உ லக அரசியலில் சமாதானம் எப்போதும் போருக்கான தயார்படுத்தல் என்றே யதார்த்தவாத கோட்பாட்டுவாதிகள் விவாதிக்கின்றனர். அத்தகைய சூழலுக்குள்ளேயே இஸ்ரேல்- – ஹமாஸ் போர் நிறுத்தமும் ரஷ்ய போர் நிறுத்தத்துக்கான முயற்சிகளும் காணப்படுகின்றன.
ஏறக்குறைய இஸ்ரேல் காசா மீதான சமாதான முயற்சி முடிவுக்கு வந்து, போர் தொடக்கி இருக்கிறது. ஆனால் உக்ரைன் போர் நிறுத்தம் இழுபறிக்குள் பயணித்துக் கொண்டிருக்கிறது.
இத்தகைய நகர்வுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் உத்திகளை தேடுவதாக இக்கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.
உக்ரேன் –ரஷ்ய போர் நிறுத்தத்துக்கான உரையாடல்கள் அமெரிக்காவினால் சவுதிஅரேபியாவில் நிகழ்த்தப்பட்டது.
பெருமளவில் அது எத்தகைய உடன்பாட்டையும் பூரணப்படுத்தாத போதும் போருக்கான முனைப்புகளை இருதரப்பும் முடிவுக்கு கொண்டு வரவேண்டிய தர்க்கத்தை வெளிப்படுத்தியதை காண முடிகின்றது.
அத்தகைய சூழலிலேயே உக்ரைனால் ரஷ்யாவின் எல்லைக்குள் நுழைந்து கைப்பற்றிய மேற்கு குர்ஸ்க் பிராந்தியத்தை மீளவும் ரஷ்ய இராணுவம் கைப்பற்றும் நிலைக்குள் வந்துள்ளது. போர் ரஷ்யாவின் இராணுவ நிலைகளைப் பலப்படுத்தியதாகவே தெரிகின்றது.
உக்ரைன் போரில் இராணுவ ரீதியில் ரஷ்யா ஒரு வலுவான நிலைக்குள் வந்துள்ளது. ஆனால் ரஷ்ய ஜனாதிபதியைப் பொறுத்தவரையில் போர் உக்ரைனுடன் நிகழ்ந்தாலும் அப்போரின் மையத் தரப்பாக ஐரோப்பாவே காணப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டது போல் உக்ரைன்- ரஷ்யப் போரினால் பயனடைவது ஐரோப்பாவே அன்றி அமெரிக்கா கிடையாது என வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
இதனால் இப்போருக்கான முனைப்புகளை ரஷ்ய ஜனாதிபதி ஐரோப்பாவுக்கு எதிரானதாகவே கட்டமைக்க முயற்சித்து வருகிறார்.
அது ஏறக்குறைய சரியானதும் கூட. அமெரிக்க- ரஷ்ய தலைவர்கள் ஐரோப்பாவை இலக்கு வைத்தே நகர்கின்றனர். உக்ரைன் மீதான ரஷ்யப் போர் என்பது ஐரோப்பாவுக்கு எதிரானது என்பதும் ஐரோப்பாவே பயனடைகிறது என்பதும் இரு தலைவர்களின் விவாதமாக மாறி இருக்கிறது.
ஐரோப்பியர்களும் இப்போர் நிறுத்த உடன்பாட்டை அமெரிக்காவுக்கு ஊடாக நிகழ்த்தி முடிக்க வேண்டுமென செயல்படுகின்றனர்.
ஒரு பக்கம் ரஷ்யாவை போரில் தோற்கடிப்பதற்கு ஆயுதங்களையும் படைப்பலத்தையும் உக்ரைனுக்கு வழங்கிக் கொண்டு மறுபக்கத்தில் அமெரிக்காவுக்கூடாக சமாதான முயற்சிக்கு திட்டமிடுகின்றனர்.
அதற்குப் பின்னால் இருக்கும் ஐரோப்பிய அரசியல் கவனிக்கப்பட வேண்டியது. ஐரோப்பாவின் புதிய ஆட்சியாளர்களும் புதிய எண்ணமும் ரஷ்யாவை அமெரிக்காவின் ஊடாக தோற்கடிப்பதும் அதன் மூலம் ரஷ்யா- அமெரிக்க மோதலை முன்னிறுத்திக் கொண்டு உலக அரசியலை தமது பிடிக்குள் வைத்துக் கொள்ள முடியும் எனவும் கருதுகின்றனர்.
இதில் தான் விளாடிமிர் புட்டினும்- ரொனால்ட் ட்ரம்பும் ஒரு வகையான தந்திரோபாயத்தை முன் நகர்த்துகின்றனர். அவற்றை விரிவாக பார்த்தல் அவசியமானது.
ஒன்று ரஷ்யாவைப் பொறுத்தவரை போர் நிறுத்தத்துக்கு உடன்பாடு. அதே நேரம் நிபந்தனைகள் அதிகம். அத்தகைய நிபந்தனைகள் போரை நிறுத்துவதற்கானதாக அமையுமாக இருந்தால் ரஷ்யாவின் அணுகுமுறை வெற்றிகரமானதாக அமையும் என்பது அதன் எதிர்பார்க்கையாகும்.
30 நாள் போர் நிறுத்த உடன்பாடு முதல் கட்டமாக ரஷ்யாவின் மீது நிகழ்த்தப்படும் தாக்குதலுக்கான ஆயுதங்களையும் பயிற்சிகளையும் ஐரோப்பியர்கள் அல்லது நேட்டோவினர் வழங்கக் கூடாது என்பது பிரதான உத்தியாக காணப்பட்டது.
யதார்த்தவாத கோட்பாட்டாளர்கள் குறிப்பிடுவது போல் சமாதானம் போருக்கான தயார்படுத்தல் என்பதை கருத்தில் கொண்டே புட்டினது விவாதம் அல்லது நிபந்தனை அமைந்திருக்கின்றது.
இத்தகைய நிபந்தனையில் ஒரு நெகிழ்வுப் போக்கை ரஷ்ய ஜனாதிபதி அமெரிக்காவுக்கு தெளிவுபடுத்தியிருந்தார்.
அதாவது உக்கரைனின் பிரதான மின் நிலையங்களையோ அதன் விநியோகத்தையோ தாக்கி அழிப்பது இல்லை என்ற தளர்வுப் போக்காகும். இந்த நடவடிக்கை போரின் மூர்க்கத்தனத்தை ரஷ்யா தரப்பிலிருந்து மட்டுப்படுத்துகின்ற அம்சமாகவே காணப்பட்டது.
அத்தகைய விடயம் குறிப்பிட்ட மறு வினாடியே ஆளில்லாத விமானங்கள் இரு நாடுகள் மீதும் மாறி மாறி தாக்குதல்களை நிகழ்த்தின.
இங்கு தான் ரஷ்ய ஜனாதிபதி ஐரோப்பா முன்வைத்த நிபந்தனைகளை முற்றிலும் நிராகரிக்காது அமெரிக்காவையும் அமெரிக்க ஜனாதிபதியையும் அவமதிக்காது, தந்துரோபாயமாக ஒரு அம்சத்தை நிகழ்த்தி இருக்கின்றார்.
அதன் மூலம் அமெரிக்க- ரஷ்ய உறவு பாதிக்கப்படக் கூடாது என்பதில் தெளிவான அணுகுமுறையை அல்லது உத்தியை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஒன்று சேர்வதென்பது ரஷ்யாவுக்கு ஆபத்தானதே. இது மட்டுமின்றி தொடர்ந்து பேசுவதற்கும் சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்கும் தயாராக இருப்பதாக ரஷ்யத் தரப்பு உறுதிப்படுத்தி இருக்கின்றது.
எனவே புட்டின் ரஷ்யாவை பாதுகாப்பதற்கும் அமெரிக்க- ஐரோப்பிய உறவை உடைப்பதற்கும் ஐரோப்பியர்கள் முன்வைத்த உத்தியை தகர்த்திருக்கின்றார்.
இரண்டு அமெரிக்காவைப் பொறுத்தவரை உக்கிரைன் ரஷ்யப் போர் முடிவுக்கு வரவேண்டும் என்பதே அதன் அவாவாக உள்ளது.
காசா இஸ்ரேலியப் போர் நீடித்தாலும் உக்ரைன்- –ரஷ்யப் போர் நிறுத்தப்பட வேண்டும் என அதிகம் முனைப்பு காட்டுகின்றது.
அமெரிக்கா உக்ரேனை பலியிட்டாவது அத்தகைய முயற்சியை வெற்றி கொள்ள வேண்டும் என கருதுகின்றது. டொனால்ட் ட்ரம்ப்பைப் பொறுத்தவரை உக்ரேனின் கனிய வளங்கள் கைப்பற்றப்படுவதற்கு சமாதான முயற்சி அவசியமானது.
ஐரோப்பியர்களுக்கு இச் சமாதான முயற்சியை உக்ரைனை போருக்கு தயார்படுத்தவும் ரஷ்யாவின் இராணுவ பலம் வளர்ச்சியடைவதை அல்லது ஆதிக்கம் செய்வதை தடுக்கவும் உக்ரைனுக்குள் ரஷ்யா கைப்பற்றிய நிலப்பரப்பை மீள ரஷ்யா கைப்பற்றல் பாதுகாக்கவும் சமாதான அணுகுமுறை தேவைப்படுகிறது.
குர்ஸ்க் பிராந்தியத்தை ரஷ்யா கைப்பற்றுமாக இருந்தால் அது ஐரோப்பியர்களுக்கும் நேட்டோவுக்கும் பாரிய இழப்பாக அமையும். அப்போது ரஷ்ய இராணுவப் பலம் அதீதமாகும்.
எனவே அத்தகைய சூழல் எழுவதற்கு முன்னரே சமாதானத்துக்குள் ரஷ்யாவை ஈடுபடுத்துவது என்பது சுலபமான நேட்டோவினதும் ஐரோப்பாவினதும் வெற்றிகரமான நகர்வாக அமையும் என ஐரோப்பியர் கருதுகிறனர்.
இதனை முறியடிக்கும் விதத்தில் புட்டின் நகர்வுகள் அமைந்துள்ளன. இதனாலேயே அமெரிக்க ஜனாதிபதியை அங்கீகரிக்கின்ற அணுகுமுறையை புட்டின் பின்பற்றி வருகின்றார்.
இதனால் உக்காரைனை இழந்தாவது கனிம வளங்களை கைப்பற்றுவதும் ரஷ்யாவோடு கைகோர்த்துக் கொண்டு கனிய வளங்களை பங்கீடு செய்வதும் ஆரோக்கியமான உத்தி என அமெரிக்க நிர்வாகம் கருதுகிறது.
அதற்கு அமைவாகவே அதன் நடவடிக்கைகள் தீவிரம் பெற்றுள்ளன. இதில் ஐரோப்பாவின் உத்திகளில் நெருக்கடியும் உக்ரைனின் நகர்வுகளில் தோல்விகளும் அமெரிக்க- ரஷ்ய அணுகுமுறைகளில் மாற்றங்களையும் அவதானிக்க முடிகிறது.
எனவே உக்ரைன்- ரஷ்ய போருக்கான சமாதான முயற்சி சாத்தியமற்ற நிகழ்வுகளுக்குள்ளால் நகர்கிறது. ஆனாலும் அமெரிக்கா முழுமையாக உக்ரேனை கைவிடுமாக இருந்தால் ரஷ்யாவால் உக்ரைன் கைப்பற்றப்படும் என்ற அச்சம் ஐரோப்பியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அவ்வாறான ஒரு நிகழ்வு சாத்தியப்படுமாக இருந்தால் ஐரோப்பாவின் கிழக்கைரோப்பா நோக்கிய விரிவாக்கம் முறியடிக்கப்படுவதுடன் ரஷ்யாவை எதிர்கொள்கின்ற எதிர்காலமும் அதிக குழப்பத்தை ஏற்படுத்தும்.
ஐரோப்பாவின் புதிய ஆட்சியாளர்கள் குழப்பமான ஐரோப்பிய சூழலை ஏற்படுத்தியுள்ளார்கள். அமெரிக்காவையும் ரஷ்யாவையும் கையாண்டு ஐரோப்பிய நலன்களை அடைந்த நிலை நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது.
ஐரோப்பியர்கள் தனித்துவிடப்படுகின்ற துயரம் ஒன்றுக்குள் அல்லது அமெரிக்கா இல்லாத ஐரோப்பியர்கள் எவ்வகையான நெருக்கடிகளை எதிர்கொள்வார்கள் என்பதை உணர்த்துகிற காலப்பகுதியாக உள்ளது.
ரஷ்யாவும் அமெரிக்காவும் கைகோர்க்குமாக இருந்தால் ஐரோப்பாவின் ஆதிக்கம் நெருக்கடிக்கானதாக மாறும்.
உலகளாவிய ரீதியில் குடியேற்றங்களையும் ஏகாதிபத்தியங்களையும் கட்டமைத்த ஐரோப்பா அமெரிக்காவை முன்னிறுத்திக் கொண்டே அத்தகைய வெற்றிகரமான பக்கங்களை அடைந்திருந்தது.
20 ஆம் நூற்றாண்டுக்கு பின்னரான உலக அரசியல் அது ஒரு புதிய முகத்தை ஐரோப்பாவுக்கு கொடுத்தது.
அத்தகைய சூழல் நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கின்ற ஒரு காலப்பகுதியாக சமகாலம் காணப்படுகிறது. இது டொனால்ட் ட்ரம்பின் ஆட்சிக் காலத்தில் முழுமையாக நிகழுமா என்பது தற்போதைய பிரதான கேள்வியாகியுள்ளது.
கே.ரீ சன்முகலிங்கம்