இலங்கைக்கு வழங்கிய கடனை மறுசீரமைப்பு செய்ததால், சீனாவின் எக்ஸிம் வங்கிக்கு, 7 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டதாக சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்திருக்கிறார்.

அண்மையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து கலந்துரையாடிய போதே, அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு வழங்கிய கடனை மறுசீரமைப்பு செய்ததால், சீனாவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதையே அவர் வெளிப்படுத்த முயன்றிருக்கிறார்.

இதனைப் பற்றி யாரும் பெரிதாக பேசுவதில்லை என்ற ஆதங்கத்தையும் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். ஏனைய நாடுகள் கடன் மறுசீரமைப்பு மேற்கொள்வதற்கு தயங்கிக் கொண்டிருந்தபோது, முதலாவதாக சீனாவின் எக்ஸிம் வங்கியே கடன் மறுசீரமைப்புக்கு முன்வந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இதுவரையில் இலங்கையுடன், இந்தியா கடன் மறுசீரமைப்பு உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். அண்மையில் லண்டனுக்கு பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், சத்தம் ஹவுஸில் சிந்தனை குழாமினரைச் சந்தித்து பேசும் போது, இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவிகள் தொடர்பாக குறிப்பிட்டிருந்தார்.

பொருளாதார நெருக்கடியின் போது, இலங்கைக்கு 4 பில்லியன் டொலர்களை இந்தியா வழங்கியது என்றும், அயல்நாடு என்ற வகையில் இந்தியா தனது பொறுப்பை நிறைவேற்றியது என்றும் கூறியிருந்த ஜெய்சங்கர், அதேபோன்ற பொறுப்புணர்வு இந்தியாவின் அண்டை நாடுகளுக்கும் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

“இலங்கைக்கு நாங்கள் செய்த உதவியைப் போல, சரிசமமாக செய்ய வேண்டும் என்றில்லை. ஆனால், எங்களுக்கும் சில நலன்கள் இருக்கின்றன. அதனை இலங்கை புரிந்து கொள்ள வேண்டும்” என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அவரது இந்த கருத்து வெளியானதன் பின்னரே, சீனத் தூதுவரின் ஊடகச் சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றிருந்தது. பொருளாதார நெருக்கடியின் போது, இந்தியா நான்கு பில்லியன் டொலர்களை கடனாக கொடுத்திருந்தாலும் அதனை எப்படி திருப்பி பெற்றுக் கொள்ளப் போகிறது என திட்டவட்டமாக அறிவிக்கப்படவில்லை.

அதேவேளை, அதற்கு சரிசமமான தொகையை அல்லது அதற்கு ஈடான ஒன்றை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இந்தியாவுக்கு இருப்பதாகவும் தெரியவில்லை. ஜெய்சங்கரின் கருத்து இந்தியாவின் நலன்களை புரிந்து கொண்டு இலங்கை அரசாங்கம் செயற்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே அமைந்திருந்தது.

ஆனால், சீன தூதுவரின் நிலைப்பாடு இலங்கைக்கு கடன் கொடுத்து அதனை மறுசீரமைப்பு செய்ததால் சீனாவுக்கு 7 பில்லியன் டொலர் இழப்புஏற்பட்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் வெளிப்படையாக கூறுவதானால், இந்தியா கொடுத்த 4 பில்லியன் டொலர்களை விட, எங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு அதிகம் என்று உரிமை கொண்டாடுகிறது சீனா.

ஆனால், சீனத் தூதுவர் குறிப்பிட்டிருப்பது போல கடன் மறுசீரமைப்பினால் சீனாவுக்கு 7 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டது உண்மையா என்ற கேள்வி எழுகிறது.

ஏனென்றால், சீனாவின் எக்ஸிம் வங்கியிடம் பெற்றுக் கொண்ட கடன்கள் மற்றும் அதற்கான வட்டி என்பனவற்றை கணக்கிடும் போது கூட மொத்தத் தொகை ஏழு பில்லியன் டொலர்கள் எட்டவில்லை. அப்படியானால், 7 பில்லியன் டொலர்களை சீனா எப்படி இழந்தது என்ற கேள்வி வருகிறது.

சீனாவின் கடன் பொறியில் இலங்கை சிக்கியிருப்பதாக மேற்குலகமும் இந்தியாவும் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தன. அது சுத்தப்பொய் என சீனா மறுத்து வந்தது. ஆனால், சுமார் 4 பில்லியன் டொலர் கடன்களை கொடுத்து விட்டு கடன் மறுசீரமைப்புக்கு பின்னரும் அதனை விட சற்று அதிகளவு கடனை மீளப்பெற்றுக் கொள்வதற்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது சீனா. அப்படியிருக்க சீனாவுக்கு ஏழு பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்றால், இலங்கையிடம் இருந்து சீனாவின் எக்ஸிம் வங்கி கடனுக்காக அறவிடும் வட்டி வீதம் எவ்வளவு என்ற கேள்வி வருகிறது.

கந்து வட்டி காரர்களைப் போல சீன வங்கி நடந்து கொண்டிருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

கடந்த ஜூன் மாதம் நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட கடன் அறிக்கையில், சீனாவின் எக்ஸிம் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன்கள் மற்றும் கடந்த கால வட்டியை 4,187 மில்லியன் (4.187 பில்லியன்) டொலர் புதிய கடன்களாக மறுசீரமைத்துள்ளது.

