வீட்டாரிடம் தெரிவிக்காமல் ஹட்டன் வீதி வழியாக சிவனொளிபாத மலைக்கு யாத்திரை வந்த 16 வயதுடைய பாடசாலை மாணவன் மற்றும் மாணவி, பொலிஸாரால் ஹட்டன் பதில் நீதவான் எஸ். கருணாகரன் முன்னிலையில் ஆஜர்படுத்தி அவரின் உத்தரவுக்கமைய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்றுள்ளது.
எல்பிட்டிய பகுதியிலிருந்து ஹட்டன் வீதி வழியாக சிவனொளிபாத மலைக்கு யாத்திரை வந்த குறித்த இருவரும் காதலர்கள் என தெரியவந்துள்ளது.
ஹட்டன் நகரில் சுற்றித்திரிந்த அவர்களை ஹட்டன் பொலிஸார் கைது செய்து விசாரித்த போது, இருவரும் தங்கள் வீடுகளுக்கு தெரிவிக்காமல் சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வந்ததாக ஹட்டன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் குறித்து ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் எல்பிட்டிய பொலிஸாரிடம் விசாரித்த போது, குறித்த மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக அவர்களுடைய பெற்றோர் பொலிஸில் புகார் அளித்ததை அவர்கள் உறுதிப்படுத்தினர்.
பின்னர் குறித்த மாணவர்களின் பெற்றோரையும் ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து மாணவர்களை ஒப்படைத்த போது, மாணவி தனது பெற்றோருடன் வீட்டிற்கு செல்ல மறுத்ததால், ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் குறித்த இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்