மியான்மரை 7.7 என சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியிருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளாது.
நில நடுக்கம் சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டது.
சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில் பாங்காக்கில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் கூற்றின்படி, நிலநடுக்கத்தின் மையப்புள்ளி பர்மிய நகரான சர்காயிங்-ன் வடமேற்கில் 16 கிலோமீட்டரில், அமைந்திருந்தது. இந்த பகுதி தலைநகர் நேபிடோவிற்கு வடக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
மியான்மரில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டு 12 நிமிடங்களே ஆன நிலையில், மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரண்டாவது ஏற்பட்ட நிலநடுக்கம் 6.4 ஆக பதிவானது. இதன் மையம், சர்காயிங்கிற்கு தெற்கே 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
நேபிடோவில் சாலைகள் சிதைந்திருப்பதை படங்கள் காட்டுகின்றன. நாட்டின் ராணுவ அரசு ஆறு பகுதிகளில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தாய்லாந்தில் முழுமையாக கட்டி முடிக்கப்படாத 30 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் ஒரு கட்டடத்தின் கூரை மீது இருந்த தண்ணீர் தெறித்து பல தளங்களை தாக்கி இறுதியாக கீழே தெருக்களில் ஊற்றியது.
பிபிசி குழுவினர் பாங்காங்கில் கட்டடங்கள் அசைந்ததாக தெரிவிக்கின்றனர். மேலும், மக்கள் தெருக்களில் தஞ்சமடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
நில அதிர்வு தலை சுற்றலை தருமளவு இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாங்காக்கில் இருந்து நூற்றுக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள முழுமையாக கட்டி முடிக்கப்படாத 30 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது.
Breaking: Video shows the moment a skyscraper under construction collapsed due to earthquake in Bangkok. pic.twitter.com/OIdxc4epKf
— PM Breaking News (@PMBreakingNews) March 28, 2025
இதில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளதாக தாய்லாந்தில் உள்ள தேசிய அவசர கால மருத்துவ சேவை மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக 43 பேரை காணவில்லை என தெரிவித்திருந்தது.
கட்டடம் இடிந்து விழுந்தபோது சுமார் 320 தொழிலாளர்கள் அந்த இடத்தில் இருந்ததாகவும், மின் தூக்கியில் 20 பேர் சிக்கிக்கொண்டிருப்பதாகவும் முகநூல் பதிவொன்றில் தெரிவித்திருந்தது.
உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறித்து தெளிவில்லாத நிலையில், சம்பவ இடத்திலேயே ஒரு கள மருத்துவமனை அமைக்கப்பட்டு மீட்புப் பணியாளர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மியான்மர் தலைநகரில் இடிந்து விழுந்த கட்டடம்
‘நூற்றுக்கணக்காணவர்கள் இறந்திருக்கலாம்’
மியான்மரின் மண்டலேவில் இருக்கும் மீட்புக் குழுவைச் சேர்ந்த ஒருவர் சேதம் மிகப் பெரியது என பிபிசியிடம் தெரிவித்தார்.
”உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் மிகவும் அதிகம். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்துகொண்டிருப்பதால் இப்போதைக்கு எங்களால் இவ்வளவுதான் சொல்லமுடியும்,” என்று அவர்கள் கூறுகின்றனர்.
”உயிரிழந்தவர்கள் எவ்வளவு பேர் என்பது சரியாக இன்னமும் தெரியவில்லை,ஆனால் பல நூறு பேர் இறந்திருப்பார்கள்”
‘நிலநடுக்கத்தை நீண்ட நேரம் உணர்ந்தேன்’
மியான்மரின் மிகப்பெரிய நகரான யாங்கானில் வசிக்கும் சோ லிவின் நிலநடுக்கத்தை நீண்ட நேரம் உணர்ந்ததாக தெரிவித்தார்.
