தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகப்போகிறது. முன்னைய ஆட்சியாளர்கள் செய்த ஊழல் மோசடிகள், வீண் விரயம் போன்றவற்றை வெளிக்கொணர்வதில் புதிய அரசாங்கம் காட்டி வரும் வேகமான செயற்பாடுகள் நிச்சயம் பாராட்டப்படக்கூடிய நிலையிலேயே காணப்படுகின்றன .
இந்நிலையில்,தற்போது பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட இருக்கிறது.
இதேபோன்று தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அவர்களின் அரசியல் உரிமை சார்ந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் திருப்தி தரும் நிலையில் காணப்படவில்லை.தமிழ் பகுதிகளில் பொருளாதார நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பில் புதிய ஆட்சியாளர் காட்டி வரும் அக்கறை குறிப்பாக பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனத்தை மீள ஆரம்பிக்கும் முயற்சிகள் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை பார்வையிட அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் கள விஜயம் பாராட்டப்படக்கூடியவையே .
ஆனாலும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் சுய கௌரவத்தை உறுதிப்படுத்த நிலை நிறுத்தும் அரசியல் உரிமை சார்ந்த நகர்வுகள் பின்நிலைக்கு தள்ளப்பட்டு வருவது கவலை தரும் நிலையாகும். குறிப்பாக அரசாங்கம் வாக்குறுதி வழங்கிய புதிய அரசியல்யாப்பு வருகை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருப்பது புதிய ஆட்சியாளர் மீது தமிழ் மக்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்புகளை பலவீன நிலையை நோக்கி நகர வைத்துள்ளது.
மேலும் போர்க்காலத்தில் புரியப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்கள் பேசப்படாத விடயங்களாக மாறி வருகின்றன. உதாரணமாக திருகோணமலை மாணவர்களின் படுகொலை தொடர்பான விடயம் மற்றும் போரின் இறுதிக்காலத்தில் இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் நிலை தொடர்பான விடயம் போன்றவை காலம் கடத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றது.
காணாமல் போன உறவுகளை தேடி தாய்மார்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்கள் ஆயிரக்கணக்கான நாட்களைத் தாண்டி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றது. உள்ளூர் விசாரணைகளில் நம்பிக்கையிழந்து சர்வதேச விசாரணையை அவர்கள் கூறி வருகின்றனர். தமிழ அரசியல் கைதிகளின் நிலையும் தொடர் கதையாகவே மாறியிருக்கிறது.
போர்க்கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் 58வது கூட்டத்தொடரில் முன் வைத்திருக்கும் நிஜங்கள் நீதி கோரி போராடிவரும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையை வழங்கும் நிலையில் காணவில்லை.
பொறுப்புக் கூறலில் அவர்கள் எதனையும் வெளிப்படுத்துவதற்கு தயாரில்லாத நிலை உறுதி பெற்று வருகிறது. இதேநேரம் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மரபுரிமை சார்ந்த சவால்களுக்கும் அரசாங்கத்தின் அணுகுமுறை நிரந்தர தீர்வை வழங்கும் நிலை காணப்படவில்லை.
வடபகுதியில் தையிட்டியில் தனியார் காணியில் அமைக்கப்பட்டிருக்கும் விஹாரை தொடர்பான போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இது தொடர்பில் புத்தசாசன சமய விவகார அமைச்சர் கனித்துவ சுனில் கெனவி நேரடியாக களத்தை பார்வையிட்டு தீர்வு வழங்கப்படும் என பாராளுமன்றத்தில் தனது முடிவை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது உறுதிப்பாடு தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நீதியை பெற்றுக் கொடுத்தால் சிறப்பாக அமையும்.
மேலும் முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதி சிவன் தொடர்பான விடயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தில் மக்கள் அங்கே சென்று வழிபாட்டில் ஈடுபட மாற்றங்கள் உருவாக்கப்பட்டிருப்பது நல்ல மாற்றங்களாகவே பார்க்கப்படுகிறது.
இதேநேரம் வாகரைப் பகுதியில் சேனைப் பயிர் செய்கையில் ஈடுபட்டு வந்த விவசாயிகளின் உற்பத்தி முயற்சிகளை வன இலாகாவினர் எதுவித தயக்கமும் இன்றி அம்மக்களை அவர்களது பகுதிகளிலிருந்து வெளியேற்றியிருப்பது கண்டனத்துக்குரிய விடயமாக மாறியிருக்கிறது.
மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பை அரசாங்கம் இன்று வரை நிலை நிறுத்தாதிருப்பது பெரும் கேள்வியாக மாறியிருக்கிறது. மேலும் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் வடக்கில் ராணுவத்தால் நிர்வகிக்கப்படும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு முப்பதாயிரம் ரூபா வேதனமாக வழங்கப்பட்டிருக்கும் நிலை ராணுவம் அல்லாத தமிழ் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வெறும் 6000 ரூபாய் வழங்கப்படுவதாக வெளியிடப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனயீர்ப்பு விடயத்துக்கு அரசாங்கத்தின் உரிய பதில் வழங்கப்படாத நிலை தொடர்கின்றது.
மேலும் நாயாறு பகுதியில் பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்புடன் தென்னிலங்கை மீனவர்கள் அப்பகுதியில் முகாமிட்டு நிரந்தரமாக தங்கி உள்ளூர் மீனவர்களின் தொழிலை பாதிக்கும் வகையில் செயற்படுவதாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் குற்றச்சாட்டுக்கு இதுவரை பதில் கிடைக்காத நிலை தொடர்கிறது. இந்திய மீனவர்களின் செயற்பாடு காரணமாக வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பாரிய இழப்புக்கள் போன்றே இந்த நிலை காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் மேல் வந்திருக்கிறது.
மேலும் வன்னி நிலப்பரப்பில் 2009 க்கு முன்பு விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த காலப்பகுதியில் காட்டு மரங்களை கனரக இயந்திரங்களைக் கொண்டு வெட்டுவது, அரிவது போன்ற செயற்பாடுகள் அது தொடர்பான ஓசைகள் கூட இல்லாதிருந்த நிலையில் தற்போது வன்னிப் பகுதியில் கனரக ஆயுதங்கள் மூலம் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது தொடர்கின்றது என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
கடந்த 75 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் தமது உரிமை சார்ந்த விடயங்கள் தொடர்பில் தேசிய நீரோட்டத்தில் இருந்து விலகி நிற்கும் நிலையில் தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை அவர்களின் அரசியல் உரிமைகள் சார்ந்த விடயங்களில் புதிய ஆட்சியாளர்கள் அவற்றை முன்னிலைப்படுத்தி அதற்கான தீர்வை வழங்கும் நிலையை நோக்கி நகர வேண்டும். 1970ல் உருவான இடதுசாரிக் கட்சிகளின் கூட்டரசாங்கத்தில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் சார்ந்த விடயங்களை புறந்தள்ளிவிட்டு பொருளாதார விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
ஆனால் தமிழ் மக்களின் அரசியல் உரிமை சார்ந்த விடயங்கள் முதன்மை நிலை பெற அது இறுதியில் ஆயுதப் போராட்டமாக மாறி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாடு உள்நாட்டு யுத்தத்தை சந்தித்ததுடன், இறுதியில் நாடே வங்குரோத்து நிலைக்கு சென்றது வரலாறாகும். இத்தகைய நிலைகள் தோற்றம் பெறாமல் இருப்பதற்கு புதிய ஆட்சியாளர் அதிக கவனத்தை இதன் மீது குவிப்பதுடன், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், அதற்கான புதிய அரசியல் யாப்பின் வெளிவருகை தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மரபுரிமை சார்ந்த சவால் நிலைமைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்கி தேசிய மக்கள் சக்தி எதிர்பார்க்கும் அழகிய இலங்கையை உருவாக்கும் முயற்சிகள் முதன்மை நிலை பெற வேண்டும்.
நடராஜா ஜனகன் Thinakkural