ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியில் குழந்தை பிறப்பு விகிதம் என்பது வெகுவாக குறைந்து வருகிறது. இதனால், மக்கள் தொகை எண்ணிக்கை பின்னடைவை சந்திக்கிறது. எனவே, நாட்டில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை செய்துவருகிறது.
அந்தவகையில், அந்நாட்டு பிரதமர் விக்டர் ஆர்பன் , இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
முன்னதாக தமிழ்நாடு முதல்வர், ஆந்திர முதல்வர் ஆகியோர் குழந்தை பிறப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்று பேசியிருந்தநிலையில், உலகளவிலும் இந்த கருத்து முன்வைக்கப்படுவது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு 30 வயது வரை வருமான வரியிலிருந்து விலக்கும், அதே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு வாழ்நாள் முழுவதும் விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, 2019ம் ஆண்டு 4 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெறும் தாய்மார்களுக்கு வருமானவரி செலுத்துவதில் இருந்து வாழ்நாள் விலக்கு என்று அறிவிக்கப்பட்ட திட்டம்தான், விரிவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த ஆண்டு ஏப்ரலில் இங்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளநிலையில், அதற்கு முன்பு இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இளம்பெற்றோருக்கு உதவுவதற்காக ஹங்கேரி அரசு ஏற்கெனவே, வட்டி இல்லா கடன், 3 குழந்தைகள் பிறந்த பிறகு கடன் ரத்து செய்யப்படும் போன்ற அறிவிப்புகளையும் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.