நாட்டின் முன்னாள் தலைநகரான இந்த நகரில் பரவலாக சேதம் ஏற்பட்டதாக தெரியவில்லை என அவர் தெரிவித்தார். எதிர்வரும் நாட்களில் இதைவிட பெரிய நிலநடுக்கம் ஏற்படுமோ என மக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மியான்மரில் சிகிச்சைக்காக காத்திருக்கும் மக்கள்
விமான நிலையத்தில் பதற்றமான நிலை
சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர் மியான்மரின் மண்டலே விமானநிலையத்தில் எடுக்கப்பட்டதாக தோன்றும் உறுதிசெய்யப்படாத காணொளி வெளியாகியுள்ளது.
அதில் மக்கள் கூச்சலிட்டுக்கொண்டு தார்சாலையில் அமர்ந்திருக்கின்றனர். பின்புலத்தில் ஜெட்விமானம் ஒன்று காணப்படுகிறது.
”அமருங்கள், ஓடாதீர்கள்” என்ற குரல்கள் எழுவதை கேட்கமுடிகிறது.
ஆன்லைனில் வெளியாகும் வீடியோக்களின் நம்பக்கத்தன்மையை உறுதி செய்ய பிபிசி முயற்சி செய்துகொண்டிருக்கிறது.
மியான்மர் தலைநகர் நேபிடோவில் சாலைகள் சிதைந்துள்ளன
மியான்மரிலிருந்து தகவல்களை பெறுவது ஏன் கடினம்?
மியான்மரில் 2021ஆம் ஆண்டு முதலே ராணுவம் ஆட்சி செய்து வருவதால், தகவல் பெறுவது கடினமாக இருக்கிறது. உள்ளூர் வானொலி, தொலைக்காட்சி, அச்சு மற்றும் ஆன்லைன் ஊடகங்களை அரசு கட்டுப்படுத்துகிறது.
இணைய சேவை பயன்பாடும் கட்டுபாட்டுக்கு உட்பட்டது.
தொலைத்தொடர்பு வசதிகளும் துண்டிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. பிபிசியால் அடிமட்டத்தில் இயங்கும் உதவி முகமைகளை அணுகமுடியவில்லை.
தாய்லாந்து நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் இல்லை என்பதுடன் அங்கு அபூர்வமாக உணரப்படும் அனைத்து நிலநடுக்கங்களும் அண்டை நாடான மியன்மாரில் ஏற்படுகின்றன.
பாங்காங்கில் உள்ள கட்டடங்கள் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களை தாங்ககூடியவகையில் வடிவமைக்கப்பட்டவை அல்ல என்பதால், கட்டமைப்புக்கு ஏற்படும் பாதிப்பு தீவிரமானதாக இருக்கலாம்.
நிலநடுக்கம் ஏற்பட்ட போதுதான் வீட்டில் சமைத்துக்கொண்டிந்ததாக பாங்காங்கில் வசிக்கும் பிபிசி செய்தியாளர் புய் து பிபிசி உலக சேவையின் நியூஸ்டே நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
“நான் மிகவும் பதற்றத்தில் இருந்தேன், நான் அச்சமடைந்திருந்தேன்,” என்கிறார் அவர். “அது என்னவென்றே எனக்கு தெரியவில்லை, ஏனென்றால், பாங்காங்கில் இது போன்ற ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு பத்தாண்டுகளுக்கு மேல் இருக்கும் என நினைக்கிறேன்.”
“எனது அபார்ட்மெண்டில் சுவர்களில் சில வெடிப்புகளை மட்டும் பார்த்தேன், நீச்சல் குளங்களிலிருந்து தண்ணீர் வெளியே தெளித்தது, மற்றும் மக்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.
பின்னதிர்வு ஏற்பட்டவுடன் அவர் மேலும் பலருடன் சேர்ந்து தெருவுக்கு ஓடினர். “என்ன நடந்தது என புரிந்துகொள்ள நாங்கள் முயன்றுகொண்டிருந்தோம்,” என்கிறார் அவர்.
“பாங்காங்கில் உள்ள கட்டடங்கள் நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும்வகையில் கட்டமைக்கபடவில்லை, எனவே பெரிய அளவு சேதம் இருக்கப் போகிறது என நான் நினைக்கிறேன்,”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு