கடந்த 1980ஆம் ஆண்டு காலப்பகுதியின் இறுதி ஓரிரு வருடங்களில், அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சித்திரவதை முகாம் தொடர்பில் தற்போது பாரிய சர்ச்சை தோன்றியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் இலங்கை ஜனாதிபதியும், 6 தடவை பிரதமராகவும் பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, அல் ஜசீரா தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டிருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் படலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதை அடுத்தே, படலந்த சித்திரவதை முகாம் பேசுபொருளாக மாறியது.
படலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் நடத்தப்பட்ட படலந்த ஆணைக் குழுவின் விசாரணை அறிக்கையுடன் தொடர்புபட்ட கேள்விகள் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்தே இந்த விடயம் பாரிய சர்ச்சையை நாட்டில் தோற்றுவித்துள்ளது.
படலந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பு
படலந்த சித்திரவதை முகாம் தொடர்பான அறிக்கையை, அரசாங்கம் கடந்த மார்ச் 14ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது.
சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் இந்த படலந்த சித்திரவதை முகாம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த அறிக்கை குறித்து நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவையினால் கொள்கை தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுகின்றார்.
”கடந்த 1988ஆம் ஆண்டின் தொடக்கம் 1990ஆம் ஆண்டில் சிவில் யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குற்றச் செயல்களில் படலந்த பகுதியில் நடத்திச் செல்லப்பட்ட பாரிய சித்திரவதை முகாம் தொடர்பில் நடத்தப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை குறித்து தற்போது உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பேசப்பட்டு வருகின்றன” என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.
இது குறித்து தொடர்ந்து அவர் பேசுகையில், “1977ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, 1994ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் ஊடாக சட்டவிரோதமான, ஜனநாயக விரோதமான தன்னாட்சி அரசாங்கத்தை வீழ்த்தி 17 வருட சாபத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்து ஜனநாயகத்தை உறுதி செய்வதே நோக்கமாக அமைந்திருந்தது.
கடந்த 17 வருட காலப் பகுதியில் இடம்பெற்ற அரச பயங்கரவாதத்தில் கொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவதே நோக்கம். சூரியகந்த போன்ற மனித புதைகுழிகள் தொடர்பாகவும், படலந்த போன்ற சித்திரவதை முகாம்கள் தொடர்பாகவும் அப்போதைய தலைவர்கள் அந்தந்த இடங்களுக்குச் சென்று தகவல்களை வெளியிட்ட தருணத்தில் நியாயத்தை நிலைநாட்டிக் கொள்ளவே மக்கள் எதிர்பார்த்தார்கள்” என்றார்.
இதன்படி, 1995ஆம் ஆண்டு படலந்த வீடமைப்புத் திட்டத்தில் நடத்திச் செல்லப்பட்ட சட்டவிரோத சித்திரவதை முகாம் குறித்த விசாரணைகளை நடத்த அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் நிர்வாகத்தால் உத்தரவிடப்பட்டது.
இந்த விசாரணைக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலப் பகுதிகள் பல தடவை நீடிக்கப்பட்டன. இந்த விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை 1998ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி அந்த ஆணைக்குழுவின் செயலாளர் ஜி.கே.ஜி.பெரேராவினால் சமர்ப்பிக்கப்பட்டது என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் அமைக்கப்பட்ட படலந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை 1998ஆம் ஆண்டு ஆணைக் குழுவினால் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும், அந்த அறிக்கை கடந்த 14ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.
இந்த நிலையிலேயே, படலந்த சித்திரவதை முகாம் தொடர்பான பேச்சு மீண்டும் உருவெடுத்த பின்னணியில், இந்த அறிக்கையைத் தற்போதைய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் கடந்த 14ஆம் தேதி சமர்ப்பித்திருந்தது.
”இந்தச் சம்பவம் இடம்பெற்று 35 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டு 30 வருடங்களும், ஆணைக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டு 25 வருடங்களும் கடந்துள்ள இந்தத் தருணத்தில் எமது கட்சி மற்றும் எமது அமைச்சரவையினால் இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அதை மக்கள் மயப்படுத்துவதற்குமான பொறுப்பு நம்மிடம் உள்ளது” என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுகின்றார்.
இந்த அறிக்கையை சட்ட மாஅதிபருக்கு அனுப்பி வைக்கவும், இந்த அறிக்கை தொடர்பிலான எதிர்கால நடவடிக்கைகள் குறித்த தீர்மானங்களை எட்டுவதற்கு ஜனாதிபதியினால் விசேட குழுவொன்று நியமிக்கப்படவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள படலந்த சித்திரவதை முகாம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பான விவாதத்தை எதிர் வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி முற்பகல் 11.30 முதல் மாலை 5.30 வரை இந்த விவாதம் நடத்தப்பட இருப்பதுடன், இரண்டாம் கட்ட விவாதத்தை மே மாதத்தில் நடத்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
படலந்த சித்திரவதை முகாம் – பின்னணி என்ன?
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க
படலந்த ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைப்படி, 1980ஆம் ஆண்டு காலப் பகுதியின் இறுதிக் காலகட்டத்தில், அப்போதைய அரசாங்கத்தினால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் கொலைகள், சித்திரவதை முகாம்கள், சட்டவிரோத தடுத்து வைப்புகள் இடம்பெற்ற பகுதியாக படலந்த சித்திரவதை முகாம் கூறப்படுகின்றது.
கடந்த 1987-1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் படலந்த வீடமைப்பு திட்டத்திலுள்ள வீடுகளில் இந்த முகாம்கள் நடத்திச் செல்லப்பட்டதாகவும், இந்தப் பகுதியில் சட்டவிரோதமாக போலீஸ் அதிகாரிகளின் தலையீட்டில் பல்வேறு நபர்கள் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், கொலை செய்யப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் 1995ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட படலந்த ஆணைக் குழுவின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஐக்கிய தேசியக் கட்சியின் 17 வருட ஆட்சிக் காலத்தில் இடம் பெற்றதாகக் கூறப்படும் சித்திரவதைகள் மற்றும் கொலைகள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி மக்களுக்கான நியாயத்தைத் தமது அரசாங்கம் நிலைநாட்டும்” என்பது 1994ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பிரதான தேர்தல் பிரசாரமாகக் காணப்பட்டது.
இதன்படி, படலந்த சித்திரவதை முகாம் மற்றும் சூரியகந்த மனித புதைகுழி தொடர்பில் அந்தக் காலப் பகுதியில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. 1994ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சி பீடம் ஏறிய சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தனது ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்தி, படலந்த சித்திரவதை முகாம் தொடர்பான விசாரணைகளுக்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை ஆட்சி பீடம் ஏறிய குறுகிய காலத்திலேயே ஆரம்பித்திருந்தார்.
இதன்படி, 1995ஆம் ஆண்டு இந்த ஜனாதிபதி ஆணைக்குழு, விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக ஸ்தாபிக்கப்பட்டது.
இந்த ஆணைக்குழுவின் ஆயுட்காலம் சுமார் 12 தடவைகளுக்கும் அதிக சந்தர்ப்பங்களில் நீடிக்கப்பட்டதுடன், இந்த ஆணைக்குழுவின் அறிக்கை 1998ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி அப்போதைய ஜனாதிபதி செயலாளரிடம் கையளிக்கப்பட்டு இருந்தது.
ஆணைக்குழுவின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் முன்னாள் அதிகாரியான சட்டத்தரணி எஸ்.குணவர்தன செயற்பட்டிருந்ததுடன், அவர் தனது பதவியை ராஜினாமா செய்த பின்னணியில் பதில் செயலாளராக டேவிட் கீதனகே பணியாற்றியிருந்தார்.
அதன் பின்னரான காலத்தில் இந்த ஆணைக்குழுவின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் இரண்டாம் நிலை தரத்தைக் கொண்ட அதிகாரியான ஜீ.கே.ஜீ.பெரேரா பணியாற்றியுள்ளார்.
கடந்த 1998ஆம் ஆண்டு தனது பணிகளை நிறைவு செய்த ஆணைக்குழு, அந்த அறிக்கையை அதே ஆண்டு ஜனாதிபதியிடம் கையளித்திருந்த போதிலும், இந்த அறிக்கை கடந்த 14ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.
“கடந்த 1988ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 1990ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை அரச உர கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான படலந்த வீடமைப்புத் திட்டத்தில் நடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோதமான சித்திரவதை முகாமில் நபர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார்களா? சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டார்களா? அதற்குப் பொறுப்பு கூறவேண்டிய நபர்கள் யார்?” என்பவை உள்ளிட்ட ஐந்து விடயங்கள் குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பு இந்த ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆணைக்குழுவின் பகிரங்க விசாரணைகள் கொழும்பு புதுக்கடை நீதிமன்ற கட்டடத் தொகுதியின் 2ஆம் இலக்க மேல் நீதிமன்ற வளாகத்தில் 1996ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டதுடன், இந்தக் கூட்டம் தொடர்ச்சியாக 127 நாட்கள் இடம்பெற்றது.
இந்த விசாரணைகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபல தலைமைகளான ரணில் விக்ரமசிங்க, ஜோசப் மைக்கல் பெரேரா, ஜோன் அமரதுங்க உள்ளிட்ட 82 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
படலந்த சித்திரவதை முகாம் மற்றும் ரணில் விக்ரமசிங்க
படலந்த ஆணைக்குழுவின் விசாரணைக் குழு உறுப்பினர்கள்
மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தின் பியகம தேர்தல் தொகுதியில் படலந்த பகுதி அமைந்துள்ளது. இந்த படலந்த பகுதியில் இலங்கை உர கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வீடமைப்பு திட்டமொன்று அமைக்கப்பட்டிருந்தது.
இந்த வீடமைப்புத் திட்டத்தில் 64 வீடுகள் அமைக்கப்பட்டு இருந்ததுடன், வீட்டின் வசதிகள் மற்றும் தரங்களுக்கு அமைய ஏ, பி, சி என அந்த வீடுகள் வகைப்படுத்தப்பட்டிருந்தன.
இந்த வீட்டுத் திட்டமானது, அப்போதைய கைத்தொழில் அமைச்சரான ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சுக்கு கீழ் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அப்போதைய கைத்தொழில் அமைச்சரான ரணில் விக்ரமசிங்க, அரச உர கூட்டுத்தாபனத்தின் தலைமை அதிகாரியாகச் செயற்பட்ட அசோக்க சேனாநாயக்கவை தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு, படலந்த வீடமைப்புத் திட்டத்திலுள்ள வீடுகளில் சிலவற்றை போலீஸ் அதிகாரிகளுக்காக ஒதுக்கீடு செய்து தருமாறு கோரியுள்ளதாக ஆணைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச உர கூட்டுத்தாபனத்தின் ஊடாக இந்த வீடுகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட போலீஸ் அதிகாரியாக உதவி போலீஸ் அத்தியட்சராக அப்போது கடமையாற்றிய டக்ளஸ் பீரிஸ் ஆணைக்குழுவினால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைகளின் பிரகாரமே, படலந்த வீடமைப்புத் திட்டத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு வீடுகளை வழங்கியதாகவும், அவர் ஆலோசனை வழங்காத பட்சத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டிருக்காது எனவும் அரச உர கூட்டுத்தாபனத்தின் தலைமை அதிகாரியாகக் கடமையாற்றிய அசோக்க சேனாநாயக்க, ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கியுள்ளார்.
இந்த வீடுகளை வழங்குவதற்காக எந்தவோர் உடன்படிக்கைகளும் கைச்சாத்து இடப்பட்டிருக்கவில்லை எனக் கூறப்படுகின்றது. இந்த ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் அப்போதைய போலீஸ் மாஅதிபர் எர்னஸ்ட் பெரேரா சாட்சி வழங்கியுள்ளார்.
‘இந்த வீடமைப்புத் திட்டத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டமையானது, டக்ளஸ் பீரிஸ், அரச உர கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் மற்றும் குறித்த அமைச்சர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல்’ என அப்போதைய போலீஸ் மாஅதிபர், ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கியுள்ளார்.
குறித்த வீடமைப்புத் திட்டத்தில் A 2/2 என்ற இலக்கத்தைக் கொண்ட வீட்டில் 1983ஆம் ஆண்டு மார்ச் 2ம் தேதி முதல் 1994ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை ரணில் விக்ரமசிங்க வசித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
அந்தக் காலப் பகுதியில் அவர் பதவி வகித்த இளைஞர் விவகாரம் மற்றும் தொழில் பாதுகாப்பு அமைச்சரின் சுற்றுலா விடுதியாகவும், கைத்தொழில் அமைச்சரின் அதிகாரபூர்வ வீடாகவும் ரணில் விக்ரமசிங்க அந்த வீட்டைப் பயன்படுத்தியுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் நபர்களைத் தடுத்து வைத்து, அவர்களுக்கு சித்திரவதை வழங்கப்பட்டதாகக் கூறப்படும் வீடுகளின் இலக்கங்களையும் ஆணைக்குழு தனது அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது. இதன்படி, ஆணைக்குழுவின் ஆங்கில அறிக்கையின் பிரகாரம், 23 முதல் 26 வரையான இலக்கங்களைக் கொண்ட அறிக்கை பக்கங்களில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1989 முதல் 1994ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம்.
இந்த வீட்டில்தான் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கிய டி.எம்.பந்துல என்ற நபர் சாட்சியம் வழங்கியுள்ளார். ஆணைக்குழுவினால் வீட்டுத் தொகுதி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த நபரினால் இந்த வீடு அடையாளம் காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக பாதுகாப்பு அதிகாரியான போலீஸ் பரிசோதகர் சுதத் சந்திரசேகர தங்கியுள்ளார். உதவி போலீஸ் அதிகாரியான டக்ளஸ் பீரிஸின் பாதுகாப்பு அதிகாரிகளும் தங்கியுள்ளனர்.
இந்த வீட்டில்தான் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டு, தான் பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக சாட்சியமளித்த அர்ல் சுகி பெரேரா என்பவர் இந்த வீட்டை அடையாளம் காட்டியுள்ளார். சபுகஸ்கந்த போலீஸாரிடம் வீடொன்று கையளிக்கப்பட்டு இருந்ததும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில்தான் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக வாசல ஜயசேகர என்பவர் இந்த வீட்டை அடையாளம் கண்டுகொண்டுள்ளார்.
A 1/8 என்ற இலக்கத்தைக் கொண்ட வீடு எவருக்கும் கையளிக்கப்படாத பின்னணியில், அந்த வீட்டை அண்மித்து போலீஸ் அதிகாரிகளின் நடமாட்டம் காணப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் உர கூட்டுத் தாபனத்தின் தலைமை அதிகாரி பேலியகொடை போலீஸாரிடமும், ரணில் விக்ரமசிங்கவிடமும் அறிவித்துள்ளார். ஆனால், இந்த விடயம் தொடர்பில் எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரிகள் தங்கியிருந்த A 1/7 என்ற வீட்டை அண்மித்து இந்த வீடு அமைந்துள்ளதுடன், அந்த வீடு பிரத்தியேக பாவனைக்காக வைக்கப்பட்டிருந்த இடம் என அஜித் ஜயசிங்க என்ற நபர் ஆணைக்குழுவிடம் சாட்சி வழங்கியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் சாட்சியம்
அப்போதைய கைத்தொழில் அமைச்சரான ரணில் விக்ரமசிங்க, இந்த ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கியுள்ளார். அதன்படி, கொலை செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான ரஞ்ஜன் விஜேரத்னவின் கோரிக்கைக்கு அமையவே தான் முன்னெடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
எனினும், அது தொடர்பான எந்தவோர் ஆவணங்களையும் முன்வைக்கவில்லை என்பதுடன், அது தொடர்பில் அப்போதைய போலீஸ் மாஅதிபர் மற்றும் போலீஸ் திணைக்களம் இது தொடர்பில் அறிந்து இருக்காமையினால், ரணில் விக்ரமசிங்கவின் சாட்சியம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்படுகின்றது.
வழக்கறிஞர் விஜயதாஸ லியன்ன ஆராய்ச்சியின் மரணம்
வழக்கறிஞரான விஜயதாஸ லியன்ன ஆராய்ச்சி என்பவர் 1988ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி காணாமல் போயிருந்தார். அவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி வழக்கறிஞர் ரஞ்ஜித் அபேசூரிய, போலீஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
காணாமல் போன விஜயதாஸ லியன்ன ஆராய்ச்சி கைது செய்யப்பட்டுள்ளாரா என அப்போதைய பாதுகாப்பு செயலாளர், அப்போதைய போலீஸ் மாஅதிபரிடம் வினவியுள்ளார்.
போலீஸ் மாஅதிபர் இந்த விடயம் தொடர்பில் கொழும்பு பிரதேசத்திற்குப் பொறுப்பான பிரதி போலீஸ் மாஅதிபரிடம் வினவியபோது, அவ்வாறு கைது செய்யப்படவில்லை என்று பதில் வழங்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் விஜயதாஸ, தங்காலை போலீஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கலாம் என அப்போதைய அரச பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராகக் கடமையாற்றிய முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் புதல்வரான ரவி ஜெயவர்தன போலீஸ் மாஅதிபரிடம் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, போலீஸ் மாஅதிபர் தங்காலை போலீஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட போலீஸ் அத்தியட்சர் கரவிட்ட தர்மதாஸவிடம் வினவியுள்ளதுடன், அவ்வாறான சம்பவமொன்று பதிவாகியுள்ளதை அதிகாரி மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆங்கில அறிக்கையின் 72வது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் போலீஸ் மாஅதிபர் ஆர்னஸ்ட் பெரேராவின் சாட்சியத்தின் பிரகாரம், ரணில் விக்ரமசிங்க தன்னை தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டு சந்தேக நபரை (வழக்கறிஞர் விஜயதாஸ லியன்ன ஆராய்ச்சி) கொழும்புவுக்கு கொண்டு வந்து, ”களனி பிரிவில் செயற்படுகின்ற விசேட குழுவிடம்” ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தாம் நம்புவதாகக் கூறப்பட்டுள்ளது.
இதன்படி, போலீஸ் மாஅதிபரின் ஆலோசனைகளின் பிரகாரம், வழக்கறிஞர் விஜயதாஸ லியக்க ஆராய்ச்சி கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டு, களனி பிரதேசத்திற்குப் பொறுப்பாகச் செயற்பட்ட குற்றச் செயல் தடுப்புப் பிரிவின் போலீஸ் பரிசோதகர் குலரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் கடும் காயங்களுடன் வழக்கறிஞர் லியன்ன ஆராய்ச்சி மீட்கப்பட்டு, கொழும்பு பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர் நள்ளிரவு உயிரிழந்துள்ளார்.
ஆயுதங்களினால் தாக்குதல் நடத்தப்பட்டமையே மரணத்திற்கான காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அவரின் உடலில் 207 இடங்களில் காயங்கள் காணப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
குறித்த வழக்கறிஞரை கொழும்பிற்குக் கொண்டு வரும்படி தான் போலீஸ் மாஅதிபருக்கு ஆலோசனை வழங்கவில்லை என ரணில் விக்ரமசிங்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கியுள்ளார்.
போலீஸ் மாஅதிபருக்கு ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படும் சம்பவத்தை ரணில் விக்ரமசிங்க நிராகரித்த போதிலும், முன்னாள் போலீஸ் மாஅதிபர் அர்னஸ்ட் பெரேராவிடம் குறுக்குக் கேள்வி எழுப்புவதற்கு ரணில் விக்ரமசிங்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணி முன்வரவில்லை என்பது விசேடமான விடயமாக இந்த ஆணைக்குழுவினால் கருத்தில் கொள்ளப்பட்டது.
படலந்த அறிக்கையின் பிரகாரம் இதற்கு யார் பொறுப்பு?
கடந்த 1988ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் தேதி முதல் 1990ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரையான காலப் பகுதியில் படலந்த வீடமைப்புத் திட்டத்தில் எவரேனும் ஒருவர் அல்லது நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு, அவர்கள் அமானுஷியமான முறையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் அதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பொறுப்பு கூற வேண்டியவர்கள் தொடர்பான தரவுகள் ஆணைக்குழுவின் ஆங்கில பிரதியின் 119 முதல் 122 வரையான பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
கடந்த 1986ஆம் ஆண்டு முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் அப்போதைய கைத்தொழில் அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவினால் படலந்த வீடமைப்புத் திட்டத்தில் போலீஸ் அதிகாரிகளை நிறுத்துவதற்கு, அரச உர கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், அதனூடாக 13 வீடுகள் உதவி போலீஸ் அதிகாரி டக்ளஸ் பீரிஸிற்கு பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வீடுகளை வழங்க ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்தமையானது, தனது அமைச்சுப் பதவியின் அதிகாரங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை எனக் கூறப்படுகின்றது.
இந்த வீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கு போலீஸ் திணைக்கள சரத்துகளுக்கு அமைய அது முறையற்றது என்பதுடன், அது குறித்து நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் சிரேஷ்ட போலீஸ் அதிகாரி நலீன் தெல்கொட பொறுப்பு கூறவேண்டும் என்பதுடன், அங்கு சட்டவிரோதமாக எதேனும் நடந்திருக்குமானால் அதை நிறுத்துவதற்காக அவர் நடவடிக்கை எடுக்காமை குறித்துப் பொறுப்பேற்க வேண்டும்.
ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் படலந்த வீடமைப்புத் திட்டத்தில் வரவழைக்கப்பட்டிருந்த போலீஸ் அதிகாரிகளுக்குக் கூட்டம் நடத்தியமையும், அவரால் அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
ரணில் விக்ரமசிங்க போலீஸாரின் செயற்பாடுகளுக்கும், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகளுக்கும் தலையீடு செய்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய வழங்கப்பட்ட வீடுகளில் சட்டவிரோத தடுப்பு முகாம்களை ஸ்தாபிக்க வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்படுகின்றது.
B2, B8, B34, A1/8 ஆகிய படலந்த வீடுகளில் சட்டவிரோத தடுப்பு முகாம்கள் மற்றும் சித்திரவதை முகாம்களை நடத்த ரணில் விக்ரமசிங்க மற்றும் சிரேஷ்ட போலீஸ் அதிகாரி நலீன் தெல்கொட பொறுப்பு கூற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் அறிந்திருந்த போதிலும், அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காமை குறித்து அப்போதைய பிரதி போலீஸ் மாஅதிபர் எம்.எம்.ஆர் (மெரில்) குணரத்ன, அப்போதைய போலீஸ் மாஅதிபர் அர்னஸ்ட் பெரேரா ஆகியோர் பொறுப்பு கூற வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் பரிந்துரைகள் என்ன?
படலந்த சித்திரவதை முகாம் வரைபடம்
நாட்டுப் பிரஜைகளின் அடிப்படை உரிமை தொடர்ச்சியாக மீறப்படும் நபர்கள் யார் என்பது அடையாளம் காணப்படும் பட்சத்தில், அவர்களின் பிரஜாவுரிமை ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே சரியான தண்டனை என்பதுடன், அதை வழங்குவதற்கான சட்ட அதிகாரத்தை உயர்நீதிமன்றத்திற்கு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் ஆங்கில அறிக்கையின் 124, 125 ஆகிய பக்கங்களில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத விடயங்கள் இடம்பெறும் பகுதிகளுக்குச் சென்று அதுகுறித்து விசாரணைகளை நடத்தும் அதிகாரம் வழங்கும் வகையில், குற்றவியல் கோவை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என அந்தப் பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகளை நடத்துமாறு போலீஸ் மாஅதிபருக்கு உத்தரவிடுதல் உள்ளிட்ட மேலும் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ரணில் விக்ரமசிங்க தற்போது கூறுவது என்ன?
படலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை தான் முழுமையாகவே நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை விவகாரம் தொடர்பில் தன்மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதைக் குறிப்பிட்டுள்ளார்.
”கடந்த 1987ஆம் ஆண்டு இந்திய – இலங்கை உடன்படிக்கை கைச்சாத்து இடப்பட்டதைத் தொடர்ந்து, மக்கள் விடுதலை முன்னணி நாடு முழுவதும் வன்முறைகளைத் தோற்றுவிப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்திருந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் நாட்டின் முக்கியமான இடங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு, அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டது” என அவர் கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “பியகம பகுதியில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம், டீசல் மின் உற்பத்தி நிலையம், மாவெலியில் இருந்து கொழும்பிற்கு மின்சாரத்தைக் கடத்தும் மத்திய நிலையம் உள்ளிட்ட வர்த்தக மையங்களில் முக்கியமான பொருளாதார நிலையங்கள் காணப்பட்டன. அந்தப் பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ராணுவம் வரவழைக்கப்பட்டது.
பாதுகாப்புப் பிரிவினர் தங்குவதற்காக இலங்கை உர கூட்டுத் தாபனத்திற்குச் சொந்தமான, அந்தச் சந்தர்ப்பத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட கட்டடங்கள் மற்றும் வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்திலும் இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் சில வீடுகளில் தங்கியிருந்தனர். இந்த வன்முறை காலப் பகுதியில் சப்புகஸ்கந்த போலீஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி போலீஸ் பொறுப்பதிகாரி கொலை செய்யப்பட்டார்,” என்று தெரிவித்துள்ளார்.
அதோடு, “அப்போதைய பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ரஞ்ஜன் விஜேரத்ன என்னுடன் தொடர்பு கொண்டு பேசினார். ராணுவம் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக வீடமைப்புத் திட்டத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த வீடுகளை அவர்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி, களனி போலீஸ் அதிகாரியான நலின் தெல்கொடவிடம் கையளிக்கப்பட்டது” என்றும் கூறியுள்ளார்.
மேலும், இந்த காலப் பகுதியில் உள்ளுராட்சி சபை உறுப்பினர் ஒருவர், கூட்டுறவு சங்கத் தலைவர், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கொலை செய்யப்பட்டதாகவும், சில வீடுகளின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ள ரணில் விக்ரமசிங்க, “சரிவை எதிர்நோக்கியிருந்த பொருளாதாரத்தையும், மக்களின் இயல்வு வாழ்க்கையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காக அதிகாரத்தில் இருந்த அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமின்ற், இந்த ஆணைக்குழு அரசியல் இலாபத்தை கருத்திற் கொண்டே செயற்பட்டதாகவும் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டுகின்றார்.
”கடந்த 1994ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, படலந்த பகுதியில் சித்திரவதை முகாமொன்று இருந்ததா என்பதைக் கண்டறிவதற்காக ஆணைக்குழுவொன்றை நியமித்திருந்தார். அதற்காகப் பலரை வரவழைத்திருந்தார். என்னை சாட்சியாளராக மாத்திரமே வரச் சொன்னார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் நான் எதிர்கட்சித் தலைவராகச் செயற்பட்டேன்.”
“படலந்த ஆணைக்குழு முழுமையாக அரசியல் சேறுபூசும் நடவடிக்கையை நோக்கமாகக் கொண்டது. எனினும், அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. அறிக்கையில் அமைச்சர் என்றே என்னைக் குறிப்பிட்டுள்ளனர். போலீஸ் அத்தியட்சகரினால் போலீஸ் அதிகாரிகளுக்கு வீடுகள் வழங்குவது சரியானது இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. போலீஸ் மாஅதிபருக்கு வீடுகளை வழங்கி, அதை போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்குவதே சரியான நடைமுறை எனக் கூறப்பட்டுள்ளது.”
“இதில் நானும், தெல்கொடவும் பொறுப்பு கூற வேண்டும் என ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய விடயங்கள் என்னுடன் தொடர்புப்படவில்லை” என அவர் பதிலளித்துள்ளார்.
இந்த அறிக்கையை பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்ளாத காரணத்தாலேயே நாடாளுமன்றத்தில் இந்த அறிக்கை குறித்து விவாதம் இடம்பெறவில்லை எனத் தான் நம்புவதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிடுகின்றார்.
அத்துடன், நாடாளுமன்ற சபை அறிக்கையொன்றை 25 வருடங்களுக்குப் பின்னர் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் சம்பிரதாயம் இலங்கை நாடாளுமன்றத்தில் மாத்திரமன்றி, உலகிலுள்ள எந்தவொரு நாடாளுமன்றத்திலும் கிடையாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதில் வழங்கியுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு