“தமிழ்நாட்டில் பா.ஜ.க. உட்கட்சி தேர்தல் கடந்த 3 மாதமாக நடந்து வருகிறது. கிளைகள், மண்டல், மாவட்டம் என்று கட்சியின் பல்வேறு மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.கடைசியாக மாநில தலைவர், தேசிய பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்த வேண்டி இருந்தது.

இதற்கிடையில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க தலைவர் பதவியில் அண்ணாமலை நீடிப்பதை அ.தி.மு.க. தலைமை விரும்பவில்லை.

இதனால் கூட்டணியை உறுதிப்படுத்துவதற்கு முன்பு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டது.

நேற்று அமித்ஷா சென்னையில் இருந்த போது கட்சி தலைவருக்கான தேர்தலை மின்னல் வேகத்தில் தொடங்கினார்கள்.

மதியம் 2 மணி முதல் மாலை 4 மணிவரை தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் மனுதாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் கட்சி மேலிடத்தை பொறுத்தவரை நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வை மாநில தலைவராக நியமிக்க முடிவு செய்த விட்டனர்.

எனவே தேர்வு ஒரு மனதாக இருக்க வேண்டும் என்ற மேலிடத்தின் விருப்பம் பற்றிய தகவல் கட்சியினருக்கு தெரிவிக்கப்பட்டது.இதனால் தலைவர் பதவியை எதிர்பார்த்த மூத்த தலைவர்கள் உள்பட யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

நயினார் நாகேந்திரன் மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்ததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.புதிய தலைவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நிகழ்ச்சியும், தேசிய பொதுக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதும் இன்று மாலை 5 மணியளவில் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் கலந்து கொள்ள பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மூத்த தலைவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.

நிகழ்ச்சி தொடங்கிய நிலையில், தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே மனு செய்து இருப்பதாகவும், அவரது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் மாநில தேர்தல் அதிகாரியான சக்கரவர்த்தி அறிவித்தார்.

அதை தொடர்ந்து மேலிட பார்வையாளர் கிஷன் ரெட்டி முன்னிலையில் தேசிய தேர்தல் பொறுப்பாளர் தருண்சுக் தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அறிவித்தனர்.

அதை தொடர்ந்து நயினார் நாகேந்திரன் உறுதி மொழி வாசித்து தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டார்.”,

Share.
Leave A Reply