நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் திகதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். இதுதொடர்பாக பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. முன்னதாக, இந்தப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது ஒப்புக்கொண்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, பிடிகொடுக்காமல் இருந்த ரஷ்யாவிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த நிலையில், கருங்கடல் பகுதியில் போர்நிறுத்தத்தை அமல்படுத்த ரஷ்யா மற்றும் உக்ரைன் ஒப்புக் கொண்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கருங்கடல் பகுதியில் ரஷ்யா படைகளை குவித்து வரும் சூழலில், அதனை கட்டுப்படுத்த அமெரிக்காவிடம் உக்ரைன் வலியுறுத்தியது. அதன்படி, சவுதி அரேபியாவில் நடந்த பேச்சுவார்த்தையில் கருங்கடல் பகுதியில் போர்நிறுத்தத்தை அமல்படுத்த இருநாடுகளும் ஒப்புக் கொண்டன. அதேபோன்று கருங்கடலில் ராணுவ நோக்கங்களுக்காக வணிகக் கப்பல்களை பயன்படுத்துவதைத் தடுக்கவும், பாதுகாப்பான கடல்வழி பயணத்தை உறுதி செய்யவும் ரஷ்யா, உக்ரைன் உறுதிப்பூண்டுள்ளன.

இந்த தகவலை உறுதி செய்துள்ள அமெரிக்க வெள்ளை மாளிகை, இதற்கு பலனாக ரஷ்யா மீது விதிக்கப்பட்ட விவசாயப் பொருட்கள் மற்றும் உரம் ஏற்றுமதிக்கான தடையை நீக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply