ரஸ்யாவிற்காக போரிட்ட இரண்டு சீன படையினர் உக்ரைனின் கிழக்கு பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் தனது படையினர் சீனா படையினருடன் போரிட்டு அவர்களை உயிருடன் பிடித்தனர் என தெரிவித்துள்ள அவர் மேலும் பல சீனர்கள் ரஸ்யாவுடன் இணைந்து போரிடுகின்றனர் என தெரிவித்துள்ளார்.

சீனா இது குறித்து விளக்கமளிக்கவேண்டும் என தெரிவித்துள்ள அவர் இது குறித்து அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் உலகம் முழுவதிலும் உள்ள அமைதியை விரும்புபவர்களும் பதிலளிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐரோப்பாவில் இடம்பெறும் யுத்தத்தில் ரஸ்யாவுடன் சீனாவுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபட்டுள்ளமை புட்டின் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவரவிரும்பவில்லை என்பதற்கான தெளிவான சமிக்ஞை என தெரிவித்துள்ள ஜெலென்ஸ்கி புட்டின் தொடர்ந்தும் போரிடுவதற்கான வழிகளை தேடுகின்றார் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை சீன பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளமையை கவலை தரும் விடயம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சீன படையினர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குழப்பத்தை ஏற்படுத்துகின்றது, உக்ரைனிற்கு எதிரான யுத்தத்தில் சீனாவே ரஸ்யாவிற்கு பெருமளவு உதவிகளை செய்கின்றது,ரஸ்யா போரை நீடிப்பதற்கு அவசியமான 80 வீதமான இரட்டை பயன்பாட்டு பொருட்களை சீனாவே வழங்குகின்றது என அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சீன பிரஜையை காண்பிக்கும் வீடியோவொன்றை உக்ரைன் ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் தனது தளபதி உக்ரைனின் ஆளில்லா விமானதாக்குதலில் காயமடைந்துள்ளதை சீன இராணுவீரர் விபரிப்பதை காணமுடிகின்றது.

உக்ரைன் யுத்தத்தில் நடுநிலை வகிப்பதாக சீனா தெரிவித்தாலும்,யுத்தம் ஆரம்பித்த பின்னர் ரஸ்யாவிற்கு நெருக்கமாக மாறியுள்ளது.

சீனா மொஸ்கோவிற்கு ஆளில்லா விமானங்களையும் அதன் பாகங்களையும் அனுப்புகின்றது என மேற்குலக அதிகாரிகள் நீண்டகாலமாக முறைப்பாடு செய்து வந்துள்ளனர்.

எனினும் சீனா துருப்புகளை நேரடியாக அனுப்புகின்றது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

Share.
Leave A Reply