வடக்கு – கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் இணங்குவார்களா?
06 Apr, 2025 | 09:29 AM
image
– ஏ.எல்.நிப்றாஸ்
வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீள இணைப்பது பற்றி அடிக்கடி பேசப்படுவதுண்டு. தமிழ் மக்களின் அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ் அரசியல்வாதிகளும், வெளிநாட்டுச் சக்திகளும் பல வருடங்களாக இதனை பேசி வருகின்றன.
அதன் ஒரு கட்டமாக, இந்தியப் பிரதமர் மோடி இலங்கை வரும் இவ்வேளையிலும் அது குறித்து பேசப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
தமிழீழ கனவு சாத்தியமாகாமல் போய்விட்ட காலகட்டத்தில், தமிழ்ச் சமூகம் அதற்கு இணையான ஒரு ஏற்பாடாக இணைந்த வடகிழக்கை நோக்குவதும் அதில் மீளப் பெறப்பட முடியாத சமஷ்டி தீர்வைக் கோருவதும் அவர்களது உரிமையாகும். இதில் யாரும் தவறு காண தேவையில்லை.
ஆனால், வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற மற்றுமொரு இனமான முஸ்லிம்கள் வடக்கு, கிழக்கை மீள இணைப்பதில் எந்த நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர் என்பது இங்கு முக்கியமானது.
ஒரு தீர்வு என்று வரும்போது இவ்விரு மாகாணங்களில் உள்ள சிங்கள மக்களின் மனநிலையையும் கவனிப்பதே தார்மீகமாகும்.
வடக்கையும் கிழக்கையும் மீள இணைத்து அதில் தமிழ் மக்களுக்கு ஒரு சமஷ்டியை அல்லது தீர்வை வழங்கினால் அதற்குச் முஸ்லிம் மக்களுக்கும் உரிய தீர்வை வழங்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாத நியாயமாகும்.
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை ‘முஸ்லிம்களின் முதுகில் குத்தப்பட்ட அடிமைச் சாசனம்’ என்றுதான் முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால தலைவர்கள் விமர்சித்தார்கள். அக்காலப் பகுதியில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளால், முஸ்லிம்களுக்கான சமஷ்டி, நிலத்தொடர்பற்ற ஆளுகை நிலப்பரப்பு, தனி மாகாணம் என்று பல கருத்தியல்களை எம்.எச். சேகு இஸ்ஸதீன், எம்.ஐ.எம்.மொஹிதீன், எம்.எச்.எம்.அஷ்ரப் போன்றோர் முன்வைத்தனர்.
என்.பி.பி. என்ற பெயரில் இப்போது ஆட்சி அமைத்துள்ள ஜே.வி.பி. கட்சியானது ஆரம்பத்தில் இருந்து இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்து வந்தது. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டதற்கு எதிராக முஸ்லிம் செயற்பாட்டாளரின் மூலம் வழக்கு ஒன்றை தாக்கல் செய்து, வடக்கையும் கிழக்கையும் நீதிமன்றம் பிரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தது.
எனவே, என்.பி.பி. அரசாங்கம் இவ்விரு மாகாணத்தையும் மீள இணைக்க வாய்ப்பில்லை என்று கருதுவோரும் உள்ளனர். எது எவ்வாறாயினும், மாகாண இணைப்பு, சமஷ்டி பற்றி ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் போன்ற முஸ்லிம் தலைவர்களும் ஏனைய அரசியல்வாதிகளும் தொடர்ச்சியாக மௌனம் காத்து வருகின்றமை ஆபத்தான விளைவுகளையே கொண்டு வரும்.
தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய ஓரிருவர் மட்டுமே இது குறித்துப் பேசி வந்தனர். அதிகாரம் இழந்த பிறகு, அரசியல் தேவைப்பாடு குறைந்த பிறகு அது பற்றி பேசுவதை அவர்களும் குறைத்துக் கொண்டதாகவே தெரிகின்றது.
ஆனாலுமென்ன? அப்படியானவர்களைத்தான் முஸ்லிம் சமூகம் தங்களது அரசியல் தலைமைகளாக, பிரதிநிதிகளாக தலையில் வைத்துக் கொண்டாடுகின்றது. என்.பி.பி. மூலம் தெரிவாகியுள்ள முஸ்லிம் எம்.பி.க்களும் இந்த நழுவல்போக்கையே கடைப்பிடிப்பார்கள். அல்லது மேலிடத்து ஏவலுக்கு அமைய பேசுவார்கள். அவ்வளவுதான்.
