம்பெட்டமைன் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 3 தமிழர்களுக்கு இந்தோனேஷியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவில், சிங்கப்பூர் கப்பல் மூலமாக 106 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்திய வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ள 3 தமிழர்களுக்கு உதவ அந்நாட்டு இந்திய தூதரகம் முன் வந்துள்ளது.
கடந்த ஆண்டு மலேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு சென்ற சரக்குக் கப்பலான “லெஜண்ட் அக்வாரிஸ்” கப்பலில் 106 கிலோ மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் கடத்த முயன்றதாக, கடலூரை சேர்ந்த ராஜி முத்துக்குமரன், கோவிந்தசாமி விமலக்கந்தன் மற்றும் நாகப்பட்டினத்தை சேர்ந்த செல்வதுரை தினகரன் ஆகியோர் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு இந்தோனேஷியா நாட்டின் கேரிமுன் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அந்நாட்டு சட்டப்படி மரண தண்டனை விதிக்கக்கூடிய இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, 3 பேர் சார்பில் ஆஜரான சர்வதேச கடல்சார் சட்ட நிபுணர் சாலமன் பொன்டோ மற்றும் இந்திய வழக்கறிஞர் எம்.ஜான்பால் ஆகியோர், “கப்பல் கேப்டனுக்கு தெரியாமல் இது போன்று போதைப் பொருட்களை கப்பலுக்குள் பதுக்கி வைக்க முடியாது என்பதால் அவரிடம் விசாரணை நடத்த வேண்டியது அவசியம்” என வாதிட்டார்கள். மேலும், “பொய்யான குற்றச்சாட்டில் தமிழர்கள் 3 பேரும் சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும்” தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து கப்பல் கேப்டனை வரும் 11 ஆம் தேதி ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், 3 தமிழர்களுக்கு சட்ட ரீதியாக உதவுவதற்காக இந்தோனேஷியாவில் உள்ள இந்திய தூதரகம் 3 பேரின் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளது.