காசா மக்களை வேறொரு நாட்டுக்கு புலம்பெயரச் செய்வ தில் இஸ்ரேல் குறியாக இருக்கிறது. இதற்கென பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இது தொடர்பில் அண்மைக் காலத்தில் எதனையும் குறிப்பிடாத இஸ்ரேல், அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் இத்திட்டத்தில் தீவிர கவனம் செலுத்தியுள்ளது.
ட்ரம்ப் ஜனாதிபதியாகப் பதவியேற்ற சில தினங்களில், “கடந்த 15 மாதங்களாக நீடித்த யுத்தம் காரணமாக காசா பெரிதும் அழிவுற்றுள்ளது. அதனை மீளக்கட்டியெழுப்புவதற்கு அங்குள்ள மக்களை ஜோர்தானுக்கும் எகிப்துக்கும் அனுப்பி வைக்க வேண்டும். அவர்களை இரு நாடுகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
ட்ரம்பின் இத்திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அமைச்சர்களும் பெரிதும் வரவேற்றுப் பாராட்டினர்.
ஆனால் காசா மக்கள் மாத்திரமல்லாமல் பலஸ்தீனியர்கள் இதனை நிராகரித்தனர். எகிப்தும், ஜோர்தானும் இத்திட்டத்தை உடனடியாக நிராகரித்தின. அரபு, முஸ்லிம் நாடுகளும் கூட இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கண்டித்தன.
அத்தோடு ட்ரம்பின் இத்திட்டத்திற்கு மாற்றமாக, காசா மக்கள் அங்கிருக்கும் நிலையில் அவர்களது பங்களிப்புடன் காசாவை மீளக்கட்டியெழுப்பும் திட்டம் எகிப்து தலைமையில் தயாரிக்கப்பட்டது. அத்திட்டத்திற்கு அரபு, முஸ்லிம் நாடுகள் உட்பட ஐரோப்பிய நாடுகள் அடங்கலாக உலகின் பல நாடுகளும் ஆதரவளித்துள்ளன.
ஆனால் ட்ரம்ப் நிர்வாகத்தினர் இத்திட்டத்தை நிராகரித்துள்ளனர். காசா தொடர்பான தமது நிலைப்பாட்டில் ட்ரம்ப் உறுதியாக இருப்பதாக வெள்ளை மாளிகை வட்டாரங்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.
ஆனால் ஐரிஷ் பிரதமர் மைக்கல் மார்ட்டினுடன் மார்ச் 13 ஆம் திகதி ஒவல் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது, ‘யாரும் எந்த பலஸ்தீனியரையும் வெளியேற்றவில்லை’ என்றுள்ளார் ட்ரம்ப்.
காசாவிலும், மேற்குக்கரை, கிழக்கு ஜெரூஸலம் ஆகிய பிரதேசங்களிலும் காணப்படும் அகதி முகாம்களில் தங்கியிருப்பவர்கள் அந்தப் பூமியின் பூர்வீக மக்களாவர். காசாவில் இருப்பவர்கள் 1930 – 40 காலப்பகுதி முதல் பலஸ்தீனில் தங்கள் பாரம்பரிய இடங்களை கட்டம் கட்டமாக இழந்து காசாவுக்குள் புலம்பெயர்ந்துள்ளவர்களாவர்.
இவர்கள் காசாவில் எட்டு பாரிய முகாம்களில் தங்கியுள்ளனர். இன்றைய காசா சனத்தொகையில் 90 சதவீதமானவர்கள் இம்முகாம்களில் உள்ளனர். அவர்கள் தங்களது பூர்வீக இடங்களுக்கு திரும்ப முடியும் என்ற நம்பிக்கையில் அங்கு தங்கியிருக்கின்றனர்.
ஆனால் இஸ்ரேலின் தேசியவாதிகள் காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் இருந்து பலஸ்தீனியர்களை வெளியேற்ற நீண்ட காலமாக முயன்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2023 ஒக்டோபர் 07 ஆம் திகதி காசா மீதான யுத்தம் ஆரம்பமானது முதல் அங்குள்ள பலஸ்தீனர்கள் வெளியேறிச் செல்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடும் விமானத் தாக்குதல்கள் ஊடாக உயிரிழப்புக்கள் தொடருகின்றன. ஆயிரக்கணக்கானோர் காயமடைகின்றனர். உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளை அனுப்பி வைப்பதற்கு இறுக்கமான கட்டுப்பாடுகள் உள்ளன.
மின்தடை மற்றும் யுத்தம் காரணமாக இடம்பெயரும் மக்கள் திறந்தவெளிகளிலும், தற்காலிக கூடாரங்களிலும் தங்கும் நிலை உள்ளது. எங்கும் கட்டட இடிபாடுகள் நிறைந்துள்ளன. அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் தாக்குதல்கள் ஊடாக அழித்து சேதமாக்கப்பட்டுள்ளன.
அத்தகைய துன்பங்களுக்கு முகம்கொடுத்த போதிலும், அந்த மக்கள் தங்கள் வாழிடங்களை விட்டு வெளியேறத் தயாராக இல்லை. தங்கள் பூர்வீக வாழிடங்களில் இருப்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.
இஸ்லாத்தின் மூன்றாவது புனிதத் தலமான அல் அக்ஸா அமைந்துள்ள பூமியும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களும் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவையாக உள்ளன. அந்தப் பூமியில் பல இறைத்தூதர்கள் வாழ்ந்து மறைந்துள்ளனர்.
இஸ்லாத்தின் இறுதித் தூதரான முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் சவுதியின் மக்காவில் இருந்து இஸ்ரா பயணம் மேற்கொண்ட பூமியாகவும் இறைவனை சந்திப்பதற்கான விண்ணுலக யாத்திரையை ஆரம்பித்த இடமாகவும் அந்த யாத்திரையை நிறைவு செய்து திரும்பிய இடமாகவும், முஸ்லிம்கள் தொழுகைக்காக முன்னோக்கிய முதலாவது தளமாகவும் அல் அக்ஸா விளங்குகிறது.
இவ்வாறு சிறப்புற்று விளங்கும் பூமியை விட்டு வெளியேற காசா மக்கள் உள்ளிட்ட பலஸ்தீன மக்கள் விருப்பம் கொள்ள மாட்டார்கள்.
இருப்பினும் அமெரிக்க ஜனாதிபதியின் அறிவிப்பை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதில் இஸ்ரேல் உச்சபட்ச முயற்சிகளை எடுத்துக் கொண்டுள்ளது.
எகிப்தும் ஜோர்தானும் காசா மக்களை ஏற்றுக்கொள்ள மறுத்ததைத் தொடர்ந்து சோமாலியா, சோமாலி லேன்ட், சூடான், சிரியா ஆகிய நாடுகளில் இம்மக்களைக் குடியேற்றுவதற்கான சாத்தியங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக அமெரிக்க, இஸ்ரேலிய அதிகாரிகளை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகின.
ஆனால் அத்தகைய பேச்சோ, அதற்கான அழைப்போ தமக்கு கிடைக்கப்பெறவில்லை என்றுள்ள சோமாலியாவின் வெளியுறவு அமைச்சர் அகமது மோலிம் ஃபிகி, ‘பலஸ்தீன மக்கள் தங்கள் மூதாதையர் நிலத்தில் அமைதியாக வாழும் உரிமையை குறைமதிப்புக்கு உட்படுத்தும் எந்தவொரு முன்மொழிவையும் அல்லது முன்முயற்சியையும் தனது நாடு திட்டவட்டமாக நிராகரிக்கும். மற்ற நாடுகளது மக்களின் கட்டாய மீள்குடியேற்றத்திற்காக சோமாலிய பிரதேசத்தைப் பயன்படுத்துவதை உள்ளடக்கிய எந்தவொரு திட்டத்தையும் மொகடிஷு எதிர்க்கிறது’ என்றுள்ளார்.
சூடான் அவ்வாறு எத்தகைய பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை என்றது. அதே கருத்தை சோமாலிலேண்டும் குறிப்பிட்டது. சிரியாவுடன் பேச்சு நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ‘பலஸ்தீனியர்களை இடம்பெயரச் செய்யும் எந்தவொரு முயற்சியையும் எகிப்து முழுமையாகவும் இறுதியாகவும் நிராகரிப்பதில் உறுதியாக உள்ளது’ என்று அந்நாடு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இவ்வாறான சூழலில் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் கார்ட்ஷின் யோசனைக்கு அமைய, பலஸ்தீனியர்கள் காசாவில் இருந்து தன்னார்வமாக வெளியேறுவதை மேற்பார்வையிட இஸ்ரேல் ஒரு அரசு நிறுவனத்தை நிறுவுவதற்கு பாதுகாப்பு அமைச்சரவை கடந்த 23 ஆம் திகதி அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த குடியேற்ற நிர்வாகக் கட்டமைப்பு பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் என்று இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளதாக டைம்ஸ் ஒப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல், காசா மக்களைப் புலம்பெயரச் செய்யும் நிறுவனத்தை ஸ்தாபிப்பதென்ற அறிவிப்புக்கும், மேற்குகரையில் 13 புதிய குடியேற்றங்களை அங்கீகரித்தமைக்கும் சவுதி அரேபியா, எகிப்து, கட்டார் உள்ளிட்ட பல நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.
ட்ரம்பின் முன்மொழிவோடு பலஸ்தீன மக்களை காசாவில் இருந்து வெளியேற்றும் திட்டம் பகிரங்கமடைந்த போதிலும்,
அற்கான முயற்சிகள் இற்றைக்கு 70 வருடங்களுக்கு முன்பே ஆரம்பமாகியுள்ளமை தெரியவந்துள்ளது. இதனை பிரித்தானிய வெளிவிவகார ஆவணக் கோப்புக்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்த ஆவணக் கோப்புகள் பிரித்தானிய தேசிய ஆவணக் காப்பகத்தில் காணப்படுகின்றன.
அந்த ஆவணங்களின்படி, 1955 ஜனவரியில் பிரித்தானிய அரசாங்கம் கெய்ரோவில் உள்ள தூதர் ஏ.ஜே.டி. ஸ்டிர்லிங்கை, காசாவுக்கு அனுப்பி, பலஸ்தீன அகதிகளின் நிலைமைகள், அகதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் எகிப்திய அரசாங்கத்தின் அணுகுமுறை மற்றும் அகதிகளின் மனநிலை என்பன குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளது.
அதற்கேற்ப அவர் வழங்கியுள்ள அறிக்கையில், காசா மற்றும் எகிப்தில் உள்ள பலஸ்தீன அகதிகள் வேறு எந்த அரபு நாட்டிலும் உள்ளவர்களை விட சிறந்த நிலையில் உள்ளனர்.
ஆனால் சினாயில் அவர்களைக் குடியேற்றத் தேர்ந்தெடுப்பதன் மூலம், பலஸ்தீனத்தில் உள்ள தங்கள் பூர்வீக வீடுகளுக்குத் திரும்புவதற்கான வாய்ப்பை இழக்க நேரிடும் என்று அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர் என்றுள்ளார்.
காசாவில் இருக்கும் பலஸ்தீனர்கள் தங்கள் பூர்வீக இருப்பிடங்களுக்கு திரும்பிச் செல்வதில் கொண்டிருக்கும் உறுதியான ஆர்வத்தையும் நோக்கத்தையும் அந்த அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
அதேநேரம் அன்று காசாவில் இருந்த பலஸ்தீன அகதிகளின் தலைவர்கள், பலஸ்தீன அகதிகளை பலஸ்தீனுக்கு வெளியிலோ சினாய் பாலைவனத்திலோ மீளக்குடியமர்த்த மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் கடும் விளைவுகளை சந்திக்கும் என்று எச்சரித்திருப்பதும் அந்த ஆவணங்களின் மூலம் தெரியவந்துள்ளது.
ஆகவே பலஸ்தீன மக்களை காசாவில் இருந்து வெளியேற்றும் திட்டம் புதியதொன்றல்ல. இது நீண்ட காலத் திட்டம் என்பது தெளிவாகிறது. ஆனால் அந்தப் பூமியின் பூர்வீக மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதை சர்வதேச சட்டங்களோ மனிதாபிமான சட்டங்களோ அங்கீகரிக்காது.