கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் 1200 பேர் வரை உயிரிழந்தனர். 200 பேர் வரை பணய கைதிகளாக பிடித்துச்செல்லப்பட்டனர்.
இதனை தொடர்ந்து பாலஸ்தீனத்தின் காசா, ராஃபா உள்ளிட்ட நகரங்கள் மீது இஸ்ரேல் இடைவிடாது தாக்குதல் நடத்தி வருகிறது. பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இதில் அதிகமானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என ஐநா தெரிவிக்கிறது.
காசா நகரம் முற்றாக சிதைக்கப்பட்டு கட்டடங்கள் கற்கலாக மட்டுமே மிஞ்சின. லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர். இதற்கிடையில் கடந்த ஜனவரியில் ஹமாஸ் – இஸ்ரேல் இடையே தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட்டது. இதன்மூலம் இஸ்ரேலிய பணய கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் பரிமாற்றம் நடந்தது.
ஆனால் கடந்த மார்ச் 1 ஆம் தேதி போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது. இன்னும் 59 பணய கைதிகள் ஹமாஸ் வசம் உள்ளனர். அவர்களில் 24 பேர் மட்டுமே உயிருடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் சூளுரைத்துள்ளது.
காசாவின் கிட்டத்தட்ட 2 மில்லியன் பாலஸ்தீனியர்களுக்கு உணவு, எரிபொருள், மருந்து மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதை இஸ்ரேல் நிறுத்தியது. மேலும் கடந்த வாரம் முதல் இஸ்ரேல் மீண்டும் காசா மீது குண்டு மழை பொழியத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் காசாவின் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 600 பேர் கொல்லப்பட்டனர். காஸாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 50,000 த்தை கடந்துள்ளது.
இந்நிலையில் போரை நிறுத்த கோரி வடக்கு காசாவின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
غزة تنتفض ضد حماس.. مشاهد جديدة لتظاهرات حاشدة في بيت لاهيا للمطالبة بإيقاف الحرب وإنهاء حكم الحركة وخروجها في القطاع#العربية #غزة pic.twitter.com/1vfy8h9FlC
— العربية (@AlArabiya) March 25, 2025
25, 2025 நேற்று (செவ்வாய்க்கிழமை) வடக்கு காசாவில் உள்ள பெய்ட் லஹியாவில் சேதமடைந்த கட்டுமானங்களுக்கிடையே நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்’போரை நிறுத்து’, ‘போரை முடிவுக்குக் கொண்டு வா’, ‘நாங்கள் எங்கள் உயிரைக் கொடுக்க விரும்பவில்லை’, ‘எங்கள் குழந்தைகளின் இரத்தம் மலிவானது அல்ல’ போன்ற முழக்கங்களை மக்கள் எழுப்பினர்.
“ஹமாஸே வெளியேறு!” என்ற கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர். ஹமாஸ் ஆதரவாளர்கள் கூட்டத்தைக் கலைப்பதை வீடியோக்களில் காண முடிகிறது.
25, 2025 போராட்டத்தில் சேருமாறு டெலிகிராம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. கடந்த 2007 முதல் ஹமாஸ் காசாவை நிர்வகித்து வருகிறது. காசா மக்களை பாதுகாக்க ஹமாஸ் விரும்பினால் அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கையாக உள்ளது.
நினைத்த இடத்தில் குண்டுகளை வீசி நூற்றுக்கணக்கானோரை கொன்றுவிட்டு, ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்கியதாக இஸ்ரேல் சாக்கு சொல்லி வரும் வேளையில் இந்த போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. போர் மற்றும் பட்டினியால் விரக்தியின் உச்சத்தில் உள்ள காசா மக்களுக்கு விடிவுகாலம் எப்போது பிறக்கும் என்பதே சர்வதேச சமூகத்தில் கேள்வியாக உள்ளது.