இந்தியா, பாகிஸ்தான் இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் கட்டப்பட்ட ‘கமான் அமன் சேது’ பாலம் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு உடல்களை மீட்டுக் கொண்டு வருவதற்காக சமீபத்தில் திறக்கப்பட்டது.
காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் உரி பகுதியைச் சேர்ந்த ஓர் இளம் பெண்ணும் ஆணும் ஜீலம் ஆற்றில் மூழ்கி இறந்தனர். அவர்களின் உடல்கள் பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீருக்கு கொண்டு செல்லப்பட்டன.
‘கமான் அமன் சேது’ பாலம் பாரமுல்லாவின் உரி பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் அமைந்துள்ளது. இந்தப் பாலத்தின் ஒருபுறம் இந்திய ராணுவமும், மறுபுறம் பாகிஸ்தான் ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளன.
பலத்த நீரோட்டத்தின் காரணமாக, அந்த இளம்பெண் மற்றும் ஆணின் உடல்கள் பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் காஷ்மீர் பகுதியை அடைந்தன. பல நாட்கள் தேடிய பிறகு, இருவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன.
இறந்தவர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக, இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, ஆறு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த ‘கமான் அமன் சேது’ பாலத்தைத் திறக்க முடிவு செய்யப்பட்டது.
என்ன நடந்தது?
அவர்கள் இருவரும் 22 வயதான யாசிர் உசேன் ஷா மற்றும் 21 வயதான ஆயிஷா பானோ என அடையாளம் காணப்பட்டனர்.
மார்ச் 5, 2025 அன்று, காஷ்மீரின் உரி பகுதியில் உள்ள ஜீலம் ஆற்றில் மூழ்கி ஓர் இளம் பெண்ணும் ஆணும் காணாமல் போயினர்.
உள்ளூர் காவல்துறையும், துணைப் பேரிடர் மீட்புப் படையினரும் பல நாட்கள் இருவரையும் தேடினர், ஆனால் தேடுதல் முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.
பின்னர், அவர்கள் இருவரின் உடல்களும் பலத்த நீரோட்டத்தின் காரணமாக, கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரை அடைந்ததாகத் தெரிய வந்தது.
அவர்கள் இருவரும் 22 வயதான யாசிர் உசேன் ஷா மற்றும் 21 வயதான ஆயிஷா பானோ என அடையாளம் காணப்பட்டனர்.
மார்ச் 19 அன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரின் சினாரி செக்டாரில் ஆயிஷா பானோவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. உள்ளூர் மக்கள் அளித்த தகவலின் பேரில், அங்குள்ள நிர்வாகம் உடலை மீட்டது.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, மார்ச் 21ஆம் தேதியன்று, சினாரி செக்டருக்கு அருகிலுள்ள சகோதி பகுதியில் யாசிரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இருவரது உடல்களும் கண்டெடுக்கப்பட்ட தகவல் கிடைத்ததும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் படைகள் தொடர்பு கொண்டு, இறந்தவர்களின் உடல்களை அவர்களது குடும்பங்களுக்குத் திருப்பி அனுப்ப முடிவு செய்தன.
அதன்படி, மார்ச் 22, 2025 அன்று பாகிஸ்தான் ராணுவம் இரு உடல்களையும் இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தது. அதன் பின்னர், ராணுவ நிர்வாகம் மற்றும் காவல்துறையின் முன்னிலையில் இறந்தவர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த விவகாரம் தொடர்பாக இந்திய ராணுவம் ஓர் அறிக்கையை வெளியிட்டது. “மார்ச் 20, 2025 அன்று, ஜீலம் நதியில் கடினமான சூழ்நிலையில், ஒரு சடலத்தைக் கண்ட ராணுவ வீரர்கள் அதை மீட்க முயன்றனர்.
ஆனால், பலத்த நீரோட்டத்தின் காரணமாக, உடல் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரின் சகோதி பகுதியை அடைந்தது. இதன் பிறகு, மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தான் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உடல்களை மீட்டுக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை ராணுவம் எடுக்கத் தொடங்கியது.
இதன்மூலம் இரு உடல்களையும் திரும்பப் பெற்ற ராணுவம், அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
குடும்ப உறுப்பினர்கள் கூறியது என்ன ?
படக்குறிப்பு, இறந்த இருவரின் உடல்கள் மார்ச் 22ஆம் தேதி அன்று இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
சம்பவம் நடந்த அன்று காலை 10 மணிக்குத் தனது மகள் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக பிபிசி ஹிந்திக்கு அளித்த தொலைபேசி உரையாடலில் அந்தப் பெண்ணின் தந்தை மொஹப்பத் கான் தெரிவித்தார்.
“அந்தப் பெண்ணுடைய அம்மா (மொஹப்பத் கானின் மனைவி) அவரைத் தடுக்க முயன்றார், ஆனால் அவர் கேட்கவில்லை. எனது மகள் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால், அவரைத் தேடிச் சென்ற எனது மகன், எனது மகளை யாசிருடன் பார்த்தார். இதெல்லாம் எப்படி நடந்தது, ஏன் நடந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை” என அந்தப் பெண்ணின் தந்தை மொஹப்பத் கான் கூறினார்.
மேலும் இருவருக்கும் இடையிலான உறவு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் மொஹப்பத் கான் கூறினார். அவர்களின் உறவைப் பற்றி இந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்பு எதுவும் தெரியாது என்று அந்த இளைஞரின் குடும்பத்தினரும் கூறுகிறார்கள்.
இதுகுறித்துப் பேசிய அவரது நெருங்கிய உறவினர் ஒருவர், “அவர்களுடைய உறவு பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. சம்பவம் நடந்த நாளன்று காலை வரை யாசிர் வீட்டில் இருந்தார்.
பின்னர் இந்தச் சம்பவங்கள் அனைத்தும் எப்படி நடந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை. இப்போது குறைந்தபட்சம் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டு வீட்டிற்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டதில் எங்களுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது” என்று பிபிசி ஹிந்தியிடம் கூறினார்.
இந்த வழக்கில் கிடைத்த ஆரம்பக்கட்ட தகவல்களின்படி, இது காதல் விவகாரம் தொடர்பான வழக்கைப் போலத் தெரிகிறது என்று காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
“இதுவரை, இது நீரில் மூழ்கியது போன்ற ஒரு சம்பவமாகத் தெரிகிறது. விசாரணைக்குப் பிறகு மற்ற விஷயங்கள் தெளிவாகும்” என்று உரியின் துணைப் பிரிவு காவல் அதிகாரி தாரிக் அகமது பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, மோசமான வானிலை மற்றும் தொடர் மழையின் காரணமாக உடல்களைத் தேடுவது கடினமாகிவிட்டது என்றும், இதன் காரணமாக உடல்கள் எல்லைக் கோடு முழுவதும் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.
‘கமான் அமன் சேது’ பாலம் எப்போது மூடப்பட்டது?
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்த பிறகு, 2019ஆம் ஆண்டில் ‘கமான் அமன் சேது’ பாலம் முற்றிலுமாக மூடப்பட்டது. பிப்ரவரி 2019இல், புல்வாமாவில் சிஆர்பிஎஃப் படை வாகனங்களின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் சுமார் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
அந்தத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அப்போதிருந்து, இந்தப் பாலம் வழியாக எல்லைக் கோட்டுக்கு இடையே இருந்த வர்த்தகமும் மூடப்பட்டுள்ளது.
ஆயுதங்கள், போதைப்பொருள் மற்றும் போலி ரூபாய் நோட்டுகளை அனுப்ப இந்தப் பாதை பயன்படுத்தப்படுவதாக இந்திய உள்துறை அமைச்சகம் அப்போது கூறியிருந்தது.
ஸ்ரீநகரில் இருந்து உரி வரையிலான தூரம் சுமார் 80 கிலோமீட்டர்கள். உரி என்பது உயரமான மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம். இங்கிருந்து ‘காமன் அமன் சேது’ பாலம் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
பாலத்தை அடைந்த பிறகு, இருபுறமும் தெளிவாகத் தெரியும். எல்லையின் இருபுறமும் வசிக்கும் குடும்பங்களின் பயன்பாட்டிற்காக ‘கமான் அமன் சேது’ பாலம் முதன்முதலில் 2005ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகமும் இந்தப் பாலத்தின் வழியாகத் தொடங்கியது.
‘அமைதிப் பாலம்’ என்றும் ‘கமான் அமன் சேது பாலம்’ அழைக்கப்படுகிறது. எல்லையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசிக்கின்றன, அவர்கள் ஒருவருக்கொருவர் உறவினர்களாக உள்ளனர்.
ஆனால் இந்தக் குடும்பங்கள் ஒருவரையொருவர் சந்திக்க இரு நாட்டு அரசுகளிடம் இருந்தும் அனுமதி பெற வேண்டும்.
– இது, பிபிசி நியூஸ்-