அமெரிக்காவின் 35வது ஜனாதிபதி ஜோன் எஃப் கென்னடி. மிகவும் தொலைநோக்குப் பார்வை கொண்டவர். 1963 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி டல்லாஸ் நகரில் தனது மனைவியுடன் காரில் பயணித்த போது துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். கென்னடி படுகொலை தொடர்பாக 24 வயதான லீ ஹார்வி ஆஸ்வால்ட் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.

கென்னடியின் படுகொலைக்கு ஒரு வருடம் கழித்து, படுகொலை தொடர்பாக விசாரிக்க வாரன் கமிஷனை அப்போதைய ஜனாதிபதி லிண்டன் பி. ஜான்சன் அமைத்தார். இந்த கமிஷன் ஓஸ்வால்ட் தனியாகச் செயல்பட்டதாகவும், சதித்திட்டத்திற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் முடிவு செய்தது. ஆனால், பெரும்பாலான அமெரிக்கர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற பார்வையும் உள்ளது.

ஜோன் கென்னடியின் உறவினரான ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர் தற்போது அமெரிக்காவின் சுகாதாரச் செயலாளராக இருக்கிறார். இவர் சிஐஏ தான் இந்தக் கொலையைச் செய்ததாக குற்றச்சாட்டியிருந்தார். ஆனால், சிஐஏ இந்த குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தது.

கென்னடி ஏன் படுகொலை செய்யப்பட்டார் என்ற கேள்விக்கு இதுவரை பதில் வெளிவராத சூழலில், இதுதொடர்பாக விசாரணை ஆவணங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்படுமென ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார். அதோடு ராபர்ட் எஃப் கென்னடி மற்றும் மார்ட்டின் லூதர் கிங் படுகொலைகள் தொடர்பான ஆவணங்களும் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். இதுதொடர்பான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டபின், அதிபர் ட்ரம்ப் அந்தப் பேனாவை தனது உதவியாளரிடம் கொடுத்து அதை ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியரிடம் கொடுக்கும்படித் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதன்படி, இன்று வெளியிடப்பட்ட இந்த ஆவணங்களில் ஏராளமான புதிய தகவல்கள் இருப்பதாகவும், எதையும் நீக்கவோ அல்லது திருத்தவோ இல்லை எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ‘கென்னடி மையத்தை’ பார்வையிட்டபின் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், மக்கள் இதற்காக பல தசாப்தங்களாகக் காத்திருக்கிறார்கள் என்றும் இது மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்குமென்றும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தேசிய ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் ட்ரம்பின் உத்தரவுக்கு இணங்க அதிபர் ஜான் எஃப் கென்னடியின் படுகொலை தொடர்பாக அனைத்துப் பதிவுகளும் வெளியிடப்படுகின்றன எனத் தெரிவித்துள்ளது. இந்த ஆவணங்களைப் பெற மேரிலாந்தின் கல்லூரி பார்க்கில் உள்ள தேசிய ஆவணக் காப்பகத்தை அணுகலாம் என்றும் ஆன்லைனிலும் கிடைக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபராக பதவியேற்ற பிறகு ஜான் எப் கென்னடி, மார்டின் லூதர்கிங், செனட்டர் ராபர்ட் கென்னடி ஆகியோரின் படுகொலை தொடர்பான ஆவணங்களை வெளியிடும் கோப்புகளில் ட்ரம்ப் முதலில் கையெழுத்திட்டிருந்தார்.

கோப்புகளை வெளியிடுவது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட், “அதிபர் ட்ரம்ப் அதிகபட்ச வெளிப்படைத் தன்மையுடன் கூடிய ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குகிறார். ட்ரம்ப் வழிகாட்டுதலின்படி, முன்னர் திருத்தப்பட்டு வெளியிடப்பட்ட ஜான் எஃப் கென்னடியின் கோப்புகள் தற்போது எந்தத் திருத்தமும் இல்லாமல் வெளியிடப்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply