ஹிட்லரின் ராணுவத்திற்கு ராக்கெட் செய்து கொடுத்த விஞ்ஞானிதான், நிலவில் கால் பதித்த அமெரிக்காவின் சாதனைக்கு பின்னால் இருந்தவர்.
அவரின் பெயர் வார்னர் வான் ப்ரான். ஹிட்லரின் ஜெர்மனியில், ராக்கெட் தொழில்நுட்பத்தில் கை தேர்ந்தவராக இருந்த அவரின் ஆராய்ச்சியில்தான் வி2 என்ற ஏவுகணை உருவானது. இந்த ஏவுகணையை பயன்படுத்திய ஹிட்லரின் படை, இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கர்களையும் சோவியத் படைகளையும் கதி கலங்க செய்தது.
இந்த விஞ்ஞானி போருக்கு பின் அமெரிக்காவில் தஞ்சமடைந்தார். அவரின் வாழ்க்கை பல வியத்தகு சாதனைகளை உள்ளடக்கியது.
வார்னர் வான் ப்ரான், மனித குலம் ஒரு நாள் நட்சத்திரங்களை அடையும் என்று உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார்.
ஆனால், நடைமுறையில் அவர் போருக்கான ராக்கெட் தயாரிக்க தொழில்நுட்பம் வகுத்துக் கொடுத்தார். நாஜி ஜெர்மனியிலிருந்து நாசா வரையிலான அவரது வாழ்க்கைப் பயணம் இலக்கும், அறநெறியும், புவிசார் அரசியலும் சந்திக்கும் முரண்பாட்டின் வெளிப்பாடாகும்.
நாஜி பொறியாளர்
ஜெர்மனியின் விர்சிட்ஸ் நகரில் 1912 ஆம் ஆண்டு பிறந்த வான் ப்ரானுக்கு விண்வெளி மீதான ஆர்வம் சிறு வயதிலிருந்தே தொடங்கியது.
“ஒரு புத்திசாலி இளைஞராக இருந்த அவர் கவனம் சிதறியதால் கணிதத்திலும், இயற்பியலிலும் தோல்வியடைந்தார். அதனால் உறைவிடப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.
தனது பதின்ம வயதுகளில் விண்வெளி ராக்கெட்டுகள் குறித்து கனவு காண தொடங்கினார். 22 வயதில் இயந்திரவியல், வானூர்தி பொறியியலில் பட்டங்களையும், இயற்பியலில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
ஜெர்மனியில் ஹிட்லர் அதிகாரத்திற்கு வருவதற்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், அந்த நாட்டின் ராணுவத்தின் ராக்கெட் திட்டத்தின் சிவிலியன் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
25 வயதில் அவர் பால்டிக் கடற்கரையில் உள்ள பீனெமுண்டே ராக்கெட் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி தளத்தின் சிவிலியன் தொழில்நுட்ப இயக்குனராக இருந்தார்” என்று ப்ரானின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதிய பாப் வார்ட் குறிப்பிடுகிறார்.
1928-ல், அவர் ஜெர்மனியின் விண்வெளி பயண சமூகத்தில் இணைந்தார். விரைவில் ஜெர்மன் ராணுவத்தில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். இரண்டாம் உலகப்போரில் பல நாடுகளை மிரட்டிய வி2 என்ற ஏவுகணையை இவரே உருவாக்கினார்.
இந்த வி2 ஏவுகணை உலகின் முதல் நீண்ட தூர வழிகாட்டப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும். வி2 என்றால் அது ‘vergeltungswaffen’ (பழிவாங்கும் ஆயுதம்) என்ற பொருள் ஆகும்.
வார்னர் வான் ப்ரான், அமெரிக்கா, ஜெர்மனி
V2 ராக்கெட் தொழில்நுட்பம்
இரண்டாம் உலகப் போரில் லண்டன், அண்ட்வெர்ப், பாரிஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை தாக்குவதற்கு, V2 ராக்கெட்டை நாஜி ஜெர்மனி பயன்படுத்தியது.
ஒவ்வொரு V2 ராக்கெட்டும் 14 மீட்டர் உயரம் கொண்டது ஆகும். அவை கிட்டத்தட்ட ஒரு டன் வெடிபொருள்களை சுமந்து சென்றன. 1944-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதி லண்டன் மீது முதல் தாக்குதல் நடத்தப்பட்டதில் 10 மீட்டர் பரப்பளவில் ஒரு பள்ளத்தை ஏற்படுத்தி மூன்று பேரை கொன்று 22 பேரை அது காயப்படுத்தியது.
இவை ஹிட்லரின் வதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டன.
V2 ராக்கெட் திரவ எத்தனால் மற்றும் ஆக்சிஜனால் உந்தப்படும். சுமார் 190 கி.மீ எறிபாதையில், பூமிக்கு மேலே 80 கி.மீ உயரத்தில் செல்லக் கூடிய V2 , உலகின் முதல் நீண்ட தூர பாலிஸ்டிக் ராக்கெட் ஆகும். அதுவரை உலகம் இதைப் போன்று வேறு எதையும் பார்த்ததில்லை.
‘ஆபரேஷன் பேப்பர்கிளிப்’
இரண்டாம் உலகப் போரின் முடிவில், V2 தொழில்நுட்பத்தை வசப்படுத்த அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா ஆகிய நாடுகள் போட்டி போட்டன.
1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி தோல்வியை தழுவியது. அதன் பின்னர் ப்ரான் அமெரிக்காவிடம் சரணடைந்தார்.
