-போர்நிறுத்த முன்மொழிவுக்கு விளாடிமிர் புட்டின் மௌனம்!

ரஷ்யா இந்த போர்நிறுத்தத்தை எவ்வாறு எதிர்கொள்ளும் என்பதுதான் முக்கிய கேள்வியாக உள்ளது. ஏனெனில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இன்னும் போர்நிறுத்த முன்மொழிவுக்கு இதுவரை பதிலளிக்கவில்லை.

இதேவேளை போர்நிறுத்தத்துக்கான இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், உக்ரைன் போர்க்களத்தில் பாரிய பின்னடைவை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. கூர்ஸ்க் (Kursk) பகுதியில் உக்ரைனிய படைகள் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி பின்வாங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

ரஷ்யாவுடனான போர்நிறுத்தத்துக்கான அமெரிக்காவின் முன்மொழிவை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக உக்ரைன் தற்போது கூறியுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக, அமெரிக்கா_- உக்ரைன் இடையே சவூதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் அமெரிக்கா_- உக்ரைன் கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், அமெரிக்காவினால் முன்மொழியப்பட்ட முப்பது நாள் இடைக்கால போர்நிறுத்தத்தை உடனடியாக ஏற்க உக்ரைன் தயாராக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளது.

இந்த போர்நிறுத்தக் காலம் இருதரப்பினரின் பரஸ்பர ஒப்பந்தத்தால் நீடிக்கப்படலாம். இது ரஷ்ய கூட்டமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடனேயே செயற்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ரஷ்யா ஏற்றுக் கொண்டவுடன் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அமெரிக்கா உடனடியாக உக்ரைனுக்கு பாதுகாப்பு உதவியை மீண்டும் வழங்கும் எனத் தெரிவித்துள்ளது.

ஆயினும் பந்து இப்போது ரஷ்யாவின் கைகளில் இருக்கிறது என்றும், ரஷ்யர்கள் முடிந்தவரை விரைவாக இதற்கு ஒப்புக்கொள்வார்கள் என்பதே எங்கள் நம்பிக்கை எனவும் பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.

ரஷ்யா_- உக்ரைன் என இருநாடுகளும் கூடிய விரைவில் முழுமையான உடன்பாட்டுக்கு வருவதை அமெரிக்கா விரும்புகிறது. போர் தொடரும் ஒவ்வொரு நாளிலும் மக்கள் இறக்கிறார்கள். இந்த மோதலில் இருதரப்பிலும் மக்கள் காயமடைகிறார்கள். யார் போர்நிறுத்தத்திற்கு சம்மதிக்கவில்லை என்றால் அமைதிக்கு தடையாக யார் இருப்பது என்பது தெரியவரும்.

அமெரிக்காவில் இது தொடர்பாகப் பேசிய அதிபர் ட்ரம்ப், சில நாட்களுக்குள் போர் முடிவடையும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார். போர்நிறுத்தத்தை முன்னிட்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ரஷ்யா இந்த போர்நிறுத்தத்தை எப்படி எதிர்கொள்ளும் என்பதுதான் முக்கிய கேள்வியாக உள்ளது. ஏனெனில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இன்னும் போர்நிறுத்த முன்மொழிவுக்கு பதிலளிக்கவில்லை.

இதேவேளை ஒரு மாதகால போர்நிறுத்தத்தினை ரஷ்யா ஏற்றுக்கொள்ளும் என்பதற்கான எந்த பொது அறிகுறியும் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, நேட்டோவின் அச்சுறுத்தல் அற்ற, ரஷ்யாவின் நீண்டகால பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு ஒப்பந்தத்தை மட்டுமே ரஷ்யா நாடக்கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சில மாதங்களுக்கு முன் போர்நிறுத்தம் தொடர்பாக பேசிய புட்டின், “ஒரு குறுகிய போர்நிறுத்தம் உக்ரைனுக்கான மீள் ஆயுதமாக்கக் காலமாக இருக்கக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கு நீண்டகால நீடித்த அமைதி மட்டுமே தேவை என்று புட்டின் தெரிவித்திருந்தார்.

சவூதி ஜித்தாவில் நடந்த பேச்சுவார்த்தையின் ஆக்கபூர்வமான முடிவுகள் குறித்து இதுவரை தீர்மானிக்க முடியவில்லை. எனினும், பேச்சுவார்த்தை தொடர்பில் மொஸ்கோ இன்னும் பதில் அளிக்கவில்லை. பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து வொஷிங்டனால் விளக்கமளிக்கப்பட்ட பின்னர் ரஷ்யா ஒரு அறிக்கையை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா 2022 பெப்ரவரியில் உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியது. தற்போது அது உக்ரைன் பிரதேசத்தில் சுமார் இருபது சதவீத நிலக்கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது.

இதேவேளை போர்நிறுத்தத்திற்கான இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், உக்ரைன் போர்க்களத்தில் பாரிய பின்னடைவை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக கூர்ஸ்க் பகுதியில் உக்ரைனிய படைகள் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி பின்வாங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. கூர்ஸ்க் போர் நடவடிக்கையிலிருந்து உக்ரைன் பெற்றுக் கொண்ட ஆரம்பகால வெற்றிகள் அனைத்தையும் தற்போது இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக கூர்ஸ்கில் ஏற்பட்ட தோல்வி, தொடர்ச்சியான பலத்த அடிகளுக்குப் பிறகு ஜெலென்ஸ்கி மீதான போர்நிறுத்த அழுத்தத்தை தீவிரப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் (மார்ச் 11, 2025), ரஷ்ய மற்றும் வடகொரியப் படைகளின் எதிர்த்தாக்குதலின் விளைவாக பெரும்பாலான உக்ரைனியப் படைகள் கூர்ஸ்க் நகரில் இருந்து பின்வாங்கி வெளியேறி வருகின்றன என்று களத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Share.
Leave A Reply