எனக் கூறப்பட்டிருந்தது. 2024 மார்ச் மாத நிலவரப்படிஇ சீனாவின் எக்ஸிம் வங்கியிடம் பெறப்பட்டிருந்த கடன்கள் 3,993 மில்லியன் டொலர்களாகும். அத்துடன் 903.8 மில்லியன் டொலர் திருப்பிச் செலுத்த வேண்டிய வட்டி நிலுவையையும் இருந்தது.

இந்த இரண்டையும் மறுசீரமைப்பு செய்து- 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட போது, புதிய கடன்கள் 4,187 மில்லியன் டொலர்கள் என வரையறுக்கப்பட்டது. இதில் செலுத்த வேண்டிய வட்டியின் ஒரு பகுதி மூலதனமாக மாற்றப்பட்டது.

இருதரப்பு கடன்களுக்கான சராசரி வட்டி வீதம் 2.1 வீதமாக இருக்கிறது என்று அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார். சீனாவும் கடன்பொறி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட போது, இலங்கைக்கு தாங்கள் சராசரியாக குறைந்த வட்டிக்கே கடனை வழங்கி இருந்தோம் என திரும்பத் திரும்பக் கூறி வந்தது.

இப்படி இருக்கும் நிலையில், சீனாவின் எக்ஸிம் வங்கிக்கு கடன் மறுசீரமைப்பினால் வழங்கிய கடனை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிக இழப்பு, ஏற்பட்டிருக்கிறது என்றால், அது நம்பக்கூடிய விடயம் அல்ல. 2024 மார்ச் மாத நிலவரப்படி சீனாவின் எக்ஸிம் வங்கிக்கு கடன் மற்றும் வட்டியாக செலுத்த வேண்டிய மொத்த தொகை 4896.8 (3,993 + 903.8) மில்லியன் டொலர்கள் தான்.

கடன் மறுசீரமைப்பு செய்யப்பட்ட பிறகு, ஜூன் மாதம் செலுத்த வேண்டிய மொத்த கடன் 4,187 மில்லியன் டொலர்கள் என மாற்றப்பட்டது. இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட வித்தியாசம் தான் கடன் மறுசீரமைப்பினால் சீனா இழந்த தொகையாகும்.

அது 709.8 மில்லியன் டொலர்கள் ஆகும். கடன் மறுசீரமைப்புக்கு பின்னரும் சீனாவின் எக்ஸிம் வங்கி இந்த கடனை மீளப்பெற்று முடிக்கும் வரை இழப்புக்களை எதிர்கொள்ளும் என்பது உண்மை. அந்தக் கடன் கையில் வந்து சேரும் வரை அதனை மூலதனமாக கருத முடியாது. 2028 ஆம் ஆண்டு தொடக்கம் தான் கடன்களை மீளச் செலுத்த ஆரம்பிக்கப் போகிறது இலங்கை.

அந்தக் காலகட்டத்துக்கான வட்டியையும் சேர்த்தாலும் கூட, சீன தூதுவர் குறிப்பிட்ட ஏழு பில்லியன் டொலர்களை எட்ட முடியாது.

ஒட்டுமொத்தமாக முழு கடன்களையும் திரட்டி முடிக்கும் வரை, சீனா அதனை இழந்துபோன மூலதனமாக கருதுகிறதோ தெரியவில்லை.

சீனத் தூதுவரின் இந்தக் கணக்கு வங்கிகள் நிதி நிறுவனங்களில் வட்டி அறவிடப்படும் முறை போல, மர்மமாக உள்ளது. வீட்டுக் கடன்கள் போன்றவற்றுக்கு வட்டி வீதம் எனக் குறிப்பிடப்படும் தொகை உண்மையில் அறவிடப்படுவதில்லை.

அந்த வட்டி கணிப்பீட்டு முறை, தவணை கொடுப்பனவு முறை எல்லாமே வித்தியாசமானது. அது ஒருபோதும் கடன் பெறுபவருக்கு புரிவதும் இல்லை. அவர்களுக்கு சாதகமானதாக இருப்பதும் இல்லை. முற்று முழுதாக நிதி நிறுவனங்களுக்கு சாதகமானதாகவே அது இருக்கும். அதன் மூலம் தான் நிதி நிறுவனங்கள் கொழுத்த இலாபத்தை பெற்றுக் கொள்கின்றன.

அதே பாணியில் தான் சீனா இலங்கைக்கு கடனை வழங்கியது என்றால், கடனை திரும்ப வசூலிக்க முற்படுகிறது என்றால், 7 பில்லியன் டொலர்களை கடன் மறுசீரமைப்பினால் இழந்திருப்பதாக கூறுகிறது என்றால், கடன் பொறி இராஜதந்திரம் என சீனாவின் மீது மேற்குலகம் சுமத்தி வந்த குற்றச்சாட்டும் அப்பட்டமான உண்மை என்பது நிரூபணம் ஆகிவிடும்.

ஹரிகரன்

Share.
Leave A Reply