” ஸ்டாலினுக்கு வேலை செய்ய விருப்பம் கொள்ளாத வான் ப்ரான் அமெரிக்கர்களிடம் சரணடைவது என்ற முடிவை எடுத்தார். அதேநேரம், ரஷ்யர்கள் V2 தொழிற்சாலையை கைப்பற்றினர்” என்று பிபிசியின் செய்தியாளர் ரிச்சர்ட் ஹாலிங்மன் தெரிவிக்கிறார்.
சோவியத்துக்கு எதிராக நாஜி விஞ்ஞானிகளின் திறனை பயன்படுத்தும் அமெரிக்காவின் ‘ஆப்பரேஷன் பேபர்கிளிப்’ திட்டத்தில் வான் ப்ரானுடன் சேர்ந்து 125 நாஜி விஞ்ஞானிகள் அமெரிக்காவிடம் சரணடைந்தனர்.
நாசா விஞ்ஞானியாக
அமெரிக்காவில் ப்ரானுக்கு வாய்ப்புகள் ஏராளமாக இருந்தன. அவரது குழு அமெரிக்காவின் முதல் பாலிஸ்டிக் ஏவுகணையான ரெட்ஸ்டோனை உருவாக்கியது. இந்த ஏவுகணை ஒரு அணு ஆயுதத்தை 250 மைல்கள் வரை வீசக்கூடியது ஆகும். ரெட்ஸ்டோனின் மாற்றியமைக்கப்பட்ட புதிய பதிப்பான ஜூபிடர்-சி, 1958 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் முதல் செயற்கைக்கோளான எக்ஸ்ப்ளோரர் 1-ஐ விண்ணில் ஏவியது.
அவர் 1960-ல் நாசாவில் மார்ஷல் விண்வெளி பயண மையத்தின் இயக்குநராக பொறுப்பேற்றார். அங்கே, அமெரிக்காவின் விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு உந்திச் சென்ற சாட்டர்ன் V (Saturn V) ராக்கெட் அவரது தலைமையில் உருவாக்கப்பட்டது.
1950 களில் வால்ட் டிஸ்னியுடன் இணைந்து விண்வெளிப் பயணத்தை பிரபலப்படுத்திய Man in Space (விண்வெளியில் மனிதன்) என்ற தொலைக்காட்சி தொடரில் பணியாற்றினார். “மனிதன் எங்கு செல்ல விரும்புகிறானோ அங்கெல்லாம் அவன் சொந்தமாகிறான்” என்று ப்ரான் கூறுவார். பனிப்போர் கால விண்வெளிப் போட்டியின் போது அவரது இந்த நம்பிக்கை அமெரிக்காவை உற்சாகப்படுத்தியது.
1969-ல் அமெரிக்காவின் அப்பல்லோ 11 நிலவில் தரையிறங்கியது. இந்த நிகழ்வு வரலாற்றின் மிகச் சிறந்த ராக்கெட் பொறியாளர்களில் ஒருவராக ப்ரானை நிலை நிறுத்தியது. அப்போதும் அவரது கடந்த காலம் குறித்த கேள்விகள் நீடித்தன
. “இயற்கை அழிவை அறியவில்லை; அதற்குத் தெரிந்ததெல்லாம் உருமாற்றம்” என்று கூறிய ப்ரான் இந்த சந்தேகங்களை மறைமுகமாக ஒப்புக் கொண்டார் என்றே கூறலாம்.
கடந்த காலம் அவரை விடவில்லை
ப்ரான் ஆராய்ச்சியில் உருவான V-2 பொறியியல் அதிசயமாக இருந்தது, ஆனால் ஒரு இருண்ட வரலாற்றையே கொண்டிருந்தது. வதை முகாம்களில் இருந்து கட்டாய உழைப்பைப் பயன்படுத்திக் கொண்டு மிட்டல்வெர்க் ஆலையில் தயாரிக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம் – முன்னேற்றத்தையும், மனிதத் துயரத்தையும் ஒருசேர அடையாளப்படுத்தியது.
“வான் ப்ரான் இந்த கொடூரங்களை அரிதாகவே எதிர்த்தார்” என்று குறிப்பிடுகிறார் வான் ப்ரான்: ட்ரீமர் ஆஃப் ஸ்பேஸ், இன்ஜினியர் ஆஃப் வார் என்ற புத்தகத்தின் ஆசிரியரான மைக்கேல் நியூஃபெல்ட்.
அவர் நிலவுக்கு அப்பால் செல்வதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த 1964ஆம் ஆண்டில், அவர் சமர்ப்பித்த மாநாட்டு அறிக்கை ஒன்று என்னிடம் உள்ளது.
இந்த அறிக்கையில் அவர் நிலவில் மனிதனை தரையிறக்குவதற்கான ஜெமினி திட்டத்திற்கு முன்பே, அவர் தனது சகாக்களிடம் செவ்வாய்க்கு பயணம் செய்வதற்கான திட்டமிடலை தொடங்க வேண்டும் என கூறியதை உள்ளடக்கியிருந்தது,” என்று, மார்ஷல் விண்வெளி மையத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப வல்லுனரான ஜான்சன் குறிப்பிடுகிறார்.
“இன்று நாம் செய்யும் முயற்சிகளுடன் ஒப்பிடும் போது, 1964ஆம் ஆண்டிலேயே இன்று நாம் தீர்க்க முயற்சிக்கும் பல பிரச்னைகளை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்” என்று அவர் கூறினார்.
வரலாற்று ஆசிரியரும், வான் ப்ரான் குறித்து நூல்கள் மற்றும் கட்டுரைகளை எழுதியுள்ள மைக்கேல் நியூஃபெல்ட், “வான் ப்ரான் முழுவதுமாக வில்லனும் இல்லை, முழுவதுமாக ஹீரோவும் இல்லை. அவர் லட்சியமும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட மனிதர்” என தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு