அமெரிக்க- உக்ரேனுக்கிடையிலான மோதல் போக்கு தணிந்து வருவதாக தெரிகின்றது. அடிப்படையில் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அதிக விட்டுக் கொடுப்புகளை மேற்கொள்ளுகின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா கூறுகின்ற உடன்பாட்டை எட்டுவதற்கு தயாராக இருக்கின்ற சூழல் மீளவும் அமெரிக்காவின் அணுகுமுறையை பலப்படுத்தியுள்ளது.

உக்ரைனுடைய பாதுகாப்பும் அமெரிக்காவின் கோரிக்கையான கனியவளப்பகிர்வுக்கும் இடையிலான சமரசம் எட்டுகின்ற நிலை ஒன்றை பெற்றிருப்பதாகவே தெரிகிறது.

அதனை அமெரிக்க காங்கிரஸில் (04.03.2025) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றுகின்ற போது வெளிப்படுத்தியுள்ளார். இக்கட்டுரையும் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றத்திற்கான காரணங்களை பற்றிய தேடலாக அமைய உள்ளது.

குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதல் தடவையாக அமெரிக்க காங்கிரஸில் அமெரிக்க ஜனாதிபதி உரையாற்றினார்.

‘அதன்போது உக்ரைன் ஜனாதிபதியிடமிருந்து முக்கியமான கடிதம் வந்துள்ளது என்றும் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்காக விரைவில் பேச்சுவார்த்தைக்கு வர உக்ரைன் தயாராக உள்ளது எனவும் கடிதத்தில் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டிருப்பதாக தெரிவித்ததோடு, நீடித்த அமைதியைப் பெற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வலுவான தலைமையின் கீழ் பணியாற்ற தயாராக இருப்பதாகவும் உக்​ரைனின் இறையாண்மையும் சுதந்திரத்தையும் பராமரிக்க அமெரிக்கா செய்த உதவிகளுக்கு மதிப்பளிப்பதாகவும் ஜெலன்ஸ்கி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என்றும் கனிமங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக ஒப்பந்தத்தை பொறுத்தவரை உங்களது (டொனால்ட் ட்ரம்ப்பின்) வசதியான எந்த நேரத்திலும் அதில் கையொப்பமிட உக்ரைன் தயாராக உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை தெரிவித்திருந்தார்.

இக் கடிதத்தை அனுப்பியதற்காக ஜெலன்ஸ்கியை பாராட்டுவதாக அமெரிக்க ஜனாதிபதி காங்கிரஸில் தெரியப்படுத்துள்ளார். இதே நேரம் ரஷ்யாவுடன் தீவிரமான விவாதங்களை நடத்தியதாகவும் அதற்கு அவர்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஜெலன்ஸ்கியின் அறிவிப்பிற்கு பின்னால் உள்ள அரசியலையும் அதன் விளைவுகளையும் அளவீடு செய்வது அவசியம். முதலாவது ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அமெரிக்கா ஜனாதிபதியுடன் ஏற்பட்ட முறுகலை அடுத்து மேற்கு ஐரோப்பிய நாடான இங்கிலாந்துக்கு விஜயம் செய்திருந்தார்.

இங்கிலாந்தில் நிகழ்ந்த ஐரோப்பிய தலைவர்களின் சந்திப்பில் கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்க அரசியலாக விவாதிக்கப்பட்டது.

அமெரிக்காவை விட்டு ஐரோப்பா விலகுவதாகவும் அமெரிக்கா தனிமைப்படுத்தப்படுவதாகவும் ஐரோப்பா தனியான வெளியுறவுக் கொள்கையை கட்டமைக்கப்போவதாகவும் நேட்டோ உடைவு தவிர்க்க முடியாது என்றும் விவாதங்கள் எழுந்தன.

