தாயின் கண்களிற்கு முன்னால் 75 வயது தந்தையும் மூன்று மகன்களும் கொல்லப்பட்டனர்

சிரிய பாதுகாப்பு படையினருக்கும் முன்னாள் ஜனாதிபதி அசாத்தின் அரசாங்கத்திற்கு ஆதரவான குழுவினருக்கும் இடையில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்றுவரும் மோதல் 750 பொதுமக்கள் உட்பட ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என சிரியாவின் மனிதஉரிமைகளை கண்காணிப்பதற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

கொலைகளும் பழிவாங்கும் கொலைகளும் இடம்பெறுவதாக சிரியாவின்  மனித உரிமைகளை கண்காணிப்பதற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

745 பொதுமக்கள் கைதுசெய்யப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்கள்,என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்துமாறுபட்டபுள்ளிவிபரங்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

சிரியாவின் லட்டாக்கியா மாகாணத்தில் உள்ள ஜப்லேயில் வியாழக்கிழமை அசாத் அரசாங்கத்திற்கு சார்பான ஆயுதகுழுவினர் அரசபடையினர் மீது தாக்குதலை மேற்கொண்டதை தொடர்ந்தே இந்த மோதல் மூண்டது.

மூன்று மாதத்திற்கு முன்னர் பசார் அல் அசாத் அரசாங்கத்தை பதவியிலிருந்து அகற்றிய ஹயட் தஹ்ரிர் அல்சாம் என்ற இஸ்லாமிய அமைப்பு எதிர்கொண்ட மிகப்பெரிய சவால் என கார்டியன் தெரிவித்துள்ளது.

பசார் அல் அசாத் சார்பு குழுவின் கிளர்ச்சியை முறியடிப்பதற்காக சிரிய அரசாங்கம் அந்த பகுதிக்கு மேலதிக படையினரை அனுப்பியது.

ஆயிரக்கணக்கானஅரசாங்க சார்பு படையினர் அந்த பகுதிக்கு விரைந்தனர்.

பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு தனிபட்ட நபர்களின் நடவடிக்கைகளே காரணம் எனதெரிவித்துள்ள சிரிய அரசாஙகம்,பெருமளவு ஆயுதமேந்திய நபர்கள் அந்த பகுதிக்கு சென்றதால் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன என தெரிவித்துள்ளது.

பொதுமக்களிற்கு தீங்குவிளைவிப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என சிரிய ஜனாதிபதி அஹமட் அல் சரா தெரிவித்துள்ளார்.

முக்தரியா நகரில் பெருமளவு பொதுமக்களின் உடல்கள் காணப்படுவதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த நகரில் ஒருசம்பவத்தில் மாத்திரம்  வன்முறைகளில் 40க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர் என சிரியாவின் மனித உரிமைகளை கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு படையினரின் சீருடை அணிந்தவர்கள் பொதுமக்களை நெற்றிப்பொட்டில் சுடுவதை காண்பிக்கும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.

சிரியாவின் கரையோர பகுதிகளில் சிறுபான்மையினரான இஸ்லாமிய அலவைட் மத பிரிவினர் அதிகளவில் வாழ்கின்றனர்.முன்னாள் ஜனாதிபதி அசாத் இந்த சமூகத்தை சேர்ந்தவர் எனினும் இந்த மதபிரிவினர் தங்களை அவருடன் இனம்காணவில்லை.

அலவைட் சமூகத்தினர் தங்கள் ஆட்சியின் கீழ் பாதுகாப்பாக இருப்பார்கள் பழிவாங்கும் கொலைகள் இடம்பெறாது என சிரியாவின் புதிய ஆட்சியாளர்கள் உறுதியளித்திருந்தனர்.

எனினும் இந்த வாரம் அரசாங்க படையினர் நூற்றுக்கணக்கான அலவைட் சமூகத்தினரை கொலை செய்துள்ளமை சிறுபான்மை சமூகத்தினரிற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

லடாக்கியாவின் ஸ்னோபார் பகுதியை சேர்ந்த ஒருவர் அரிஸ் குடும்பத்தை சேர்ந்த தனது அயலவர்களான 15 பேர் எப்படி சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதை விபரித்துள்ளார்.

தாயின் கண்களிற்கு முன்னால் 75 வயது தந்தையும் மூன்று மகன்களும் கொல்லப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

தந்தையையும் மகன்களையும் கொலை செய்த பின்னர் தாயார் அணிந்திருந்த தங்கநகைகளை தருமாறும் இல்லாவிட்டால் கொலை செய்துவிடுவோம் என அவர்கள் மிரடடினார்கள். என அந்த குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply