கர்நாடகாவில் இஸ்ரேல் சுற்றுலாப் பயணி உள்பட இரண்டு பெண்களை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதோடு, அவர்களைக் காப்பாற்ற வந்த ஒருவரைக் கொலை செய்தது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல் துறையினர் பிபிசிக்கு அளித்த தகவலின்படி, இஸ்ரேலை சேர்ந்த 27 வயது சுற்றுலாப் பயணி, 29 வயது உள்ளூர் பெண்ணின் வீட்டில் தங்கியிருந்தார்.

இவர்களுடன் அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் மற்றும் மகாராஷ்டிரா, ஒடிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என 3 ஆண்களும் உடன் சென்றிருந்தனர்.

மார்ச் 6ஆம் தேதி இரவு 10:30 மணிக்கு ஐந்து பேரும் ஹம்பி அருகே உள்ள சனாபூரில் இருக்கும் துர்கையம்மன் கோவிலுக்குச் சென்றபோது இந்தச் சம்பவம் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் சம்பவ இடத்திற்கு இரு சக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் எங்கு கிடைக்கும் எனக் கேட்டதாக பாதிக்கப்பட்ட உள்ளூர் பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு வழி காட்டிய பின்னர், குற்றம் சாட்டப்படும் மூவரில் ஒருவர் சுற்றுலாப் பயணிகளிடம் 100 ரூபாய் தரும்படி கேட்டுள்ளார். அவர்கள் தர மறுத்ததைத் தொடர்ந்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவர்களைத் தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

“அவர்கள் மூன்று ஆண்களையும் கால்வாயில் தள்ளினர். மூன்றாவது நபர் என்னை ஒரு கல்லால் தாக்கினார்.

எனக்கு ரத்தம் வழியத் தொடங்கியது. மூவரில் இருவர் என்னை கால்வாயின் பக்கமாக இழுத்துச் சென்று எனது உடைகளைக் கிழித்தனர். அதே போல் அவரையும் (இஸ்ரேல் சுற்றுலா பயணி) இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர்,” என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் கன்னடமும் தெலுங்கு மொழியும் பேசியதாக புகார் அளித்த பெண் தெரிவித்துள்ளார்.

கால்வாயில் தள்ளப்பட்டவர்களில் வெளிநாட்டவர் உள்பட இருவர் கரையேறிய நிலையில், ஒருவர் சடலமாக இன்று காலை கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது மற்றும் ஒருவரைக் கொலை செய்தது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“கைது செய்யபட்ட இருவரும் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த கொத்தனார்கள். மூன்றாவது நபரைத் தேடி வருகிறோம். அவரும் ஒரு கொத்தனார்தான்,” கொப்பல் காவல் கண்காணிப்பாளர் ராம் எல் அரசிடி பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.

“கொலை செய்யப்பட்டவரின் உடலை மீட்டுள்ளோம். கொலை முயற்சி வழக்குடன், கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளைச் சேர்த்துள்ளோம்,” என்று காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

“பெண்கள் பணத்தைப் பறிப்பதற்காகத் தாக்கப்பட்டிருக்கலாம். தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரும் கொப்பலின் கங்காவதி தாலுகாவை சேர்ந்தவர்கள்,” எனக் கூறினார்.

 

Share.
Leave A Reply