‘ஒரு பெண் ஆபாச படங்களைப் பார்ப்பதும் சுயஇன்பத்தில் ஈடுபடுவதும் கணவரைக் கொடுமைப்படுத்துவதாக எடுத்துக் கொள்ள முடியாது’ என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.

கணவருக்கு விவாகரத்து வழங்க மறுத்து கரூர் குடும்ப நல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்த தீர்ப்பில், கடந்த புதன்கிழமையன்று (மார்ச் 19) இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிக்கு, கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

இருவருக்கும் இது இரண்டாவது திருமணம். முதல் திருமணத்தில் இருந்து இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்றுள்ளனர். கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

தனது ‘திருமண உரிமையை மீட்டுக் கொடுக்குமாறு’ கரூர் சார்பு நீதிமன்றத்தில் மனைவி வழக்கு தொடர்ந்தார். ஆனால், மனைவி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி கோவை நீதிமன்றத்தில் விவாகரத்து கோரும் மனுவை கணவர் தாக்கல் செய்தார்.

இவ்விரு வழக்குகளும் கரூர் குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. கணவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஏற்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து கரூர் குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற தீர்ப்பு சொல்வது என்ன?

னது ‘திருமண உரிமையை மீட்டுக் கொடுக்குமாறு’ கரூர் சார்பு நீதிமன்றத்தில் பெண் வழக்கு தொடர்ந்தார் (சித்தரிப்புப்படம்)

தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கணவர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது தன் மனைவி மீது சில குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார்.

‘தனது மனைவி அதிக செலவுகளை செய்பவர்; ஆபாச படங்களைப் பார்ப்பதற்கு அடிமையானவர், சுய இன்பத்தில் ஈடுபடுகிறார், நீண்டநேரம் செல்போனில் பேசுகிறார்’ என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

தவிர தனது மனைவிக்கு பால்வினை நோய் இருப்பதாகவும் இதனால் தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டாகவும் குற்றம் சுமத்தியிருந்தார்.

“ஆனால், இவற்றை நிரூபிக்க போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை” என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்தனர்.

தீர்ப்பில் பெண்ணின் தனி உரிமை குறித்து நீதிபதிகள், “தனி உரிமை அடிப்படை உரிமை. திருமண உறவில் இருப்பவர்களுக்கும் இது பொருந்தும். திருமணத்துக்குப் பின் ஒரு பெண் மனைவியாக மாறுகிறார். மனைவிக்கான வரையறையில் அவரது பாலியல் சுதந்திரத்தின் பல்வேறு அம்சங்கள் அடங்கியுள்ளன” எனக் கூறியுள்ளனர்.

‘தரவுகள் இல்லை’ – நீதிபதிகள்

“பெண்கள் சுயஇன்பத்தில் ஈடுபடுவதைக் களங்கமாகக் கருத முடியாது” எனக் கூறியுள்ள நீதிபதிகள், ஆண்கள் சுய இன்பத்தில் ஈடுபடும்போது தாம்பத்ய வாழ்வில் பாதிப்பு ஏற்படும். அதுவே பெண்கள் ஈடுபடுவதால் திருமண வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படும் என்பதற்கு தரவுகள் இல்லை” எனத் தெரிவித்துள்ளனர்.

“ஆபாச படங்களைப் பார்ப்பது, சுயஇன்பத்தில் ஈடுபடுவது ஆகியவை கணவரை கொடுமைப்படுத்துவதாக பார்க்க முடியாது” எனவும் தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்ந்து தங்களின் தீர்ப்பில், “ஆபாச படம் பார்ப்பதன் மூலம் உளவியல் ஆரோக்கியம் பாதிக்கலாம். அவ்வாறு பார்ப்பவர் மற்றவரை தன்னுடன் சேருமாறு கட்டாயப்படுத்தினால் அதை ஏற்க முடியாது. இது திருமண உறவில் தாக்கத்தை ஏற்படுத்தினால் நடவடிக்கை எடுக்கலாம்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

“எந்தவொரு போதையும் மோசமானது தான்” எனக் கூறியுள்ள நீதிபதிகள், “ஆபாச படங்களைப் பார்ப்பது அந்த வகையை சேர்ந்தது தான். பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இவை சித்தரிக்கப்படுவதால் ஏற்க முடியாது” எனத் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து கணவரின் மேற்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், “மனைவி மீது மனுதாரர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. அது உண்மையாக இருந்தாலும் சட்டப்படி விவாகரத்து கோருவதற்கான காரணங்களாக அவை இல்லை” எனக் கூறியுள்ளனர்.

மதுரை கிளை நீதிமன்ற தீர்ப்பு என்ன?

"ஆபாச படங்களைப் பார்ப்பது, சுயஇன்பத்தில் ஈடுபடுவது ஆகியவை கணவரை கொடுமைப்படுத்துவதாக பார்க்க முடியாது"

‘பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை’

” கணவர் வைத்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. தன் மீதான குற்றச்சாட்டுகளை மனைவி மறுத்திருக்கிறார். இது சரியா…இல்லையா என்பதல்ல பிரச்னை. அதை நீதிமன்றம் எவ்வாறு பார்த்துள்ளது என்பதே முக்கியம்” எனக் கூறுகிறார், இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் உ.வாசுகி.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “புகை பிடித்தல், மது அருந்துதல் உட்பட ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறு அளவுகோல் முன்வைக்கப்படுகிறது. இவ்வாறு கூறுவதால் இதையெல்லாம் செய்வதற்கு ஊக்கப்படுத்துவதாக பொருள் கொள்ளக் கூடாது” எனவும் குறிப்பிட்டார்.

“தனி உரிமை என்பது அனைவருக்கும் உரியது” எனக் கூறும் உ.வாசுகி, “ஆண் செய்தால் கேள்வி எழுவதில்லை. அதுவே பெண்ணுக்கு என வரும்போது மட்டும் சமூகத்துக்கு ஏகப்பட்ட சந்தேகம் வந்துவிடுகிறது. அந்தவகையில் இந்தத் தீர்ப்பு விவாதமாகிறது” எனக் கூறுகிறார்.

“சட்டம் என்பது இரு பாலருக்கும் பொதுவானதாக உள்ளபோது, அதை பெண்களுக்கும் மட்டும் தனியாக பிரித்துக் கூற வேண்டிய அவசியமில்லை” எனக் கூறுகிறார் மூத்த வழக்கறிஞர் சாந்தகுமாரி.

“தனி நபர் ஆபாசப் படங்களைப் பார்ப்பதற்கு உரிமை உள்ளதா… இல்லையா என்ற கேள்வி வரும்போது, ஆண்களைப் போல பெண்களுக்கும் உரிமை உள்ளது என நீதிமன்றம் கூறுவது சரியானது” எனக் கூறுகிறார் அவர்.

மேலும், இந்திய சமூகத்தில் பாலியல் தொடர்பாக வகுக்கப்பட்டுள்ள மரபு சார்ந்த உரிமைகளைத் தாண்டி தனது தனி உரிமையை ஒரு பெண் நிலைநிறுத்துவது கேலிக்குரியதாக பார்க்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பெண்ணின் தனி உரிமையை ஆதரித்த வகையில் இந்த தீர்ப்பை வரவேற்பதாக அவர் தெரிவித்தார்.

மதுரை கிளை நீதிமன்ற தீர்ப்பு என்ன?

அதேநேரம், நீதிமன்றத்தின் தீர்ப்பில் தான் முற்றிலும் முரண்படுவதாக கூறுகிறார் தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்குரைஞர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் தமயந்தி.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “பெண்ணின் தனி உரிமையைப் பாதுகாப்பது அவசியமானது. ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பெண்கள் பார்ப்பது தவறு இல்லை. அதே சமயம் இதன்மூலம் குடும்பத்தில் சிக்கல்கள் உருவாகி விவாகரத்தை நோக்கிக் கொண்டு செல்வதைக் கவனிக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டார்.

– இது, பிபிசி  வெளியீடு

 

Share.
Leave A Reply