குஜராத்தை சேர்ந்தவர் பிரதீப் படேல் (வயது 56). மெஹ்சானாவில் உள்ள கனோடா கிராமத்தை சேர்ந்த இவர் தனது குடும்பத்துடன் 2019-ம் ஆண்டு அமெரிக்காவின் வர்ஜீனியாவில் வசித்து வந்தார்.
அங்குள்ள அக்கோ மாக் கவுண்டியில் லாங்க் போர்ட் நெடுஞ்சாலையில் குஜராத்தி படேல் சமூகத்தினரால் நடத்தப்படும் கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் பிரதீப் படேல் தனது மகள் ஊர்மி யுடன் (வயது 24) அதிகாலையில் கடையை திறக்க சென்றார். அவர்கள் கடைக்குள் சென்றபோது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.
இதில் தந்தை-மகள் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றார். இந்த துப்பாக்கி சூட்டில் பிரதீப் படேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஊர்மியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அது பலனளிக்காமல் ஊர்மி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஜார்ஜ் ப்ரேசியர் டெவன் வார்டன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.