இந்தியப் பெருங்கடலின் நடுவே அமைந்துள்ள வடக்கு சென்டினல் தீவில் வசிப்பவர்களைப் பற்றி மிகக் குறைவான தகவல்களே உள்ளன. இந்திய பெருநிலப்பரப்பில் இருந்து 1,200 கி.மீ தொலைவில் உள்ள இந்த இடத்தில் எத்தனை பழங்குடியினர் தனித்து வாழ்கிறார்கள் என்பதோ அவர்கள் என்ன மொழி பேசுகிறார்கள் என்பதோ தெரியவில்லை.

இந்த சிறிய பழங்குடியினரைச் சுற்றியுள்ள மர்மம், பல ஆர்வமுள்ள நபர்கள் இவர்களை அணுக முயற்சிக்க வழிவகுத்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் அங்கு வசிப்பவர்களுக்கு ‘ஒரு புதிய, வளர்ந்து வரும் அச்சுறுத்தல்’ என்று விவரிக்கின்றன பழங்குடி மக்களின் உரிமை அமைப்புகள்.

மார்ச் 31 அன்று, இந்தத் தீவுகளில் 24 வயதான அமெரிக்க சுற்றுலாப் பயணியான மைக்கேலோ விக்டோரோவிச் பாலியகோவ் அனுமதி இன்றி நுழைந்தார்.

சென்டினல் தீவில் வசிக்கும் பழங்குடி மக்களைத் தொடர்பு கொள்ள முயற்சித்த பாலியகோவ் தான் சென்ற பயணத்தை பதிவு செய்தது மட்டுமல்ல அங்குள்ள கடற்கரையில் ஒரு சோடா கேனையும், தேங்காயையும் விட்டு வந்திருக்கிறார்.

சட்டப்படி இங்கே நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆகையால் இந்த சுற்றுலாப் பயணியை காவல்துறை கைது செய்துள்ளது.

”இந்த தனித்திருக்கும் பழங்குடியினருக்கு இப்போது வளர்ந்து வரும் அச்சுறுத்தல் சமூக ஊடக இன்ஃப்ளுயன்சர்கள்தான்,” என்கிறார் பிபிசி மராத்தி செய்தியாளர் ஜான்வி மூலே.


 வட சென்டினல் தீவில் இருக்கும் பழங்குடியினரின் எண்ணிக்கை 200க்கு அதிகமாக இருக்காது என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்

கடந்த சில வருடங்களில் தொடர்ந்து இந்தப் பழங்குடியினரைத் தொடர்பு கொள்ள பல தனி நபர்கள் முயற்சி செய்வது குறித்து மானுடவியலாளர்களும், சமூக செயல்பாட்டாளர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள்.

வெளிநபர்களுடன் தொடர்பு கொள்வதில் விருப்பமில்லை என்று இந்தப் பழங்குடியினர் பலமுறை வெளிக்காட்டியுள்ளனர் எனத் தாங்கள் நம்புவதாகவும் அவர்களது விருப்பம் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.

இந்த அமெரிக்கரின் வருகை அவருடைய மற்றும் அந்தப் பழங்குடியினரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல் என்று கூறுகிறது பழங்குடியினர் உரிமைகள் அமைப்பான சர்வைவல் இண்டர்நேஷனல்.

தங்கள் பங்கிற்கு, அமெரிக்க அதிகாரிகள் இந்த வழக்கைப் பற்றி அறிந்திருப்பதாகவும், ‘நிலைமையை உற்று கண்காணிப்பதாகவும்’ தெரிவித்தனர்.

ஆனால் யார் இந்தப் சென்டினல் பழங்குடியினர் மற்றும் இவர்களை சந்திப்பதில் என்ன ஆபத்து?
சென்டினல்


இந்தியாவில் இருந்து தனித்திருக்கிறது

இந்திய பெருநிலப்பரப்பிலிருந்து 1,200 கி.மீ தள்ளி இருக்கும், அந்தமான் நிக்கோபார் தீவுக்கூட்டத்தில் உள்ள ஒரு சிறு தீவான வட சென்டினல் தீவில் இந்தப் பழங்குடியினர் வசிக்கிறார்கள்.

ஜாரவா, வட சென்டினல் மக்கள் உள்ளிட்ட “குறிப்பாக எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள்” என்று கருதக்கூடிய ஐந்து பழங்குடியினர் இங்கு உலகின் பிறபகுதிகளில் இருந்து பெரும்பாலும் தனிமைப்பட்டு வாழ்கிறார்கள்.

சரியான எண்ணிக்கை தெரியவில்லை என்றாலும், 50ல் இருந்து 200 வரையிலான எண்ணிக்கையில் இந்தப் பழங்குடியினர் இருக்கலாம் என்று நிபுணர்கள் கணிக்கிறார்கள். அவர்களது மொழி உள்ளிட்ட அவர்களது கலாச்சாரம் பற்றி ஒன்றும் தெரியவில்லை. தங்களுக்குப் பக்கத்தில் உள்ள தீவுகளில் பேசும் மொழியைப் பேசுகிறார்களா அல்லது ஏதேனும் மொழியைப் பேசுகிறார்களா என்பதே தெளிவாகத் தெரியவில்லை.

 பிரதான இந்தியாவில் இருந்து 1,200 கிமீ தொலைவில் இருக்கிறது சென்டினல் தீவு

தாங்கள் வேட்டைக்குப் பயன்படுத்தும் கருவிகளான வில் மற்றும் அம்புகள் பயன்பாட்டால் தனித்துவம் பெறும் இவர்கள், வெளி மனிதர்களுக்கு ஆபத்தானவர்கள் என்று நிரூபித்திருக்கிறார்கள்.

“எந்த வெளிநபருடனும் சென்டினல் மக்கள் விரோதப்போக்கை கொண்டிருப்பார்கள். பொதுவாகத் தொடர்பு கொள்ளும் முயற்சிகளை அவர்கள் தவிர்க்கிறார்கள். சில சமயம் ஆயுதங்களைப் பயன்படுத்தி எதிர்வினையாற்றியுள்ளனர்,” என்று மூலே கூறுகிறார்.

1974ல் நேஷனல் ஜியாக்ரஃபிக்குக்காக ஆவணப்படத்தை எடுக்க ஒரு இயக்குநர் சென்றபோது, அவரது காலில் அம்பெய்யப்பட்டுள்ளது..

2018 நவம்பர் மாதத்தில் இந்த தீவுக்குச் சென்ற 27 வயது அமெரிக்கரான ஜான் ஆலன் சாவ், இந்தப் பழங்குடியின மக்களால் கொல்லப்பட்டார்.

அவர் வில் அம்பால் தாக்கப்பட்டார். இந்தத் தீவுக்குச் செல்ல மீனவர்களுக்கு அவர் லஞ்சம் கொடுத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.


இங்கிருப்பவர்களைத் தொடர்பு கொள்ள முயன்ற பல முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன

முக்கிய தீவுகள்

இந்திய ஆராய்ச்சியாளர்கள் சில ஆய்வுகள் செய்துள்ளனர் மேலும் இந்தப் பழங்குடியினருடன் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர்.

1991ல் தேங்காய்கள் போன்ற சில பொருட்களை பரிசாகக் கொடுத்து சைகை மொழியில் பேச முயற்சித்துள்ளனர். ஆனால் சரியான பதில் கிடைக்கவில்லை. இந்தக் காரணத்தால் இதன்பிறகு இந்திய அரசாங்கம் இந்த பயண முயற்சிகளைக் கைவிட்டு வெளிநபர்கள் இந்தத் தீவுக்குச் செல்வதையும் தடை செய்தது.

2004 சுனாமிக்குப் பிறகு, இந்தப் பழங்குடியினர் உயிரோடு இருக்கிறார்களா என்று பார்க்க இந்திய அரசாங்கம் முனைந்தது. ஆனால் இந்தத் தீவுகளின் மீது பறந்த ஹெலிகாப்டர்கள் மீது அங்கிருப்பவர்கள் அம்புகளை எய்தனர்.

இந்திய – பசிஃபிக்கின் முக்கிய கடல் போக்குவரத்து வழிகளுக்கு அருகே வங்காள விரிகுடாவில் இருக்கும் சென்டினல் உள்ளிட்ட இந்தத் தீவுக்கூட்டம் இந்தியாவுக்கு முக்கியமான ஒன்று.
இந்தியக் கிழக்குக் கடற்கரையின் நீட்சியாக இருக்கும் அந்தமான் நிக்கோபார் தீவுகள்


இந்தப் பழங்குடியினரை சந்திப்பதில் உள்ள ஆபத்துக்கள்

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தப் பழங்குடியினர் கிட்டத்தட்ட முழுத் தனிமையில் வாழ்ந்து வருகிறார்கள்.

அப்படியென்றால், சளி, காய்ச்சல் அல்லது அம்மை போன்ற சாதாரண நோய்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளத் தேவையான நோயெதிர்ப்புத் திறன் அவர்களுக்கு இருக்காது.

இந்தக் காரணத்தால், இந்த சமூகத்துக்கு வெளியிலிருக்கும் நோய்களால் இந்த பழங்குடியினரைத் தாக்கக்கூடும் என்ற ஆபத்தால் 1956ம் வருடம் இங்கு செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டது.

இதனால், இந்தப் பகுதிக்குள் மற்றவர்கள் நுழைவதைத் தடுக்க இந்திய கடற்படையினர் இந்தத் தீவைச் சுற்றிக் கண்காணிக்கிறார்கள்.

”இவர்களை நெருங்குவது உயிருக்கு ஆபத்தான விஷயம், ஏனெனில் அவர்கள் வெளிநபர்களை வரவேற்பதில்லை மற்றும் கடந்தகாலத்தில் அப்படிச் செய்ய முயன்றவர்களிடம் விரோதப்போக்கையே காட்டியுள்ளனர்,” என்கிறார் மூலே.

இந்த பழங்குடியினர் வெளிப்படுவது அதிகரித்து வருவது பழங்குடியினர் பாதுகாப்புக் குழுக்களுக்கு கவலையளிக்கும் விஷயமாக இருக்கிறது.

 

Share.
Leave A Reply