பொது போக்குவரத்தில் பயணிக்கும் போது, பலரும் பல்வேறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பர். எனினும், பஸ் நடத்துனர் ஒருவர் வித்தியாசமான பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் அமீன் அகமது அன்சாரி. 7 அடி உயரம் கொண்ட இவருக்கு வாரிசு அடிப்படையில் அம்மாநில அரசு பஸ்ஸில் கண்டக்டர் வேலை கிடைத்துள்ளது. 6 அடி உயரம் கொண்ட பஸ்சில் 7 அடி உயரம் கொண்ட கண்டக்டர் அன்சாரி மிகவும் சிரமப்பட்டு பணியாற்றி வருகிறார்.
தினமும் சுமார் 10 மணிநேரம் தலை குனிந்தபடியே அன்சாரி வேலை செய்து வந்தார். இதனால், முதுகு, கழுத்து வலி, தூக்கமின்மையால் அன்சாரி அவதிப்பட்டு வந்தார். இதனிடையே, தனக்கு வேறு வேலை வழங்குமாறு அன்சாரி கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில், அன்சாரியின் கோரிக்கை தொடர்பான தகவல் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியின் பார்வைக்கு சென்றது. இதையடுத்து, அன்சாரிக்கு வேறு பணி ஒதுக்க போக்குவரத்துத்துறைக்கு முதல்-மந்திரி உத்தரவிட்டார். இதனால், 7 அடி உயர அன்சாரிக்கு விரைவில் மாற்று வேலை வழங்கப்படுகிறது. மேலும், முதல்-மந்திரியின் உத்தரவுக்கு அன்சாரி நன்றி தெரிவித்துள்ளார்.