இந்தியாவில், கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 152 அடி உயர தேர் திடீரென சாய்ந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் பெங்களூர், ஹுஸ்கூர் கிராமத்தில் பழமை வாய்ந்த மத்தூரம்மா அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் அம்மனுக்கு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனிடையே திருவிழாவையொட்டி சனிக்கிழமை (22) தேரோட்ட நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றுள்ளது. இதன்போது, 152 அடி உயர தேரில் அம்மன் எழுந்தருளிய நிலையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்துள்ளனர். இந்த தேருடன் சேர்த்து நாகமங்களா மற்றும் ராயசந்திரா சாமி தேர்களும் சென்றுள்ளன.

இந்நிலையில் தேரோட்ட நிகழ்ச்சியின் போது திடீரென லேசான காற்றுடன் மழை பெய்ததால் 152 அடி உயர தேர் பக்தர்களின் மேல் சாய்ந்துள்ளது. இதனால் பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். மேலும் தேரின் அடியில் 11 பக்தர்கள் சிக்கியுள்ளனர். இந்த விபத்தில் வீதியோரம் இருந்த வீடுகளும் சேதமடைந்துள்ளன.


இதையடுத்து தேரோட்டத்தையொட்டி பாதுகாப்புக்காக வந்த பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் தேருக்கு அடியில் சிக்கி காயம் அடைந்த பக்தர்களை மீட்டுள்ளனர்.

தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் , பெங்களூருவைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் காயம் அடைந்த நபர்களை மீட்பு குழுவினர் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

2024 ஆம் ஆண்டு இதேபோல் மத்தூரம்மா அம்மன் கோவில் தேரோட்டத்தின்போது தேர் சாய்ந்து விழுந்து 2 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.

Share.
Leave A Reply