எது எவ்வாறிருந்தாலும் ஒரு சமூகமாக முஸ்லிம்கள் இவ் விவகராத்தில் தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதுடன் அதனை நேரிடையாக வெளிப்படுத்தவும் வேண்டியுள்ளது.
70 வருடங்கள் போராடி, ஏகப்பட்ட உயிர், உடமை இழப்புக்களைச் சந்தித்த தமிழர்களுக்கு ஒரு தீர்வு வழங்கப்படுவதற்கு முஸ்லிம் சமூகம் குறுக்காக நிற்கக் கூடாது. அதில் எந்த நியாயமும் இல்லை. ஆனால், மறுபுறத்தில், முஸ்லிம்களின் அபிலாஷைகளும் சமகாலத்தில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை மறந்து விடக் கூடாது.
தமிழர்களுக்கான தீர்வுக்குள் உட்கிடையாக முஸ்லிம்களுக்கான ஏற்பாடு அமைய முடியாது. ஏனென்றால், இதனை மூத்த தமிழ்த் தலைவர்கள் பல தடவை ஏற்றுக் கொண்டிருககின்றார்கள்.
விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் ஆயுதக் குழுக்களின் கைகள் ஓங்கியிருந்த காலத்திற்கு முன், பின்னான காலங்களில் தமிழ் தலைவர்கள் ‘முஸ்லிம்களுக்கான ஒரு தீர்வும் அவசியம்’ என்பதை அங்கீகரித்திருக்கின்றார்கள்.
குறிப்பாக, 1956ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் 4ஆவது மாநாட்டில் இணைந்த வடகிழக்கில் தமிழர்களுக்கு ஒரு சுயாட்சி அரசும், முஸ்லிம்களுக்கு ஒரு சுயாட்சி அரசும் அமையும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் அது திருமலை தீர்மானமாக பகிரங்கப்படுத்தப்பட்டது.
1961இல் நடைபெற்ற 9ஆவது மாநாட்டில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமான சம அந்தஸ்துள்ள ஆட்சியை தந்தை செல்வநாயகம் மீள உறுதிப்படுத்தினார்.
1977ஆம் ஆண்டு முஸ்லிம் ஐக்கிய முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியதையடுத்து, அக்கட்சி அவ்வருட தேர்தல் விஞ்ஞாபனத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் ஒரு சுயாட்சி முறை நிறுவப்படுவது பற்றி அக்கட்சி பிரஸ்தாபித்திருந்தது.
யுத்தம் முடிவடைந்த பின்னரும் ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் அக்கம்பக்கம் பார்த்து முஸ்லிம்களுக்கும் தீர்வு வழங்க வேண்டும் என்ற தொனியில் கருத்துக்களை முன்வைத்தனர். ஆனால், அண்மைக்காலமாக சிலபோதுகளில் ‘தமிழ் பேசும் மக்கள்’ என்ற பொதுவான அடையாளப்படுத்தலை மேற்கொள்வதை காண முடிகின்றது, இதன் சாதக, பாதகங்கள முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும்.
சமஷ்டி தீர்வு என்ற விடயம் ஒருபுறமிருக்க, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு என்ற இன்னுமொரு முக்கிய விடயமும் உள்ளது. இது குறித்த முஸ்லிம்களின் நிலைப்பாட்டுகளை முஸ்லிம் தலைவர்கள் வெளிப்படுத்தவில்லை என்பதற்காக முஸ்லிம் மக்கள் இதனை கண்டுகொள்ளவில்லை அல்லது ஆதரிக்கின்றார்கள் என்று தவறாக அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது.
வடக்கையும் கிழக்கையும் இணைப்பதால் சகோதர தமிழ் மக்களுக்கு பல அனுகூலங்கள் உள்ளன. இணைந்த வடகிழக்கில் தமிழர்களின் இனவிகிதாசாரம் அதிகரிக்கும். ஆட்புலம் விஸ்திரமாகும், அரசியல் பலமும் ஒற்றுமையும் மேலோங்கும்.
இது, சமஷ்டியைப் பெறுவதற்கும், எதிர்காலத்தில் சுயநிர்ணயம் ஊடாக நகர்வுகளைச் செய்வதற்கும் வழியாக அமையும். நிழல் மாநில ஆட்சி ஒன்றை நிறுவியதான ஆறுதலும் தமிழ்த் தரப்புக்களுக்கு ஏற்படும்.
ஆனால், வடக்கும், கிழக்கும் இணைக்கப்படுவதால் முஸ்லிம் சமூகத்திற்கு என்ன நன்மை? தமிழர்களோடு இணைந்து பிட்டும் தேங்காய்ப் பூவாகவும் வாழ்வதைத் தவிர, வேறு என்ன பெரிய அனுகூலங்கள் கிடைத்துவிடக் கூடும்?
வடக்கில் தற்போது தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு கிட்டத்தட்ட 5 சதவீத முஸ்லிம்களே வடக்கில் வாழ்கின்றனர்.
ஆனால், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள், தமிழர்களுக்கு சரிசமமாக வாழ்கின்றனர். இப்போது புதிதாக புள்ளிவிபர கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருப்பது கூட தெரியவரலாம்.
இந்நிலையில், வடக்குடன் கிழக்கு இணைக்கப்பட்டால் இணைந்த மாகாணத்தில் முஸ்லிம்களின் இன விகிதாசாரம் குறைவடையவே வாய்ப்புள்ளது. இது பல்வேறு நெருக்கடிகளுக்கு இட்டுச் செல்லும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக, இது பிரதிநிதித்துவ பங்கீடு, அதிகார கையளிப்பு, மேலாதிக்கம் உள்ளிட்ட பல விடயங்களில் முஸ்லிம்களுக்கு பாதக விளைவை ஏற்படுத்தும்.
வரதராஜ பெருமாளை முதலமைச்சராகக் கொண்ட இணைந்த வடகிழக்கு மாகாண சபையில் முஸ்லிம்களும் அங்கம் வகித்த போதும், அக்காலத்திலேயே முஸ்லிம்கள் கடுமையாக தமிழ் ஆயுதக் குழுக்களாலும் அரசியல் தரப்புகளாலும் கசப்பான அனுபவங்களைப் பெற்றுக் கொண்டனர் என்பதே வரலாறாகும்.
எனவே, முஸ்லிம்கள் அந்தக் காலத்து கசப்பான அனுபவத்தோடு வடக்கு-கிழக்கு இணைப்பு பற்றிய கதைகளை தொடர்புபடுத்தி நோக்குகின்றனர். அதாவது, இணைந்த வடக்கு, கிழக்கில் ஆட்சி அதிகாரம் யாரிடம் இருக்கும்? இந்தியா போன்ற நாடுகளின் ஆதிக்கம் எந்தளவுக்கு இருக்கும், முஸ்லிம்களின் நிலைமை என்னவாக மாறும் என்பது குறித்து சிந்திக்கின்றனர். சிந்திக்கவும் வேண்டும்.
வடக்கு – கிழக்கு இணைந்திருந்தது மட்டுமன்றி, ஆயுதக் குழுக்களின் கைகளும்; மேலோங்கியிருந்த காலம் என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அச்சமிகு காலமாக இன்னும் முஸ்லிம்களின் மனதில் உள்ளது.
இவ்விரு மாகாணங்களும் பிரிக்கப்பட்ட பிறகு, நிலைமைகள் மாறின. எனவே, மீண்டும் பழைய கையறுநிலைக்கு திரும்பிச் செல்ல முஸ்லிம்கள் விரும்பவில்லை என்பதே நிதர்சனம்.
இதனை ஹக்கீம், ரிஷாட், அதாவுல்லா போன்ற முஸ்லிம் தலைவர்கள் மட்டுமன்றி முன்னாள் முஸ்லிம் எம்.பி.க்களும் இம்முறை என்.பி.பி. உள்ளிட்ட கட்சிகளில் தெரிவாகியுள்ள முஸ்லிம் எம்.பி.க்களும் இதனை தெளிவாக அரசாங்கத்துக்கும் தமிழ் தரப்பிற்கும் சர்வதேசத்துக்கும் கூற வேண்டும்.
தமிழ்-முஸ்லிம் நல்லுறவையும் இவ்விடயத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்ளத் தேவையுமில்லை. இது ஒரு சமூகத்தின் பிரச்சினை. இதில் பூசிமொழுகவோ – மூடிமறைக்கவோ எதுவுமில்லை.
– ஏ.எல்.நிப்றாஸ்