ஒரு பிள்ளையின் தாயான 22 வயதுடைய பெண்ணை, முச்சக்கர வண்டிக்குள் வைத்து புதன்கிழமை (19) பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்தபோது, அந்த பெண் அபாய குரல் எழுப்பியமையால், முச்சக்கரவண்டியை அதன் சாரதி வேண்டுமென்றே புரட்டி விட்டுள்ளார். இதனால், அந்த பெண்ணும், சந்தேகநபரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளது.
இந்த பெண், குழந்தைக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கான தேவாலயத்துக்குச் சென்று, வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, வீதியில் பயணித்த முச்சக்கர வண்டியை நிறுத்தியுள்ளார்.
அந்த முச்சக்கர வண்டி பயணித்துக் கொண்டிருந்த போது, இடைநடுவே, பின் ரோதையில் ஏதோ சத்தம் கேட்பதாக தெரிவித்த சாரதி, முச்சக்கர வண்டியை நிறுத்திவிட்டு, பின்பக்க ஆசனத்துக்கு சென்று, அந்த யுவதியை கட்டிப்பிடித்து, கீழ் உள்ளாடையை கழற்றி உள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
அப்போது அந்த பெண் அபாய குரல் எழுப்பவே, சத்தம் கேட்ட திசையை நோக்கி ஒரு சிலர் ஓடி வந்துள்ளனர். அவர்களை கண்ட சாரதி, முச்சக்கரவண்டியை இயக்கி, வேகமாக ஓட்டிச் சென்றார் என்றும் அந்த யுவதி அளித்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, முச்சக்கர வண்டியில் இருந்து தான், பாய்வதற்கு முயன்றபோதும், அவ்வாறு செய்தால், முச்சக்கரவண்டி புரண்டு விடும் என்று தெரிவித்துள்ள சாரதி அந்த முச்சக்கரவண்டியை வேண்டுமென்றே விபத்துக்கு உள்ளாகி விட்டார் என்று அப்பெண் தெரிவித்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் இடத்திலிருந்து அந்த பெண்ணின் உள்ளாடை என சந்தேகிக்கப்படும் உள்ளாடையும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.