விவாதங்களின் நிலைத்திருப்பு உக்ரைனை அமெரிக்காவிலிருந்து தனிமைப்படுத்தவும் அல்லது அமெரிக்கா இன்றிய உக்ரைனை அளவீடு செய்யவும் முடியாத நிலையை தெளிவுபடுத்தியுள்ளது.

இது ஐரோப்பிய நாடுகளின் பலவீனமாகவே தெரிகிறது. அமெரிக்கா இல்லாத ஐரோப்பியர்களும் உக்ைரனியர்களும் பொருளாதார ரீதியாக சுமைகளை தாங்கிக் கொண்டாலும், பாதுகாப்பு ரீதியில் அதிக ஆபத்துக்களை எதிர்கொள்வார்கள் என்ற நிலைப்பாடு ஜெலன்ஸ்கியின் அறிவிப்போடு முழுமை பெற்றுள்ளது. ஐரோப்பாவால் உக்ைரனை மட்டுமல்ல ஐரோப்பாவையே பாதுகாக்க முடியாது.

அமெரிக்கா இல்லாத ஐரோப்பா அதிக நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான சூழ்நிலையே கொண்டிருக்கின்றது.

அதனாலேயே ஐரோப்பாவை நம்பிக் கொண்டு உக்ரைன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது கடினம் என்பதை ஜெலன்ஸ்கி அறிவுபூர்வமாகவும் தந்திரோபாய ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் புரிந்துள்ளதாகவே தெரிகிறது. அமெரிக்கா இல்லாத உக்ரைன் ரஷ்யாவிடம் சரணடைந்து விடும் என்ற நிலைமை தெரிகிறது.

இதுவே ஜெலன்ஸ்கியின் மாறுபட்ட நிலைப்பாட்டிற்கு பிரதான காரணமாகியது.

இரண்டாவது உக்ரைன் மீதான நெருக்கடியை படிப்படியாக அதிகரிக்கவும் தனது பிடியிலிருந்து விலகாமலும் அமெரிக்க ஜனாதிபதியின் நகர்வுகள் அமைந்திருந்தன.

குறிப்பாக உக்ரைனுக்கான இராணுவ உதவிகளையும் புலனாய்வு தகவல் பரிமாற்றத்தையும் அமெரிக்கா நிறுத்துவது என்ற அறிவிப்பு வெளியானதும் உக்ரைன் மட்டுமல்ல ஐரொப்பாவே ஆட்டங்காண ஆரம்பித்துவிட்டது.

உக்ரைன் போர் ஐரோப்பிய இராணுவத்தில் புலனாய்வில் தங்கியிருக்க முடியாது என்பதை தெளிவாக உணர்ந்ததன் விளைவே கொள்கை மாற்றத்திற்கு காரணமாகும்.

இது உக்ரைன் இராணுவத்தை உளரீதியான பாதிப்புக்கு உள்ளாக்கி தோல்வியின் பக்கம் நகர்த்துவதாகவே அமையும் என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

இதனாலே அமெரிக்காவோடு சேர்ந்து பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஜெலன்ஸ்கிக்கு ஏற்பட்டது.

ஐரோப்பிய சக்திகள் பெரும் பிராயத்தனங்களை மேற்கொண்ட போதும் அமெரிக்காவுக்கு நிகரான பாதுகாப்பு மற்றும் இராணுவ புலனாய்வு அனுசரணையை உக்ரைனுக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் ஜெலன்ஸ்கி மறுத்த உடன்பாட்டை மீள மேற்கொள்வதற்கு தயாராக இருப்பதாக அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாக்கியது.

ஏறக்குறைய அமெரிக்காவிடம் சரணடைய வேண்டும் அல்லது ரஷ்யாவிடம் சரணடைய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் உக்ரைன் ரஷ்யாவிடம் சரணடைவதே அதன் எதிர்கால அரசியல் பொருளாதார இராணுவ இருப்புக்கு இலாபகரமானது.

அதனையே கிழக்கு ஐரோப்பிய புவிசார் அரசியல் உரைத்து நிற்கிறது.

