அஸர்பைஜானின் அதிகம் பேசப்படாத, நிலத்தொடர்பற்ற சுயாட்சி கட்டமைப்பை கொண்ட ஒரு குடியரசாக ‘நக்சிவான்’ உள்ளது. மத்திய ஆசியாவின் மிக பிரதான எண்ணெய் உற்பத்தி நாடான அஸர்பைஜான், முன்னாள் சோவியத் சோசலிச குடியரசின் ஓர் அங்கமாகும்.

நிலத்தொடர்பற்ற ஒரு பிராந்தியமாக உள்ள நக்சிவான், உறுதியான யாப்பு வடிவமும் சச்சரவுகள் அற்ற எல்லையும் ஆக்கிரமிப்பு நோக்கம் இல்லாத மத்திய அரசும் அமைய பெற்றுள்ளதால் உலகில் அதிகம் பேசப்படாத ஒரு சுயாட்சிப்பிராந்தியமாக உள்ளது.

சுமார் 461,500 பேரை மட்டும் சனத்தொகையாக கொண்டுள்ள நக்சிவான், அஸர்பைஜானிலிருந்து ஆர்மேனியாவால் பிரிக்கப்பட்டுள்ளது. சுமார் ஐயாயிரம் சதுர கிலோமீற்றர் மட்டுமே பரப்பளவாக கொண்டது.

இஸ்லாமியர்களை அதிகமாகக் கொண்டுள்ள நக்சிவான் சுதந்திர குடியரசானது 1919களில் ஆர்மேனியர்களால் உரிமை கோரப்பட்ட போதிலும், சோவியத் இராணுவத் தலையீடு காரணமாக அது அஸர்பைஜானியர்கள் வாழும் பிரதேசமாக இனங்காணப்பட்டது.

அன்றைய சோவியத்தின் மத்திய தலைமைப்பீடம், கிறிஸ்தவர்கள் வாழும் ஆர்மேனியாவிடம் நக்சிவானை கொடுப்பதன் பலனாக உள்நாட்டுப் புரட்சிகள் இடம் பெறலாம் என்ற நிலையை உணர்ந்து பொது வாக்கெடுப்பின் அடிப்படையில் நக்சிவான் பிராந்தியம் அஸர்பைஜான் சோவியத் சோசலிச குடியரசின் பிரிக்கப்பட முடியாத சுதந்திர குடியரசு பிரதேசம் என பிரகடனம் செய்யப்பட்டது.

1920 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் மொஸ்கோவினால் அறிவிக்கபட்ட இந்த தீர்மானம் நக்சிவானுக்கு அதிகரித்த சுயாட்சி அதிகாரங்களை பகிர்ந்தளித்தது. உள்ளூர் மதத் தலைவர்களுக்கு உரிய மதிப்பு அளித்த அதே வேளை, நக்சிவான் பாராளுமன்றத்திற்கு அரசியல் அதிக அரசியல் அதிகாரமும் கொடுக்கப்பட்டது.

மேலும் அஸர்பைஜானில் இருந்து நக்சிவான் பிரிந்து செல்ல கூடும் என்ற சந்தேகம் அஸர்பைஜான் அரசாங்கத்திற்கு ஏற்பட முடியாத வகையில் சர்வதேச நடைமுறைகளுக்கு ஏற்ற வகையிலான உள்ளூர் சமூகத்தின் ஒப்புதலுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தம் பல பரிமாணங்களை பெற்றாலும் அடிப்படை சுதந்திர குடியரசு ஒப்பந்தம் சிதைவடையவில்லை .

1990 ஆம் ஆண்டளவில் சோவியத் வீழ்ச்சியின் போது இந்த நிலை ஒரு பெரும் தளம்பலைக் கண்டது. ஆர்மேனியர்கள் இந்த பிராந்தியத்துக்கு மீண்டும் உரிமை கோர முற்பட்டபோது, ஹைடர் அலியேவ் எனும் அன்றைய அஸர்பைஜான் தலைவர் மிகக் கடுமையாக உழைத்தார்.

நக்சிவான் சுதந்திர சோவியத் சோசலிச குடியரசு என்ற பெயரை நக்சிவான் சுயாட்சிக் குடியரசு என்ற பெயருக்கு மாற்றம் செய்து அது நக்சிவான் பாராளுமன்றத்திலும் அசர்பைஜான் பாராளுமன்றத்திலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அதன் ஊடாக மொஸ்கோவும் அஸர்பைஜானும் நக்சிவானும் இணைந்த நிலையில் ஆர்மேனிய உரிமைகோரல்களும் யுத்த முன்னெடுப்புகளும் தோல்வியில் முடிவடைந்தன.

ஒரு வகையில் ஆர்மேனியர்களின் மிரட்டல் நிலை நக்சிவான் சுயாட்சிக் குடியரசை அவசரமாக ஆர்மேனிய கொடியை தமது கொடியாக ஏற்று கொள்ள வைத்தது என்ற ஒரு விவாதம் இருந்தது. எனினும், தமது அடிப்படை இருப்பிற்கான பாதுகாப்பு நலன் என்பதன் பெயரில் நக்சிவான் மக்கள் அசர்பைஜான் தலைவர் ஹைடர் அலியேவ்வை தமது ஏக தலைவராக பிரகடனம் செய்தனர்.

இதன் காரணமாக ஆர்மேனிய இன அழிப்பிலிருந்து தாம் பாதுகாக்கப்பட்டதாக நக்சிவான் பிரதிநிதிகள் இன்றும் கூறுகிண்றனர்.

அஸர்பைஜான் குடியரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நக்சிவான் சுயாட்சிக் குடியரசு , ஒரு சுயாட்சி மாநிலமாக செயற்படுகிறது. இதில் கவனிக்கத் விடயம் என்னவெனில் நக்சிவானுக்கு வழங்கிய இந்த சிறப்பு அதிகாரங்களை தனது வேறு எந்த மாநிலங்களுக்கும் அஸர்பைஜான் வழங்கவில்லை.

பொதுவாக நாட்டில் தனித்துவமான ஒரு பிராந்தியத்திற்கு அதிகாரங்களை வழங்குவதற்காகவே நாட்டை பல மாகாணங்களாக பிரித்து, அனைத்து பிரிவுகளுக்கும் தனித்துவமான பிராந்திய அதிகாரங்கள் போலவே அதிகாரங்களை வழங்குவதன் ஊடாக, அத்தனித்துவமான பிராந்தியத்தை பொதுவான ஒரு பிராந்தியமாக குறிப்பிடும் நிலை சில நாடுகளில் உள்ளது.

ஆனால், அஸர்பைஜான் அரசு நக்சிவானுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தில் அதிக நம்பிக்கை கொண்டதாக இருப்பதை காணக் கூடியதாக உள்ளது. சோவியத் வீழ்ச்சியின் பின்னர் 1995 நவம்பரில் செய்து கொண்ட புதிய அரசியல் திருத்தங்களுக்கேற்ப நக்சிவான் அரசியல் அமைப்பு சட்டத்தினால் கட்டுப்படுத்தப்படுகிறது.

இதற்கு அமைய நக்சிவான் பிராந்தியம் அஸர்பைஜானின் ஒரு பகுதி. நக்சிவான் பாராளுமன்றமே நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதி உயர் சபை ஆகும். அது போல சட்ட அதிகாரமும் தன்னாட்சி குடியரசின் உயர் நீதி மன்றத்தின் கைகளிலேயே விடப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பு சட்டத்திற்கு அமைய தன்னாட்சி குடியரசின் பாராளுமன்ற தலைவரே அதி உயர் தலைவராவார். அதி உயர் தலைவர் பாராளுமன்றத்தால் தெரிவு செய்யபடுவார். அத்துடன் 45 துனை அதிகாரிகளை அதிஉயர் தலைவர் கொண்டிருப்பார்.

மாநகரங்களும் மாநில பிரிவுகளும் பாராளுமன்ற தலைவரின் கீழ் உள்ளன. அதேவேளை, அதி உயர் அதிகாரம் கொண்ட தலைவர் அஸர்பைஜான் ஆட்சித்தலைவரால் நியமிக்கப்படுகிறார். இந்த நியமனம் நக்சிவான் மத தலைவரின் பரிந்துரையின் பெயரிலேயே இடம்பெறுகிறது.

அதேவேளை நகர சபைகளும் கிராம சபைகளும் கூட அதற்குரிய பிராந்தியங்களில் தமது நடவடிக்கைகளை கொண்டு செல்கிண்றன. உள்ளக ரீதியாக நக்சிவான், அஸர்பைஜான் மத்திய அரசுடன் சேர்ந்து இயங்கும் அதேவேளை, தனது பிராந்திய பாதுகாப்பின் தேவை கருதி அஸர்பைஜானின் வெளியுறவுக் கொள்கையுடன் இணைந்து பயனிப்பதையும் காணக் கூடியதாக உள்ளது.

பூகோள அமைவிட ரீதியாக நக்சிவானுக்கும் அஸர்பைஜானுக்கும் இடையிலான பகுதி ஆர்மேனியாவினால் ஊடறுக்கப்பட்டு உள்ளதால் நேரடியாக அசர்பைஜானுடன் நில தொடர்பற்ற நிலையில் நக்சிவான் உள்ளது . இதனால் நக்சிவானுக்கான உணவுப்பொருள் வழங்கல்கள், குடிநீர் தேவைகள் போன்றவற்றிற்கு தனது அயல் நாடுகளில் தங்கி இருக்க வேண்டிய நிலை உள்ளது. இருந்த போதிலும் உலகிலேயே தன்னிறைவான நாடு என்ற பெயரை நக்சிவான் பெற்றுள்ளது.

அரசும் மக்களும் இணைந்து நாட்டின் நீர் பாதுகாப்பையும் உணவுப்பாது காப்பையும் மேம்படுத்தும் திட்டங்களில் கூட்டாக நடைமுறைபடுத்துவதில் செயலாற்றி வருகின்றனர்.

இதுவரை காலமும் சர்வதேச தலையீடுகள் எவையும் இன்றி அமைதி வாழ்வு காணும் நக்சிவான், நேட்டோ அமைப்பின் ஒரு அங்கத்துவ நாடான துருக்கியுடனும் எல்லையைக் கொண்டுள்ளது.

அதேவேளை ஈரானுடனும் எல்லையைக் கொண்டுள்ளது. இருந்த போதிலும் சரியான அரசியல் புரிந்துணர்வும், ஈடுகொடுக்கக் கூடிய அரசியல் நெகிழ்வுத் தன்மையையும் நக்சிவானின் இருப்பை இதுவரை காத்து வருகிறது என்றே கூறலாம்.

ஏற்கெனவே துருக்கி தனது காக்கேசியன் மலைப் பிராந்தியத்தில் பதட்டநிலையை தவிர்த்து கொள்வதற்கு பெருமுயற்சி செய்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் பிரதான எண்ணெய் எரிவாயு குழாய்த் திட்டங்கள் அஸர்பைஜான் எண்ணெய் வயல் பிராந்தியதிலிருந்து துருக்கி ஊடாக மத்திய தரைகடலை நோக்கியதாக உள்ளமையாகும்.

இந்த நிலையில், பிராந்திய பதட்ட நிலையை தவிர்த்துக் கொள்வதில் துருக்கி மிக ஆர்வமாக உள்ளது. இதன் காரணமாக குர்தீஸ் போராளிகளுடனும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடும் நிலையை தற்பொழுது காணலாம்.

சர்வதேச உறவு நிலையில் வல்லரசுகளின் நகர்வுகளும் எவ்வாறான மறுவிளைவை ஏற்படுத்தும் என்று எதிர்வுகூறுவது மிகவும் கடினம் . இதற்கு ஏற்றாற்போல் அண்மையில் துருக்கியுடன் அஸர்பைஜான் செய்து கொண்டுள்ள எண்ணைய் எரிவாயு குழாய் திட்டத்திற்கு இணங்க, துருக்கிய நகரான இக்பீாில் இருந்து நக்சிவானுக்கு புதிய எண்ணெய் எரிவாயு வழங்கல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த காலங்களில் நக்சிவானுக்கான இந்த வழங்கல் ஈரானில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். சிரியாவில் பசர் அல் ஆசாத் ஆட்சி வீழ்ச்சி கண்டதை தொடர்ந்து, ஈரானின் செல்வாக்கு காக்கேசியன் மலைப் பிராந்தியத்தில் வீழ்ச்சி கண்டதாக பூகோள அரசியல் கணிப்புகள் கூறுகின்றன.

இது நக்சிவானின் உள்நாட்டு எரிபொருள் தேவைகளில் பெரும் தாக்கத்தை செலுத்தியதுடன் அஸர்பைஜான் – ஈரான் உறவிலும் தாக்கத்தை விளைவித்தது. மேலும் துருக்கியுடன் புதிய உறவுநிலையை உறுதி செய்து கொள்ளக் கூடிய இராஜதந்திர நகர்வுகளுக்கு காரணமாகியது.

ஆக, உலக அரசியல் நிகழ்வுகள், அமைதியாக இருந்து வரும் பிராந்திய நாடுகளையும் பூகோள அரசியல் சிக்கலுக்குள் இழுத்து விடும் என்பது தவிர்க்க முடியாததாகும். இருந்த போதிலும் காக்கேசியன் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்பதில் பல பிராந்திய வல்லரசுகளும் இதுவரை முயற்சி செய்து வருவதையே காணக் கூடியதாக உள்ளது.

-லோகன் பரமசாமி-

Share.
Leave A Reply