அவர்கள் ஓசூர் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை முழுமையாக ஆய்வு செய்தனர்.
பெங்களூரு அருகே கடந்த மாதம் 19ம் தேதி ரயில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் ரயில் மோதி இறந்து கிடந்தார்.
அவரது உடல் இரண்டு துண்டுகளாகக் கிடந்தது. அவர் ரயில் விபத்தில் இறந்திருக்கலாம் என்று கருதி போலீஸார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது உடம்பில் தலை, கை, கழுத்து பகுதியில் சந்தேகத்திற்கு இடமான காயங்கள் இருந்தது பிரேதப் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இது கொலையாக இருக்கலாம் என்று கருதி போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். இதற்காகத் தனிப்படை அமைக்கப்பட்டது.
கொலை செய்யப்பட்டுக் கிடந்தவரின் சட்டைப் பையில் பஸ் டிக்கெட் ஒன்று இருந்தது. அந்த டிக்கெட் ஓசூரிலிருந்து பெங்களூருக்கு எடுக்கப்பட்டு இருந்தது. தனிப்படை போலீஸார் உடனே ஓசூருக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
லோகநாதன்(வலது), சத்யா(இடது)
அவர்கள் ஓசூர் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை முழுமையாக ஆய்வு செய்தனர். 70 கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த பிறகு ஓசூரிலிருந்து பெங்களூரு செல்லும் பஸ்சில் கொலை செய்யப்பட்டவரும், அவருடன் ஒரு பெண்ணும் ஏறுவது பதிவாகி இருந்தது.
இதையடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான கொலை செய்யப்பட்ட நபரின் புகைப்படங்களைத் தமிழக எல்லையோர மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையத்திற்கும் பெங்களூரு போலீஸார் அனுப்பி வைத்தனர். இதில் துப்பு கிடைத்தது.
கொலை செய்யப்பட்டவர் பெயர் லோகநாதன் என்று தெரிய வந்தது. அவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், கிரானைட் பாலீஸ் செய்யும் வேலை செய்து வந்தார் என்றும் தெரியவந்தது. அவரைக் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் ஏற்கனவே சூளகிரி போலீஸில் புகார் செய்திருந்தனர்.
மேலும், லோகநாதன் குடும்பத்தில் விசாரித்தபோது லோகநாதனுக்கு ஓசூரில் பூ வியாபாரம் செய்யும் சத்யா என்ற பெண்ணுடன் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் மேற்கொண்டு விசாரித்தபோது சத்யாவிற்கு ஏற்கனவே வரதராஜன் என்பவருடன் திருமணமாகி இருந்தது. கணவனை வைத்துக்கொண்டே லோகநாதனுடன் நான்கு ஆண்டுகளாக சத்யா லிவ் இன் உறவில் வாழ்ந்து வந்துள்ளார்.
சத்யாவிற்குத் திருமணமான விவகாரம் தெரிய வந்தவுடன் இது குறித்து சத்யாவுடன் லோகநாதன் தகராறு செய்துள்ளார். சத்யாவிற்கும், வரதராஜனுக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகும் இரண்டு பேருடனும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் சத்யா வாழ்ந்து வந்தார்.
லோகநாதனுடன் வாடகை வீடு எடுத்துத் தங்கி இருந்தார். அதோடு இப்பிரச்னை பெரிதானவுடன் பிரச்னை போலீஸ் நிலையம் சென்றது. போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி லோகநாதனிடம் வாங்கிய பொருட்கள் அனைத்தையும் சத்யா திரும்பக் கொடுத்துவிட வேண்டும் என்று பேசி முடித்தனர்.
இதையடுத்து லோகநாதனைச் சத்யா வாடகைக்கு வாழ்ந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு ஏற்கனவே சத்யாவின் கணவன் வரதராஜன் தனது கூட்டாளியுடன் பதுங்கி இருந்தார். லோகநாதன் வந்ததும் அவரை அடித்து கொலை செய்து ரயில் தண்டவாளத்தில் தூக்கிப்போட்டது விசாரணையில் தெரிய வந்தது.
இது குறித்து சத்யாவிடம் விசாரித்தபோது, லோகநாதனுடன் 4 ஆண்டுகள் லிவ் இன் உறவில் வாழ்ந்ததாகவும், ஒரு ஆண்டுக்கு முன்பு ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டதாகவும், இது வெளியில் தெரிந்ததும், தன்னுடன் மட்டுமே வாழவேண்டும் என்று லோகநாதன் தெரிவித்தார் என்றும், எனவே கணவனிடம் சொல்லி லோகநாதனைக் கொலை செய்ததாகத் தெரிவித்துள்ளார்.