மூன்றாவது நேட்டோ சார்ந்து எழுந்திருக்கும் முரண்பாடு என்பது உக்ைரனுக்கு மட்டுமானது அல்ல. முழு ஐரோப்பாவுக்கும் நேட்டோ பாதுகாப்பு அரணான அமைந்திருந்தது.

அத்தகைய பாதுகாப்பு அரணின் தலைமை சக்தியாக அமெரிக்காவே உள்ளது. ஏகாதிபத்தியங்கள் தமக்குள்ளே முரண்பாடுகளை தவிர்த்துக் கொண்டு உலகளாவிய வர்த்தக ஏகபோகத்தை கட்டமைத்துக் கொண்டிருந்த சூழலில் உக்ரைன் விவகாரம் நெருக்கடி மிக்க சூழலை ஏகாதிபத்தியங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் அமெரிக்காவினுடைய ஜனாதிபதியாக இரண்டாவது தடவை ஆட்சிப் பொறுப்பேற்ற டொனால்ட் ட்ரம்ப் அத்தகைய முரண்பாட்டை தோற்றுவித்து ஒரே ஏகாதிபத்தியக் கொள்கையை கட்டமைக்க முயன்றுவருகிறார்.

இதனால் ஏகாதிபத்தியங்கள் தமக்குள் மோதும் நிலை தவிர்க்க முடியாததாக ஆகிவிடும் என்ற எச்சரிக்கையும் ஐரோப்பியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனால் உக்ரைனை மீளவும்

அமெரிக்காவோடு பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்தவும் உடன்பாட்டை எட்டிக்கொள்ளவும் வழி வகுக்கும் விதத்தில் செயல்பட தொடங்கியுள்ளனர். அதற்கான உத்தியில் ஒன்றே உக்ரைன் — ஐரோப்பிய உச்சிமகாநாடு. இதுவே ஜெலன்ஸ்கியின் முடிவுகளுக்கான அடிப்படை காரணமாகவுள்ளது.

நான்காவது போரிலும் போர் சார்ந்த அரசியலிலும் ரஷ்யாவின் ஆதிக்கம் மேலும் ஓங்கியிருக்கின்றது.

அமெரிக்கா விலகுமானால் ரஷ்யா வேகமாக உக்ரைனை முழுமையாக கைப்பற்றுவதற்கான வாய்ப்பு காணப்படுகிறது.

அத்தகைய எதிர் நிலைச் சூழலில் அமெரிக்காவோடு இணைந்து சமாதான உடன்பாடு மட்டுமின்றி அமெரிக்கா கூறும் கனிமவளங்களை கைமாற்றுவதன் மூலம் உக்ரையின் இறைமையையும் பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்த முடியும் என ஜெலன்ஸ்கி கருதுகின்றார்.

இதே முன்னெடுப்பை கருதியே அவரது வெள்ளைமாளிகை பயணம் திட்டமிடப்பட்டது. தவிர்க்க முடியாமல் அவரது இராஜந்திர பலவீனமும் ராஜீக அணுகுமுறையின் பலவீமும் சேர்ந்து பாரிய நெருக்கடி ஒன்றை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது.

ரஷ்யாவை கட்டுப்படுத்துவது என்பதும் ரஷ்யா உக்ரைனை முழுமையாக கைப்பற்றாமல் தடுத்தல் என்பதும் அமெரிக்க- – உக்ரேனிய உறவில் தங்கியிருக்கின்றது. அதனை நோக்கி உக்ரைன் ஜனாதிபதி தற்போது நகரத் தொடங்கியுள்ளார்.

இது காலம் பிந்திய நகர்வாக இருந்தாலும் அதுவே உக்ரைனுக்கு சாதகமானது. உடன்பாடுகளும் ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்படுகின்ற மறுகணமே காணாமல் போவதும் கைவிடப்படுவதும் வழமையான ஒன்றாக உலக அரசியலில் காணப்படுகிறது.

பிரான்ஸ் அறிஞர் ஒருவர் குறிப்பிட்டது போல் கையெழுத்திடப்பட்ட உடன்பாட்டின் மை காயமுன்னர் உடன்பாடுகள் கிழித்தெறியப்படுகின்றன. இத்தகைய உலக அரசியல் ஒழுங்கிலேயே உக்ரைன்- – அமெரிக்க உடன்பாடு பற்றிய முடிவுகள் விவாதிக்கப்பட வேண்டும்.

ஐந்தாவது உக்ரைன்- – அமெரிக்க உறவு பலமடையும் போது ரஷ்யாவுக்கு அமெரிக்காவால் நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அதனால் ரஷ்யா முன்கூட்டியே உக்ரைனுடனான அணுகுமுறைகளில் மாற்றங்களை செய்வதோடு போரை தீவிரப்படுத்திவருகிறது.

போரின் நகர்வுகள் முதன்மை பெறுகின்ற போது அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்படவுள்ள கனிம ஒப்பந்தங்கள் சார்ந்து நெருக்கடி நிலை ஒன்று ஏற்பட வாய்ப்புள்ளது.

உக்ைரனும் அமெரிக்காவும் கனிமங்களை கை மாற்றுவது பற்றிய உடன்பாடு எட்டப்பட்டாலும் அதன் மீதான நடவடிக்கைகளை தடுக்கும் வழிமுறைழையை ரஷ்ய இராணுவம் கொண்டிருக்கும்.

அதனால் ரஷ்யாவின் கோரிக்கைக்கு அமெரிக்கா, உக்ரைனோடு சேர்ந்து கட்டுப்பட வேண்டிய தேவை தவிர்க்க முடியாதது என்ற அரசியலை நோக்கி ரஷ்ய ஜனாதிபதி புட்டினது நகர்வுகள் காணப்படுகின்றன.

அடுத்து வரும் வாரங்களில் உக்ரைன் மீதான போரை ரஷ்யா தீவிரப்படுத்த முயலும். அத்தகைய தீவிரத் தன்மையில் நின்று கொண்டு அமெரிக்காவுடனும் உக்ரைனுடனும் தனது கோரிக்கைகளை நிறைவு செய்து கொள்ளும். எனவே உக்ரைன் – அமெரிக்க முரண்பாட்டில் புதிய கட்டம் ஒன்றை நோக்கி ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் நகர வேண்டிய நெருக்கடியான சூழல் காணப்படுகிறது.

தவிர்க்க முடியாமல் அதில் மேற்கு ஐரோப்பா அமெரிக்காவுடன் சேர்ந்து நோட்டோவையும் மேற்கு ஐரோப்பாவின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதோடு உக்ரைனையும் அதன் இறைமையையும் சுதந்திரத்தையும் உத்தரவாதப்படுத்த வேண்டிய நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனை முறியடிக்கும் விதத்தில் அல்லது கையாளும் விதத்தில் ரஷ்ய ஜனாதிபதி புட்டினினது நகர்வுகள் தொடங்கியுள்ளன.

எதுவாயினும் ஐரோப்பாவும் உக்ரைனும் எடுத்திருக்கும் முடிவுகள் டொனால்ட் ட்ரம்ப்பின் அமெரிக்க கொள்கைகளை மேலும் பலப்படுத்துவதற்கான வாய்ப்பைத் தந்துள்ளது கிறீன்லாந்து, பானாமா கால்வாய் காஸா மற்றும் உக்ரைன் போன்றவற்றின் மீது அமெரிக்காவின் நவீன காலனித்துவ ஆதிக்க செய்முறை தொடரவுள்ளதை இது எடுத்துக் காட்டுகிறது.

ரீ.கணேசலிங்கம்-பேராசிரியர்-யாழ் பல்கலைகழகம்-

Share.
Leave A Reply