நாட்டின் 36 ஆவது பொலிஸ்மா அதிபராக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட தேசபந்து தென்னக்கோன் அப்பதவியை வகிக்க முடியாதென கடந்த வருடம் ஜுன் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அவர் பொலிஸ்மா அதிபராக செயற்படுவதை இடைநிறுத்துமாறு ஒன்பது அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் உயர்நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

அதன் அடிப்படையிலேயே உயர்நீதிமன்றமானது அத்தடையை பொலிஸ்மா அதிபருக்கு விதித்தது. தற்போது பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரே அப்பதவியில் இருக்கின்றார். இந்நிலையில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குப்பிறகு தேசபந்து தென்னக்கோனைப் பற்றிய எந்த செய்திகளும் ஊடகங்களில் வெளிவரவில்லை.

இந்நிலையில் பெப்ரவரி 28 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றம் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்யும்படி ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது.

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உட்பட கொழும்பு குற்றப் பிரிவின் (சி.சி.டி) எட்டு முன்னாள் அதிகாரிகளைக் கைது செய்வதற்காகவே மாத்தறை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது என்பது முக்கிய விடயம்.

ஆனால் அதற்குப்பிறகே பொலிஸ் மற்றும் குற்றப்புலனாய்வு துறையினருக்கு தேசபந்து தென்னக்கோன் எத்தகையதோர் நபர் என்பதை அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.

அவர் தலைமறைவாகியிருந்தமையை அவர்கள் காலந்தாழ்த்தியே அறிந்து கொண்டனர். எனினும் அவர் எங்கு இருக்கின்றார் என்பதை இறுதி வரை அறிந்து கொள்ளமுடியவில்லை.

ஒரு வார காலம் தேசபந்து தென்னக்கோன் கண்ணாமூச்சு விளையாட்டை ஆடினார். இந்த விவகாரம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அவமானப்படுத்தியது.

அதே வேளை பொலிஸ் தரப்பிலும் சிலர் தேசபந்துவுக்கு ஆதரவாக செயற்படுவதை அரசாங்கம் அறிந்து கொண்டது. இதையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சானது அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது.

அதாவது தேசபந்து தென்னக்கோன் மறைந்திருப்பதற்கு உதவி செய்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பே அது.

இந்த அறிவிப்புக்கு பலன் இருந்தது என்று தான் கூற வேண்டும். உடனடியாக சுதாகரித்துக்கொண்டு தென்னக்கோன் தரப்பு அவரது கைதை தடுக்கும் வகையில் சட்டத்தரணிகள் ஊடாக ரிட் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.

அதை நிராகரித்த நீதிமன்றம் தேசபந்து தென்னக்கோனுக்கு பகிரங்க பிடியாணை உத்தரவை பிறப்பித்தது. இதையடுத்து வேறு வழியின்றி அவர் தனது சட்டத்தரணிகளுடன் 19 ஆம் திகதி மாத்தளை நீதவான் நீதிமன்றில் சரணடைந்தார். ஆனால் இங்கு தான் கதையே பிறக்கின்றது.

அவர் நீதிமன்றத்துக்கு வந்த விதம் அப்படியானது. நன்றாக உடையணிந்து சொகுசு காரில் அவர் வந்திறங்கினார். அவருக்கு அதிவிசேட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவர் நேரடியாக நீதிமன்றத்துக்கு வந்து சாதாரண நபர் போன்று எவ்வாறு அமர்ந்திருக்க முடியும்? ஆனால் அவர் எதற்கும் அஞ்சாதவர் போன்று இறுமாப்பாக அமர்ந்திருந்தார்.

அவருக்கு பிணை எடுப்பதற்காக தலைநகர் உட்பட பல பகுதிகளிலிருந்தும் சுமார் ஐம்பது சட்டத்தரணிகள் வருகை தந்திருந்தனர். இவர்கள் எல்லாம் எதற்காக இங்கு வந்திருக்கின்றார்கள்? இவர்களை அனுப்பியது யார்?

இந்த சட்டத்தரணிகளுக்கு பணம் கொடுக்கும் தரப்பினர் எவர் போன்ற பல கேள்விகள் இங்கு எழுந்தன. தேசபந்து தென்னக்கோனுக்கு பிணை வழங்கி விட்டால் அவர் அடுத்த கட்டமாக எவ்வாறு தந்திரமாக செயற்படுவார் என்பதை சட்டமா அதிபர் திணைக்களம் தெரிந்து வைத்திருந்தது.

மிக முக்கியமாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் அதை அறிந்து வைத்திருந்தார். நேர்மையான அதே வேளை தைரியமான சட்டத்தரணி என்ற பெயர் பெற்ற அவர் சம்பவத்தை அறிந்து நேரடியாக மாத்தறை நீதவான் நீதிமன்றம் வந்து இறங்கினார்.

அதன் பிறகு அவரது வாதத்தால் தேசபந்துவுக்காக வருகை தந்திருந்த அனைத்து சட்டத்தரணிகளும் வாயை மூடிக்கொண்டு கதைக்க முடியாது மெளனம் காத்து விட்டனர். மிக சிறப்பாக நியாயங்களை எடுத்துரைத்த அவர் தேசபந்துவுக்கு பிணை வழங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அதையடுத்தே தேசபந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

எனினும் இருபது நாட்கள் அவர் மறைந்திருந்த இடம் எது, அவரை பாதுகாப்பாக தங்க வைத்திருந்தவர்கள் யார் என்பது குறித்த சந்தேகங்களுக்கு இப்போது சிறிது சிறிதாக விடை கிடைக்கத்தொடங்கியுள்ளன.

ரணில் ஜனாதிபதியாக இருந்த போது பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் டிரான் அலஸ். அவரின் திட்டமே யுக்திய நடவடிக்கை. இதன் போது போதை பொருள் பாவனை மற்றும் ஏனைய குற்றங்களோடு தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 2023 டிசம்பர் 31ஆம் திகதி மாத்தறை, வெலிகம பகுதியில் பெலேன பகுதியில் உள்ள W15 ஹோட்டலுக்கு முன்னால் வெலிகம பொலிஸ் நிலைய அதிகாரிகளால், கொழும்பு குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் குழு மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் வெலிகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் மரணமடைந்திருந்தார்.

குறித்த சம்பவத்தின் பின்னணியில் அப்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் தேசபந்து தென்னக்கோன் ஆகியோருக்கு உள்ள தொடர்புகள் பற்றி அப்போது பேசப்படவில்லை.

துப்பாக்கிச் சூடு நடத்திய வேன் அங்கிருந்து தப்பிச்சென்ற போது ஓரிடத்தில் அதை தடுத்து நிறுத்தினர் பொலிஸார். வேனில் பயணித்திவர்களிடம் கொழும்பு குற்றப்புலனாய்வு அடையாள அட்டைகள் இருந்தன. ஆனாலும் பொலிஸார் அவர்களை விடவில்லை. எனினும் அப்போது பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரிடமிருந்து வந்த தொலை.பேசி அழைப்பின் பின்னர் அவர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

ஆகவே இந்த சம்பவத்தின் சூத்திரதாரி யார் என்பதை ஊகிக்க முடிகின்றது. எது எப்படியானாலும் தேசபந்து தென்னக்கோனை மறைத்து வைத்திருந்தவர்களில் முன்னாள் அமைச்சர் டிரான் அலசின் பெயர் அடிபடுகின்றது.

இதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் உதவியிருக்கலாம் என்றும் பேசப்படுகின்றது.

தேசபந்து மாத்தறை நீதிமன்றில் சரணடைந்த போது அவரின் பிணைக்காக சென்ற சுமார் ஐம்பது சட்டத்தரணிகளுக்கும் டிரான் அலஸ் பணம் வழங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகின்றது.

தற்போது தும்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தேசபந்து தென்னக்கோனிடம் முறையாக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அவர் மறைந்திருந்த இடம் மற்றும் அவருக்கு பாதுகாப்பு வழங்கியவவர்கள் பற்றிய விபரங்கள் வெளிவரக்கூடும். அதன் மூலம் நீதிமன்ற உத்தரவுகளை மீறி அவரை பாதுகாத்தமைக்கு அவர்களின் மீது சட்டம் பாயலாம்.

 

சி.சி.என்

Share.
Leave A Reply