புதினைப் பற்றிப் பேசும்போது, ரஷ்ய அரசுக்கு தனது கோபம் தெரியும் என்றும், அதோடு ரஷ்யத் தலைவருடன் தனக்கு “மிக நல்ல உறவு” இருப்பதாகவும், “அவர் சரியானதைச் செய்தால் இந்தக் கோபம் விரைவாகக் போய்விடும்” என்றும் டிரம்ப் கூறினார்.

யுக்ரேனில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் வாரக்கணக்கில் ஈடுபட்டபிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மீது தான் ‘கடுங்கோபத்திலும்’ ‘எரிச்சலிலும்’ இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கியின் நம்பகத்தன்மை குறித்து கடுமையாக பேசி வரும் ரஷ்ய அதிபர் புதினை விமர்சித்த டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 50% வரி விதிக்கப்படும் என மிரட்டியுள்ளார். என்பிசி செய்திகளுக்கு அளித்த நேர்காணலின் போது டிரம்ப் இக்கருத்தை தெரிவித்தார்.

புதிய தேர்தலை நடத்த ஐக்கிய நாடுகள் சபை அரசை நிறுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி கடந்த வாரம் பேசிய புதின், அதன் பிறகு அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கலாம் என கூறினார்.

புதின் மீதான தொனியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை டிரம்பின் இந்த கருத்துக்கள் காட்டுகின்றன. கடந்த ஆறு வாரங்களில், பல்வேறு சலுகைகள் செய்யச் சொல்லி ஸெலன்ஸ்கியை கடுமையாக வலியுறுத்தி வந்தார் டிரம்ப்

யுக்ரேனின் அரிய தாதுக்களை அமெரிக்காவுடன் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தத்தில் இருந்து ”விலக நினைப்பதாக” ஸெலன்ஸ்கி மீது ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டிய டிரம்ப், அப்படி நடந்தால் ‘பெரிய, பெரிய பிரச்னைகள்’ வரும்’ என்று எச்சரித்தார்.

அதோடு புதினைப் புகழ்ந்த டிரம்ப், ரஷ்ய அதிபரின் கோரிக்கைகளில் பெருமளவை ஏற்றுக்கொண்டார்.

டிரம்ப் புதினுடன் நெருக்கமாகிறார் என்று ஐரோப்பியத் தலைவர்களுக்கு வருத்தம் இருக்கிறது.

ஆனால் ஞாயிற்றுக்கிழமை டிரம்ப் வெளியிட்ட கருத்துக்கள் இந்த அணுகுமுறையில் இருந்து விடைபெற்றுக் கொள்வது போன்ற தோற்றத்தைத் தருகின்றன.

போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளை இழுத்தடிப்பதற்கான விளைவுகளை ரஷ்யா அனுபவிக்கும் என்று முதன்முறையாக அமெரிக்க மிரட்டியுள்ளது.

தங்களுடனான பத்து நிமிட தொலைபேசி நேர்காணலில், ஸெலன்ஸ்கியின் தலைமைத்துவம் பற்றிய நம்பகத்தன்மையை புதின் விமர்சித்தபோது தான் கடுங்கோபமும், ‘எரிச்சலும்’ கொண்டதாக டிரம்ப் தெரிவித்தார் என்று என்பிசி செய்திகள் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு யுக்ரேன் அதிபரை சர்வாதிகாரி என்றும், யுக்ரேனில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

”புதின் ஸெலன்ஸ்கியின் நம்பகத்தன்மை பற்றிப் பேச ஆரம்பித்தபோது எனக்கு ரொம்பவே கோபமும், எரிச்சலும் வந்தது என்று சொல்லலாம். ஏனேனில் பேச்சுவார்த்தை சரியான திசையை நோக்கிச் செல்லவில்லை” என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

புதினைப் பற்றிப் பேசும்போது, ரஷ்ய அரசுக்கு தனது கோபம் தெரியும் என்றும், அதோடு ரஷ்யத் தலைவருடன் தனக்கு “மிக நல்ல உறவு” இருப்பதாகவும், “அவர் சரியானதைச் செய்தால் இந்தக் கோபம் விரைவாகக் போய்விடும்” என்றும் டிரம்ப் கூறினார்.

ரஷ்யா போர் நிறுத்தத்துக்கு வரவில்லை என்றால், அது புதினின் தவறு என்று தான் நினைத்தால், ரஷ்யாவின் பொருளாதாரத்தை மேலும் குறிவைக்கப் போவதாக டிரம்ப் அச்சுறுத்தி உள்ளார்.

“யுக்ரேனில் நடக்கும் தாக்குதலை நிறுத்துவதில் ரஷ்யாவும் நானும் ஒரு ஒப்பந்தம் செய்ய முடியாவிட்டால், அது ரஷ்யாவின் தவறு என்று நான் நினைத்தால் – அப்படி நடக்காது என்று நினைக்கிறேன்.. நான் ரஷ்யாவில் இருந்து வரும் எண்ணெய் மொத்தத்திற்கும் இரண்டாம் நிலை வரிகளை விதிக்கப் போகிறேன்” என்று அவர் கூறினார்.

“அமெரிக்காவில் விற்கப்படும் எண்ணெய் மற்றும் பிற பொருட்களுக்கு 25% வரி, இரண்டாம் நிலை வரியாக விதிக்கப்படும்” என்றும் டிரம்ப் கூறினார். போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால் ஒரே மாதத்தில் ரஷ்யா மீதான வரிகள் விதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இரண்டாம் நிலை வரிகள் என்பது வேறொரு நாட்டோடு வணிகம் செய்யும் நாடுகள் மீதான தடைகள். ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குள் நுழையும் பொருட்களுக்கு 50% வரை வரிவிதிப்பு இருக்கலாம். சீனாவும் இந்தியாவும் ரஷ்யாவிடம் இருந்து அதிகளவிலான எண்ணெயை வாங்குகின்றன.

“இந்தப் போரை மேலும் நீட்டிக்க ரஷ்யா தொடர்ந்து காரணங்களைத் தேடுகிறது” என்று ஸெலன்ஸ்கி சமூக ஊடகத்தில் எழுதியுள்ளார்.

”2014 ஆம் ஆண்டு முதல் புதின் ஒரே விளையாட்டைத்தான் விளையாடுகிறார்” என்றார் ஸெலன்ஸ்கி. அப்போது கிரைமியாவை தன்னிச்சையாக இணைத்துக்கொண்டது ரஷ்யா.

”இப்படி நடந்துகொள்வது அனைவருக்குமே ஆபத்தானது – அமைதியை விரும்பும் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அனைத்து உலகளாவிய நண்பர்களிடமிருந்தும் இதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படவேண்டும்”.

அமெரிக்க-யுக்ரேன் கனிம ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஸெலன்ஸ்கி முயற்சிக்கிறார் என தான் நினைப்பதாக டிரம்ப் கூறினார்.

“அப்படி அவர் செய்தால் அவருக்குப் பல சிக்கல்கள் வரும்,” என்று ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் கூறினார் டிரம்ப்.

ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராக இருப்பதாக ஸெலன்ஸ்கி முன்பு கூறியிருந்தார்.

பிப்ரவரியில் இது கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெள்ளை மாளிகையில் நடந்த இருவரின் சந்திப்பில் நடந்த வாய்ச்சண்டையால்ல் இம்முயற்சி தடம் புரண்டது.

மேம்பட்ட பாதுகாப்பு உத்தரவாதங்களைப் பெறுவதற்காக ஸெலன்ஸ்கி இந்த ஒப்பந்தத்தை மாற்ற விரும்புவதாக ஞாயிற்றுக்கிழமை டிரம்ப் தெரிவித்தார்.

“அவர் நேட்டோவின் உறுப்பினராக இருக்க விரும்புகிறார். ஆனால் அவர் ஒருபோதும் நேட்டோ உறுப்பினராக இருக்கப் போவதில்லை. அதை அவரும் புரிந்துதான் வைத்திருக்கிறார்.”

விமானப் பயணத்தின் போது, டிரம்ப் புதினைப் பற்றிய தனது கருத்துக்களை மென்மையாக்கியது போலத் தோன்றியது.

“புதின் தனது வார்த்தையிலிருந்து பின்வாங்க மாட்டார் என்று நான் நினைக்கிறேன்,” என்று தெரிவித்தார்.

“எனக்கு அவரை நெடுநாட்களாகத் தெரியும். எங்களுக்குள் எப்போதும் ஒத்துப் போயிருந்திருக்கிறது”.

பின்னர் இந்த வாரத்தில் தான் புதினுடன் பேசப் போவதாக டிரம்ப் கூறினார்.


 “இந்தப் போரை மேலும் நீட்டிக்க ரஷ்யா தொடர்ந்து காரணங்களைத் தேடுகிறது” என்று ஸெலன்ஸ்கி சமூக ஊடகத்தில் எழுதியுள்ளார்.

அதிபர் ஸெலன்ஸ்கி தனது பதவிக்காலம் முடிந்தபிறகும் ஆட்சியில் நீடித்து வருவதால் தற்போதைய யுக்ரேன் ஆட்சியாளர்கள் சட்டத்துக்குப் புறம்பானவர்கள் என்றும் பேச்சுவார்த்தைக்கான சரியான கூட்டாளி அல்ல என்றும் ரஷ்யா கூறுகிறது.

ஆனால் ராணுவச் சட்டம் நடைமுறையில் இருப்பதாலும், போரால் ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாலும் ஸெலன்ஸ்கி பதவியில் இருக்கிறார்.

ஐந்து மில்லியனுக்கும் அதிகமான யுக்ரேனிய குடிமக்கள் வேறு நாடுகளில் இடம்பெயர்ந்துள்ளதாலும், பல லட்சக்கணக்கானோர் வீட்டில் இருந்து வெளியேறி போர் முனையில் சண்டையிட்டுக் கொண்டிருப்பதாலும் ஒரு நியாயமான, முழுமையான தேர்தலை நடத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்ற ஒன்று.

ரஷ்யா பிப்ரவரி 2022 இல் அதன் அண்டை நாடான யுக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியது. தற்போது யுக்ரேன் பகுதியில் சுமார் 20% ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பிபிசி ரஷ்ய சேவை, சுயாதீன ஊடகக் குழுவான மீடியாஸோனா மற்றும் போர் தொடங்கியதிலிருந்து இறப்புகளை கணக்கிட்டு வரும் தன்னார்வலர்கள் ஆகியோரிடம் இருக்கும் தரவுகளைப் பகுப்பாய்வு செய்ததில், ரஷ்ய ராணுவத்திற்காகப் போர் புரிந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இப்போது வரை மரணித்துள்ளனர்.

போரில் 43,0000 யுக்ரேன் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உயிரிழந்தாக யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி டிசம்பர் 2024 இல் கூறினார்

மேற்கத்திய ஆய்வாளர்கள் இந்த எண்ணிக்கை ஒரு குறைவான மதிப்பீடு என்று நம்புகிறார்கள்.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Share.
Leave A Reply