தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி ஆறு மாதங்களை அண்மிக்கும் நிலையில் பெரும் சர்ச்சை என்ற நிலையிலிருந்த முன்னைநாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கைது செய்யப்பட்டு ஏப்ரல் நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பெருமளவான வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கின்ற ரணில் விக்ரமசிங்கவும் அவர் சம்பந்தப்பட்ட பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையும் பாராளுமன்ற விவாதத்திற்கு நாள் குறித்தாகிவிட்டது.

மேலும் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டமும் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்புதலை பெற்றுள்ள நிலையில், அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கை தொடர்பில் தமக்கு எந்தவிதமான ஆட்சேபனைகளும் இல்லையெனவும் ஆனால் அவை தொடர்ந்து நட்டத்தில் இயங்கினால் அவற்றை போசிப்பதற்கு மக்களின் வரிப்பணத்தை உபயோகிக்க முடியாது என்றும் தெரிவித்திருக்கின்றார் . இது தொடர்பான பிரச்சனையே புதிய ஆட்சியாளருக்கு எதிர்காலத்தில் சவால் மிக்கதாக அமையப்போகிறது.

தற்போது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மே மாதம் ஆறாம் திகதி நடக்க இருக்கின்ற நிலையில், புதிய அரசாங்கத்திற்கு மக்கள் ஆதரவு என்ன நிலையில் காணப்படுகின்றது என்பதை இந்த தேர்தல் நாடி பிடித்து பார்க்கும் நிலையை உருவாக்கி இருக்கின்றது.

2015 இல் நல்லாட்சி அரசாங்கம் உருவானபோது அக்கால பகுதியில் நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தல் மற்றும் 2018 இல் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் நல்லாட்சி அரசாங்கம் பெரும் தோல்வியை சந்தித்திருந்தது. இது பொதுஜன பெரமுன முகாமுக்கு பெரும் உற்சாகத்தை வழங்கியிருந்ததுடன், ஈஸ்டர் தின குண்டுவெடிப்பின் பிரதிபலிப்புகளையும் தமக்கு சாதகமாக்கி ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச அமோக வெற்றியீட்டியதுடன், பாராளுமன்றத் தேர்தலிலும் 145 ஆசனங்களை பெறும் நிலையும் தோற்றம் பெற்றிருந்தது .

தற்போது தேசிய மக்கள் சக்தியினர் பரவலாக நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தல்களில் பின்னடைவுகளை சந்தித்திருக்கின்றனர். அடுத்த தடைதாங்கலாக உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் வெற்றிகளை பெற வேண்டும். ஆனால் தொடர்ந்தும் எதிரணியின் பலவீன நிலை அவர்களுக்கு சாதகமாகவே பார்க்கப்படுகின்றது.

இன்னொரு பக்கத்தில் 19 க்கும் மேற்பட்ட சுகாதாரத் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த களத்தில் குறித்திருக்கின்றனர். இவர்களைவிட நாட்டின் பல பகுதிகளில் வேறுபட்ட தொழிற்சங்கப் பிரிவினர் தமக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் இறங்கியிருக்கும் நிலையும் காணப்படுகிறது. இவர்களுடன் 45 ஆயிரம் பட்டதாரிகள் தமக்கான வேலையையும் கோரி போராடி வருகின்றனர். ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு தொடர்பில் நீதி கோரி காத்திருந்த பேராயர் மல்கம் ரஞ்சித் அரசாங்கத்துக்கு காலக்கெடு விடுத்திருக்கும் நிலையும் தோற்றம் பெற்றிருக்கிறது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாவதற்கு தொழிற்சங்க மட்டத்தில் பல தலைமைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல வழிகளிலும் தமது பங்களிப்பை வழங்கி வந்தனர். இன்று வரை அது தொடர்கின்றது. இன்றும் கூட அது அரசாங்கத்துக்கு எதிராக அரசாங்கத்தை மறைமுகமாக ஆதரிக்கும் பிரிவினரே பெயரளவில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அரசாங்கத்தை சவாலுக்கு உட்படுத்தும் விதத்தில் ஒன்றிணைந்த போராட்ட செயற்பாடுகளுக்கு அவர்கள் தயாரில்லாத நிலை தொடர்கின்றது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பும் இதற்குள் உள்ளடங்கியிருப்பதாக பேசப்படுகிறது .

தமிழ் மக்கள் தொடர்பாக ஜனாதிபதி தேர்தல் பாராளுமன்ற தேர்தல்களில் மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படும் என சஜித் பிரேமதாசா வாக்குறுதி வழங்கியிருக்க, ரணில் விக்கிரமசிங்கா காணி அதிகாரம் வழங்கப்படும், பொலிஸ் அதிகாரம் பாராளுமன்ற அனுமதியுடன் வழங்கப்படும் என கூறியிருந்த நிலையில், தேசிய மக்கள் சக்தியினர் மாகாண சபை தொடர்பில் எமக்கு ஆட்சேபனை இல்லை .

ஆனால் புதிய அரசியல் யாப்பில் தமிழ் மக்களுக்கான தீர்வு வழங்கப்படும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தனர். இன்று இவர்கள் அனைவரும் தமிழ் மக்கள் தொடர்பான கரிசனையில் எதுவும் கூறாமல் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலை நகர்த்தும் நிலை காணப்படுகிறது.

இதே நேரம் தமிழ் அரசியல் தலைமைகளும் பாராளுமன்ற விவாதங்களில் ஆங்காங்கே ஒரு சில கருத்துக்களை பதிவு செய்து வருவதுடன், புதிய ஆட்சியாளரின் தமிழ் மக்கள் தொடர்பான நிலைப்பாட்டை புதிய ஆட்சியாளரிடம் ஒன்றிணைந்த வடிவில் ஒரு போராட்ட செயல் வடிவத்தின் ஊடாக நெறிப்படுத்தும் நிலையில் காணப்படவில்லை. சகலரும் பிரிந்து நின்று உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதில் மாத்திரம் கவனத்தைக் குவித்து வருகின்றனர்.

1970 காலப்பகுதிகளில் ஆட்சியிலிருந்த இடதுசாரி கூட்டணி சோசலிச நடைமுறையை இனவாதத்துடன் கலந்து நடைமுறைப்படுத்த முற்பட்டதால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக தமிழ் மக்கள் மலையக மக்கள் மற்றும் இந்த நாட்டின் தொழிலாளர் என்ற நிலை தோற்றம் பெற்றது. அந்த வெறுப்புணர்வு இருப்பதாலேயே அவர்கள் தேர்தல் களங்களிலிருந்து துடைத்தெறியப்பட்டிருக்கின்றனர்.

கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சி வியத்கம என்ற பண்டிதர்களின் ஆலோசனையுடன் சில போலி சோசலிச நகர்வுகளை மேற்கொள்ள முயன்றதால் இடை நடுவில் ஆட்சியை விட்டு ஓடும் நிலை ஏற்பட்டது.

2025-ல் சோசலிச முழக்கத்துடன் பதவியேற்றுள்ள தேசிய மக்கள் சக்தியினர் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை முற்று முழுதாக உள்வாங்கி உலகின் ஆதிக்க சக்திகளுக்கு தலை வணங்கி தமது நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களின் இந்த நகர்வு மக்கள் விடுதலை முன்னணியின் மூன்று லட்சம் அங்கத்தவர்களை எப்படி சமாதானப்படுத்த போகின்றார்கள் என்பதில் முதலாவது தடையை அவர்கள் தாண்ட வேண்டும்.

அடுத்து தமிழ் தேசிய பிரச்சனை தொடர்பில் பெரிய அளவில் தமிழ் மக்களின் ஆதரவை பாராளுமன்ற தேர்தலில் இவர்கள் பெற்றிருந்ததால் நியாயமான தீர்வை நோக்கி நகர வேண்டும். எனவே தேசிய மக்கள் சக்தியின் அடுத்த நகர்வு என்ன என்பது தொடர்பில் வருகின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் மேடைகளில் ஒலிக்கப் போவதை பார்க்க முடியும்.

ஆனால் வறுமை நிலையில் வாழும் மக்களின் உணர்வுகளையும் ஆட்சி அமைப்பில் ஏற்பட்டிருக்கும் சிக்கல் நிலைமைகளையும் திசை திருப்புவதற்காக சின்னத்திரை நாடகங்களை தினமும் காட்சி படுத்தி வருகின்றனர். இவை தொடர்பான விமர்சனங்கள் உண்மையானவையா அல்லது இவர்கள் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் நிலையை நோக்கி நகர்வார்களா என்பதற்கான பதில் நடைபெறப் போகும் தேர்தலில் நிச்சயம் பிரதிபலிக்கும்.

நடராஜ ஜனகன் Thinakkural

Share.
Leave A Reply